Monday, October 20, 2008

பசப்புநிலை தவறிய போதையில்
குறைந்த வெளிச்சத்தில்
ஒளிர்ந்தவளை அழைத்து வந்தேன்
இப்போது வெளிச்ச ஒளிர்வில்
அவள் இருட்டியிருந்தாள்
நீள மறுக்கும் குறியினை
மறைத்து
கவிதை சொன்னேன்
நானொருத் தனிமைப்பறவை
தீராத இவ்விரவினை துணையோடு விரட்ட
அழைத்து வந்ததாய்
வார்த்தைகளைத் தூவினேன்
அவளறியா வண்ணம் அவள் தோழிகளின்
எண்களைத் திருடிக்கொண்டேன்
அதிகாலையில் பணமில்லாமல்
போனதாய் பதபதைத்தேன்
அடுத்த வார இறுதியில் தருவதாய்
சத்தியமிட்டேன்
இணைப்பாய் நெற்றியில்
முத்தமிட்டேன்
இதுவரைச் சந்தித்திராதவன் நீயென
நெகிழ்ந்து விடைபெற்றாள்
இரண்டு வாரம் கழித்து
தொலைபேசி
என் பிறப்பைச் சந்தேகித்தாள்
நான் சத்தமாய் சிரித்துக்கொண்டேன்..

Saturday, October 18, 2008

புத்தக வாசம் - சில பதில்கள்

எந்தத் தொடர்பதிவென்றாலும் சலிக்காமல் பதில் சொல்வதிலுள்ள ஆர்வம் இன்னும் தீர்ந்தபாடில்லை.கேள்விகள் சற்று அதிகம்தான் இருப்பினும் பகிர்வதற்கு உகந்த கேள்விகள் என்பதால் லேகாவினைத் தொடர்ந்து என் பதில்கள்..

1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது? எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?

படக்கதைகள்,சிறுவர் புத்தகங்கள் இவற்றிலிருந்து ஒன்பது வயதில் வெளிவந்தாயிற்று.ஏதோ ஒரு க்ரைம் நாவல் ராஜேஷ் குமாரினுடையது பெயர் நினைவிலில்லை.
ஆனால் முதல் நாவல் வாசித்த திருப்தி எனில் பொன்னியின் செல்வன்.

2. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?

அதிகம் பூச்சுக்களில்லாத நாவல்கள் மிகப்பிடித்தமானதாய் இருக்கிறது.அகம் சார்ந்து எழுதப்பட்ட, வினோத நிலைகளின் உள்புகுந்து எழுதப்பட்ட நாவல்களைப் பிடிக்கிறது.சந்தித்திராத மனிதர்கள்,புதிய சூழல்கள், முகத்திலறையும் வாழ்வு, என உண்மைத் தன்மைக்கு நெருக்கமான நாவல்களே மிகப் பிடித்தமானதாய் இருக்கின்றது.

3. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?

ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்தினுக்கு தாமாகவே கூட்டிச் செல்லும்.இந்த வினோதத்தை எல்லாரும் உணர்ந்திருக்கலாம்.உண்மையில் புத்தகங்கள் விதைகளையொத்தவை. ஒன்றிலிருந்து இன்னொன்றாய், இன்னொன்றிலிருந்து பன்மடங்காய், வாசகனைப் பெருக வைக்கும் விசை புத்தகங்களுக்கு இருக்கிறது.

4 நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

சிறுகதை என்பது ஒரு காட்சி ஒரு நிகழ்வு.நாவலென்பது பல காட்சி பல நிகழ்வு். பக்க அளவுகள் சிறுகதை அல்லது நாவல்களை நிர்ணயிப்பதில்லை,உள்ள்டக்கமே வடிவத்தை தீர்மாணிக்கிறது. மூன்று வரி சிறுகதைகளும் உண்டு முன்னூறு பக்க சிறுகதையும் உண்டு.கோபி கிருஷ்ணனின் மொத்த சிறுகதைகளும் ஒரே நாவலின் பல்வேறு பக்கங்கள் என அறியப்படலாம்.ஒரே தளம் கொண்டு எழுதிய டேபிள்டென்னிஸ் நாவலெனவே அறியப்படுகிறது.

5. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?

வாசகனைப் பொருத்துதான்.உதாரணத்திற்கு மோகமுள்ளின் மய்யப் பாத்திரம் பாபு வா? யமுனாவா? ரங்கண்ணாவா? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வையிருக்கலாம்.அப்படிப் பன்முக சாத்தியங்களை உருவாக்குபவையே சிறந்த படைப்புகளாக இருக்க முடியும்

6. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

பக்க அளவுகள் எதையும் தீர்மாணிப்பதில்லை

7. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?

ஒரு நாளை ஓட்டிவிடலாம் எனத் தோன்றும்

8. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?

இல்லை.

9. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?

நண்பகல்,பின்னிரவு

10. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?

நிறைய உண்டு ஒரு கட்டத்திற்கு மேல் சில எழுத்துக்களின் மீது ஆர்வம் போய்விடும் படிக்கலாம் என வாங்கி பாதி படித்து தூக்கி போட்ட புத்தகங்கள் ஏராளம்.சமீபத்தில் புலிநகக் கொன்றை.

11. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?

கொற்றவை,உபபாண்டவம்

13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?

எம்.வி.வெங்கட்ராமின் நித்யகன்னி,தமிழவனின் வார்ஸாவில் ஒரு கடவுள்,அ.மாதவனின் கிருஷ்ணப்பருந்து

14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?

இடைவெளி - எஸ் .சம்பத்

டேபிள் டென்னிஸ் - கோபிகிருஷ்ணன்

நவீனன் டைரி - நகுலன்

அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்

ஏறு வெயில் - பெருமாள் முருகன்

அஞ்சலை - கண்மணி குணசேகரன்

வெக்கை - பூமணி்

கருக்கு - பாமா

பச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம்

சொல் என்றொரு சொல் - ரமேஷ் ப்ரேம்

15. படித்ததில் பிடித்த பிற இந்திய மொழி நாவல்கள் எவை?

காட்டின் உரிமை - மகேஸ்வேதா தேவி
பால்ய கால சகி - வைக்கம் முகம்மது பஷீர்
தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரன் பிள்ளை
சதத் ஹசன் மண்ட்டோ கதைகள்
Interpreter of Maladies – Jumbha lahari

16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?

நூற்றாண்டுகால தனிமை - மார்க்வெஸ்
கசாக்குகள் - லியோ டால்ஸ்டாய்
மரணவீட்டின் குறிப்புகள் - தஸ்தாயெவ்ஸ்கி
அந்நியன் - ஆல்பெர் காம்யூ
தாய் - கார்க்கி
Foucault's Pendulum - Umberto eco
A Message in a Bottle - Nicholas Sparks
விசாரணை -காப்கா
விழியின் கதை - ழார் பத்தாய்

17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?

தரையில் இறங்கும் விமானங்கள், செம்பருத்தி, மரண வீட்டின் குறிப்புகள்,கரையோர முதலைகள்,மரக்கால்,ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன, கூளமாதாரி,சதுரங்க குதிரைகள்,உள்ளேயிருந்து சில குரல்கள் என மிக நீளமான பட்டியல்

18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?

நிறைய தலைப்புகள் ஈர்த்ததுண்டு.கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள் ரமேஷ் ப்ரேமின் இந்த தொகுப்பின் தலைப்பு என்ன வெகுவாய் ஈர்த்தது.மேலும் மனுஷ்ய புத்திரனின் என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் தலைப்பும் எனக்கு மிகவும் பிடித்தது.

19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.

ஆரம்ப காலத்தில் இருந்தது. நா.பா வின் குறிஞ்சி மலர் படித்து சத்திய மூர்த்தியைப் போல ஆசிரியனாக ஆசைப்பட்டேன்.பின்பு நாவல்களின் பெண்கள் என்னை வசீகரிக்கத் துவங்கினர்.
நினைவுகளில் பெண்களை புகுத்திக் கொள்வது கனவுத் தன்மையை கெடாமல் வைத்திருந்தது.முதலில் காதலிக்க ஆரம்பித்த பெண் குறிஞ்சிமல்ர் பூரணி. பின் மோகமுள் யமுனா, மரப்பசு அம்மிணி, பாலகுமாரனின் நாயகிகள் என கனவிலேயே உழல துணையாய் இருந்தனர்.வாசிப்பு விரிவடைய அந்த உணர்வுகள் காணாமல் போய்விட்டன. இது ஒருவகையில் இழப்பாக இருந்தாலும் நிகழின் தளத்திற்கு வந்தேயாகவேண்டிய நிர்பந்தங்கள் என்னை அந்த தளத்தில் தொடர்ச்சியாய் இயங்கவிடவில்லை.

20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?

சூழல்,வாழ்வுமுறை, மனிதர்கள் என வெவ்வேறு தளங்களின் பரிணாமங்கள், புதுமை மனநிலைக்கு வாசகனை தள்ளும் சாத்தியங்கள் தமிழை விட பிற மொழிகளில் அதிகம்தான்.மரபு ரீதியிலான கட்டுக்கள் தமிழில் அதிகம் உண்டு.இருப்பினும் சரியாய் கவனிக்கப்படாத அபூர்வமான நாவல்கள் தமிழில் ஏராளம்.எல்லா இலக்கியச் சூழலும் அரசியலுக்குட்பட்டதுதான் என்றாலும் தமிழ்சூழலின் அரசியல் மிக மோசமானது. அபூர்வங்களை,புதுமைகளை இருட்டடிப்பு செய்துவிடுவது தொடர்ந்து வரும் சோகம்.ஆனால் வேறெந்த மொழிகளிலுமில்லாத அகநிலை சார்ந்து எழுதப்பட்ட உன்னத படைப்புகள் தமிழில் ஏராளம்.

21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?

இடைவெளி,டேபிள்டென்னிஸ்,புயலிலே ஒரு தோணி,நாளை மற்றுமொரு நாளே,பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்

22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?

ரத்த உறவு,குள்ள சித்தன் சரித்திரம்,அஞ்சலை,மோகமுள்,கோபல்ல கிராமம்,ஏழாம் உலகம்

23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?

இதையெல்லாம் நாம் தீர்மானிக்க இயலாது ஆனால் வட்டார வழக்கில் எழுதப்படுபவை மிகக்குறைவானவையே விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை பதிவிக்கும் முயற்சிகளும் வெகு சொற்பமே.இத்தள உரையாடல்கள் மிக முக்கியமானவை இவை அதிகம் எழுதப்படுமெனில் எனக்கு மகிழ்ச்சியே.

24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?

தமிழின் பெரும்பாலான எழுத்தாளர்கள் குறிப்பிட்ட சாதியினரே அல்லது மேல் மட்ட வர்க்கத்தினரே.எழுத்து மட்டுமில்லாது மற்ற தளங்களிலும் இவர்களின் ஆளுமை அதிகமாய் விரவிக்கிடந்ததை நாம் உணர்ந்திருக்கலாம்.தமிழ்சூழலைப் பொருத்தவரை சாதீயத்தின் பிடியில் அல்லது மேல்மட்ட மனோபாவத்தில் பெரும்பாலான நாவல்கள் எழுதிக் குவிக்கப்பட்டுள்ளன.தி.ஜா விலிருந்து லா.ச.ரா வரையிலான பெரும்பான்மை உயர்குடிகளின் தளம் நிறைவேறாக் காமத்திலிருந்து வெளிவரவே இல்லை.அந்த தளத்திலியே அவர்கள் எழுத்தின் மிக அபூர்வ சாத்தியங்களை உருவாக்கிக் காட்டினார்கள் என்றாலும்.பிற மனிதர்களின் வாழ்வியல் குறித்தான எந்த ஒரு அணுசரனையும் இவர்கள் எழுத்துக்களில் இல்லை.இதிலிருந்து ஓரளவுக்கு வெளிவந்து புதிய சாத்தியங்களை உருவாக்கி காட்டியதில் நகுலனுக்கு மிகப்பெரும் பங்குண்டு எனினும் இந்த மய்ய நீரோட்டத்தில் பங்கெடுக்க முடியாத நிலைக்கு அவரையும் தள்ளியது இவர்களின் உயர்குடி சமூகம்.

25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?

கோபிகிருஷ்ணன் உயிரோடு இருந்திருந்தால் சந்தித்து இருக்கலாம் மற்றபடி நகுலனையும் சிங்காரத்தையும் சந்திக்கும் ஆசையிருந்தது

26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?

நாவல்களைப் பொருத்தது பெரும்பாலான புத்தகங்கள் ஒரே இரவில் படிக்கப்பட்டவையே.

27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?

யூமா வாசுகி,யுவன் சந்திரசேகர்,சாரு நிவேதிதா,கோணங்கி,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன்

28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?

ஜெயமோகனின் எல்லா கதைகளிலுமான பிரதான பாங்கு இந்த தன்னிருத்தலே.இது முதல் வாசிப்பில் பிடிபடாது போகலாம் சில புரிதல்களோடு மீண்டும் அணுகுகையில் அதன் வீச்சம் தாங்கொணா அசூசையை ஏற்படுத்துகிறது.சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகளில் தென்படும் தன்னிருத்தலைக் குறித்து சாரு நிவேதிதா எழுதிய விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை.

29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.

நாயகத் தன்மை வழக்கமே இல்லாத எழுத்துக்கள் கோபியினுடையது.கோணங்கின் மொழியிலும் இந்த வழக்கமான தன்மைகளை காணவியலாது.கி.ரா வின் கதைகளிலும் ஒற்றைத் தன்மை கொண்ட நாயக குணங்கள் இருக்காது பல்வேறு மனிதர்களின் அல்லது ஒரு சமூகத்தின் வாழ்வை இயல்பு குலையாமல் பதித்தவர்களில் கி.ரா முதன்மையானவர்.

30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?

இல்லை வடிவங்கள் ஒருபோதும் உன்னதங்களை தீர்மாணிப்பதில்லை.

31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?

கண்மணி குணசேகரனின் அஞ்சலை.

32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?

நாம் ஒரு நாவல் எழுத வேண்டுமென்ற எண்ணம் உண்டு.

33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?

எப்போதும் விழிப்பாய் இருக்கும் சோம்பலினால்தான்.

இதை இவர்கள் தொடரலாம்

நிறைய புத்தகங்கள் வாசிக்கும் தமிழ்நதி மற்றும் நதியலை
அமீரக இலக்கியவாதிகள் கதிர் மற்றும் சென்ஷி

எழுதக் கேட்ட லேகாவிற்கும் உஷாவிற்கும் நன்றி..

Thursday, October 16, 2008

பெண்கள்பசுந்தளிர்களில் விலகிச் சிதறும் நீர்த்திவலைகள்
அவளுக்குப் பிடித்தமானதாய் இருக்கலாம்
மேகங்களற்ற வானில் தனித்தலையும் பறவை
அவளின் ஆதர்சக் குறியீடாய் இருக்கலாம்
பள்ளத்தாக்கின் மெளனத்தில் புதைந்தபடி
காற்றெழுப்பும அந்தராத்மாவின் இசையில்
கரைந்து போயிருக்கலாம்
நதியின் கரங்களென விரிந்த
எழுச்சிகளை
ஒருபோதும் சொல்லிடாதிருக்க வேண்டும்
சொல்லப்படுபவைகளின் உன்னதங்கள்
நிறமழிந்து போவதின் விந்தைகள்
அவளுக்கும் புரிந்திருக்கலாம்...

*******************************

பயணங்களில் சூழும் பிறழ்வுகள்
அடர்சிவப்பின் பின்புலத்தைக் கொண்டுள்ளன
ஒற்றை முலை கொண்டவளொருத்தியின்
வெடிச்சிரிப்பில் அஞ்சி
காதுகளைப் பொத்திக்கொண்டேன்
உச்சந்தலையில் பள்ளம் விழுந்த இன்னொருத்தி
வாய் ஓயாது சாபங்களைத் தந்துகொண்டிருந்தாள்
அழுத்தம் தாங்காது விலகத் துணிகையில்
இருவரையும் இடக்கையால் புறந்தள்ளி
கனமுலைகளை முன் நிறுத்துகிறாள்
பாஸோலினியின் கிராமத்து அழுக்குப் பெண்
இப்போது பின்புலங்கள்
சிவப்புதிர்த்து சாம்பலுக்குத் தாவுகின்றன..

*****************************************

பேச்சுக்குமிழியின்
முட்டைகளுடைத்தவனுக்கு
எனது முத்தங்கள்
திரையின் பின்னாலிருந்து
மொழியுமிழ்தலென்பது
சுய புணர்வையொத்தது
பேச்சுக்களற்ற வெளி அபாயகரமானதென
எவன் சொன்னது
மெளனங்களின் உன்னதங்கள்
கலவியின் கூட்டினை திறக்கவல்லது...

Monday, October 13, 2008

தமிழ் சினிமா இன்னுமொரு தொடர்

சினிமா தொடர் பதிவுகளை தவிர்க்கும் பொருட்டே (எல்லாரும் சொல்லியவையே என்னுடைய பதிலாகவுமிருக்கும் என்கிற காரணத்தினால்)சென்ற பதிவில் சில தமிழ்சினிமா நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு தப்பித்து விட நினைத்தேன். நண்பர்கள் பரத்தும் சித்தார்த்தும் அழைத்ததும் வேறுவழியில்லாமல் இதோ .....

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஏழு வயதில், என் கிராமத்தினையடுத்த பக்கத்துச் சிறுநகரத்திற்கு என் சகோதரனுடனும் அவரின் நண்பர்களுடனும் மிதிவண்டியில் சென்றது நிழலாடுகின்றது.பார்த்த படம் நீங்கள் கேட்டவை காட்சிகள் எதுவும் நினைவிலில்லை ஆனால் அந்த நிலாக்கால இரவில் முன் கம்பியில் உட்கார்ந்து பயணித்தது சுகானுபவம்.விழிநிறை தூக்கத்தோடு, மெல்லிய குளிரும், பேய் குறித்தான பயங்களோடும் திரும்பி வந்தது இன்னமும் நினைவிலிருக்கிறது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

இராமன் தேடிய சீதை வேண்டிய மட்டும் முன்பதிவில் வாரிவிட்டதால் விமர்சனம் எதுவுமில்லை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

பார் மகளே பார் போன மாதம் விடுமுறைக்குச் சென்றபோது என் வீட்டில் பார்த்தது. வீம்பும் கர்வமும் கொண்ட பணக்கார சிவாஜி,தியாக விஜயகுமாரி,எந்தக் காட்சியில் வில்லனாக மாறுவரோ என பதபதைத்துப் பார்க்கச் செய்து, கடைசிவரை நல்லவராகவே நடித்திருந்த நடிகவேள் எம் ஆர் ராதா,இளம் வயதிலேயே முதியவராகவே நடித்த பாவம் வி.கே ராமசாமி என எல்லாரையும் ரசித்தேன் 'நீரோடும் வைகையிலே' உள்ளிட்ட அற்புதமான பாடலகள். படம் மிகவும் பிடித்திருந்தது.மிகவும் திருப்தியாக உணர்ந்தேன்.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பூவே பூச்சூடவா,இப்போதும் ஜேசுதாஸின் குரலில் அந்த பாடல் என்னமோ செய்கிறது.மிகச்சிறிய வயதிலேயே காதலிக்கத் தூண்டிய நதியா, அந்த மறக்கவே முடியாத மணியோசைச் சிறுவர்கள், என முதன்முதலில் என்னை ஈர்த்த தமிழ்படமிது.அடுத்ததாய் குணா கிட்டத்தட்ட பைத்திய மனநிலைக்கு என்னை இட்டுச் சென்ற படமிது.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஷோபா,சில்க ஸ்மிதா இரண்டுப் பேரழகின் தற்கொலைகள்.ஷோபாவின் தற்கொலைக்கு காரணமாய் நான் நினைத்திருந்த பாலுமகேந்திராவின் மீது கோபமுமிருந்தது.ஆனால் சமீபத்திய பாலுவின் அனுவுடனான பேட்டியில் பாலு இப்படி சொல்லியிருந்தார்.யாருக்குமே கெடைக்காத அபூர்வமான, அற்புதமான, அழகான ஒரு பொண்ணு என் வாழ்க்கைல கொஞ்ச நாள் வந்திட்டு போய்ட்டா... அந்த பிரிவை என்னால தாங்கிக்கவே முடியல ....மூன்றாம் பிறைல நான் சொல்லியிருந்த அந்த பிரிவுத் துயர் என்னோட துயரங்களில வெகுசொற்பம்தான் என சொல்லியபோது பாலுவை இன்னமும் அதிகமாக நேசிக்கத் துவங்கினேன்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் இதயத்தை திருடாவில் ஒரு காட்சி வரும்.உன் மடில படுத்துக்கவா எனக் கேட்கும் நாயகியை நாயகன் மார்போடு அணைத்தபடி கட்டிலில் அமர்ந்திருப்பான் பனிப்புகை அந்த அறையை மெல்ல சூழும். இந்த காட்சி என்னால் வெகு காலத்திற்கு மறக்க முடியாதிருந்தது.மற்றபடி நானொரு ஒளிப்பதிவு ரசிகன்.பாலுவின் கேமராவிற்கு அதிதீவிர ரசிகன்.நீங்கள் கேட்டவை பிள்ளை நிலா பாடல் ,உதிரிப்பூக்கள் அழகிய கண்ணே பாடல் இவ்விரண்டையும் அற்புதமான திரைக்கவிதை என்பேன்.ஒளிப்பதிவு தாண்டிய தொழில் நுட்பமெனில் மணியின் ஆயுத எழுத்து எடிட்டிங்க் உத்தி, அலைபாயுதே உத்தி, கமலின் விருமாண்டி எடிட்டிங்க் உத்தி என நினைவில் நிற்கும் பல தொழில் நுட்பங்கள் தமிழில் உண்டு.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

உண்டு, ஆனால் தமிழில் தமிழ் சினிமா குறித்தான நல்ல விமர்சனங்கள் வருவதில்லை.பெரும்பாலான விமர்சனங்கள் ஒருதலைப்பட்சமானது அல்லது தட்டையானது அல்லது மேம்போக்கானது.எம்.ஜி.சுரேஷ்,சாரு,யமுனா ராஜேந்திரன் போன்றோர்களின் தமிழ்சினிமா விமர்சனங்கள் மிகப்பெரும் எரிச்சலைத் தந்தன.

7. தமிழ்ச்சினிமா இசை?

எனக்குத் தெரிந்த ஒரே இசை தமிழ்சினிமா இசைதான்.பெரும்பாலான தனிமையை, இரவுகளை, பதின்மக் காதலை, கனவுகளைத் தந்தது இளையராசாவின் இசைதான்.மற்றபடி மென்மையான பாடலை யார்தந்தாலும் அவர்கள் என் நேசத்திற்குரியவர்கள்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

இந்திய சினிமாவில் மலையாளம்,வங்காளம்,இந்தி மொழிப்படங்களின் பரிச்சயம் உண்டு.உலகப்படங்களில் சிலவற்றைக் குறிப்பிட வேண்டுமெனில் கதறி அழச் செய்த Children of Heaven,Life is Beautiful குரூரத்தையும் வினோதத்தையும் ஒருங்கே தந்த Purfume,வாழ்வின் மீது மிகப்பெரும் சலிப்பை ஏற்படுத்திய Bicycle theif,பைத்தியம் பிடிக்க வைத்த Mirror,Solaris,I Could read the sky நெகிழச்செய்த Cinema paradiso,Amilie,Cindrella man,Forrest gump, கிளர்வுகளைத் தூண்டிய A Short Film about Love, வியப்புகளைத் தந்த Dreams பயமுறுத்திய Birds எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பேரரசு,விஜய்,அஜித் இன்னபிற புரட்சிபட்டங்களை சுமந்து திரியும் பாலாபிசேக நாயகர்களை வைத்துக்கொண்டு பிரகாசமாய் இருக்கும் எனச் சொல்ல தயக்கமாய் இருக்கின்றது.அபூர்வமாய் வருடத்திற்கு இரண்டு படங்கள் வரலாம் வணிகம், கலை என இருவேறு பார்வைகளை களைந்து கலை என்கிற ஒரே பார்வையை பார்வையாளனும், பிரதானமானவனும் கொள்ளாதவரை தமிழ்சினிமாவின் எதிர்காலம் நீர்க்குமிழியை ஒத்ததுதான்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு ஒன்றுமில்லை. வலைப்பதிவர்கள் பதிவிட திண்டாடிப்போகலாம்.மொக்கைப்பட மொக்கை விமர்சனங்களை படிப்பதிலிருந்து நானும் தப்பித்துக்கொள்வேன்.தமிழர்களின் நிலை கவலைக்கிடம்தான்.

இத்தொடரினை தொடர நான் அழைப்பவர்கள்.....

இயக்குநர் வளர்மதி
தமிழ் சினிமா பிரமுகர் ஆடுமாடு
பதிவே போடாத பைத்தியக்காரன்
பெங்காலி சினிமா நிர்மலா
இலக்கியவாதி லேகா

Saturday, October 11, 2008

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை,தமிழ் சினிமா மற்றும் புகைநெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை..

இரண்டு நாட்களாக இந்த பாடல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.ஏதோ ஒரு வசீகரம் இப்பாடல் முழுக்க நிரம்பி வழிகிறது.எவருமற்ற இத்தனிமையில் திரும்பத் திரும்ப இப்பாடலில் கரைந்து போகிறேன்.திடீரென எல்லாவற்றையும் பூஜ்ஜியத்திலிருந்து துவங்கியாயிற்று.புதிய சூழல், புதிய வாழ்வென நாட்கள் சிறகுமுளைத்துப் பறக்கின்றன.தொடர்ச்சியாய் என் தகவமைப்பை மாற்றிக்கொண்டேயிருக்கிறேன்.இதுவரை பதினைந்து மாதங்களுக்கு மேல் ஒரே விதமான வாழ்வுச் சூழலில் இருந்ததில்லை.பிடித்தோ பிடிக்காமலோ மாறிக்கொண்டேவிருக்கிறது நிகழ்.ஒருவகையில் இது சவாலாக, சுவாரசியமாக நாட்களை நகர்த்த உதவுகிறதுதான் என்றாலும் நிலைத்தன்மையின் மீது, ஒரே விதமான வாழ்வுச் சூழலின் மீது, கவர்ச்சியை, ஏக்கத்தை இப்புதிய, பழகிடாத சூழல்கள் ஏற்படுத்த தவறுவதில்லை.ஏதோ ஒன்று பிடிபடாது நழுவிக்கொண்டே செல்கிறது. எப்போதைக்குமான ஒன்று என்பது சாத்தியமே இல்லை போல.எல்லாரிடத்தும், எப்போதும், எவராலும், எதுகொண்டும், நிரப்பி விட முடியாத வெற்றிடங்கள் இருக்கிறதுதான் போலும்.வெற்றிடங்கள் இதுவெனத் தெரிந்து அதை நிரப்பிட முனைகையில், எங்கிருந்தாவது வெளிப்படுகிறது இன்னொரு வெற்றிடம்.தேவைகளின் தன்முனைப்பின் பருத்த பெருநிழல் வாழ்வின் மீது மிகச் சாதுவாய் படர்ந்திருக்கிறது.நிழல்களை துரத்திச் சலிக்கும் நாளொன்றிலிருந்து விடுபட இது போன்ற பாடல்கள் மிக உதவியாய் இருக்கின்றன.தமிழனுக்கு தமிழ்சினிமா பாடல்களே மிகப்பெரிய இசை என்பதை தவிர்க்கமுடியாது.பதின்மங்களில் இரவை நிரப்பிய பாடல்கள் இன்னமும் விடாது வாழ்வை நிறைத்துக்கொண்டிருக்கின்றன.இப்பாடலுக்கு பின்புலமான அனைவருக்கும் நன்றி.

ஊருக்கு போய் சுமாரான தமிழ்படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்தேன்.திருவண்ணாமலை போன்ற சிறு நகர திரையரங்குகளில் பகல் காட்சிகள் மட்டுமல்லாது மாலைக் காட்சிகளும் காலியாகத்தானிருக்கின்றன.இடை இடையே மின் வெட்டுக்கள் வேறு.திரையரங்குகளின் அந்திமக்காலம் இதுவோ என்கிற எண்ணங்களும் எழுந்தன.ஜெயங்கொண்டான்,பொய் சொல்ல போறோம்,சரோஜா மூன்றுமே ஏமாற்றமில்லாமல் இருந்தன.ராமன் தேடிய சீதை உச்சகட்ட எரிச்சலைத்தான் கிளப்பியது.சேரன் டயலாக் பேசும்போது வேண்டுமென்றே வாயைக் கோணிக்கொள்கிறாரா? அல்லது வாய் கோணும்படியான டயலாக்குகளையே வசனகர்த்தாக்கள் எழுதித் தொலைக்கிறார்களா என்கிற சந்தேகமும் எழுந்தது.யதார்த்த நாயகன் சேரன் படங்களில் கதாநாயகி கதாநாயகனை நிராகரித்து விட்டால் அல்லது பிரிந்து சென்றுவிட்டால் அவளது வாழ்வு நாசமாய் போகும்.ஆட்டோகிராபில் கோபிகாவின் கணவரை கொல்லும் நாயகன் இதில் நடிப்பை மட்டும் ஏற்றிருப்பதலோ என்னமோ இவரை நிராகரிக்கும் பெண்ணின் கணவரை ஜெயிலுக்கு அனுப்புவதோடு நிறுத்திக் கொள்கிறார்.பொய் சொல்ல போறோம் மிகவும் பிடிந்திருந்தது.மெளலியின் நடிப்பு மிகச்சிறப்பாய் இருந்தது.தமிழில் நகைச்சுவை படங்கள் என்றால் பிரதான கதையின் இடைச்சொருகல் மாத்திரமே என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைகளை இன்னும் நாம் களையத் தயாராய் இல்லை.காமெடியன்கள் என்ற சொல்லையே தகுதி குறைவான அல்லது கதாநாயக நாயகிகளுக்கு அடுத்த பட்ச கடைசி தரத்தைத்தான் நாம் தந்து கொண்டிருக்கிறோம்.சிறந்த நகைச்சுவை படங்கள் தோல்வியைத் தழுவுவது சோகமானது.ஜெயங்கொண்டானில் சம்பத்தின் மனைவியாக வரும் பூங்கோதை கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது.கதையம்சத்தோடு படங்கள் வருவது அரிதான சூழலில் ஜெயங்கொண்டான் போன்ற படங்கள் வரவேற்கத் தகுந்தவையே.குறிப்பாய் பெண்களை நடிக்கவும் வைக்கலாம் என்கிற சிந்தனை இயக்குனருக்கு இருந்தது ஆறுதலானது.பூங்கோதை,லேகா,பாவனா என எல்லாரையும் நடிக்கவைத்த இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

நாகார்சுனன் தொடங்கி லக்கி வரையிலான சினிமா பதிவுகளை படித்துக்கொண்டிருக்கும்போது நான் பார்த்த முதல் தமிழ் படம் எதுவென யோசிக்கையில் குறிப்பாய் எதுவும் நினைவில் வரவில்லை.என் தந்தைவழிப் பாட்டி அதிக சினிமா பார்க்கும் பழக்கம் கொண்டவர்.எப்போது சினிமாவிற்கு போனாலும் நானும் உடன் ஒட்டிக்கொள்வேன்.வீட்டிற்கு அருகிலிருக்கும் கீத்து கொட்டாயில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாறும் எல்லா படங்களையும் பார்த்திருந்தேன்.நினைவுகளை விரட்டிப் பார்த்தும் எதுவும் நினைவில் வரவில்லை.என் சொந்த கிராமத்திலிருக்கும்போது பார்த்த நீங்கள் கேட்டவையாய் இருக்கலாம்.பெரும்பாலோனோர் குறிப்பிட்டிருந்தது போல எனக்கும் அவள் அப்படித்தான் மஞ்சு மறக்கமுடியாத கதாபாத்திரம்.இது தவிர்த்து உதிரிப்பூக்கள்,தண்ணீர் தண்ணீர்,அச்சமில்லை அச்சமில்லை,முள்ளும் மலரும்,அழியாத கோலங்கள்,என் உயிர் தோழன் என மகேந்திரன் பாலுமகேந்திரா,பாலச்சந்தர் பாரதிராஜாக்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள்.இதயத்தை திருடாதே மெளனராகம் என மணிரத்னமும் நினைவில் நிற்பவரே.செல்வராகவனின் புதுப்பேட்டை சமீபத்திய வரவில் மிகவும் பிடித்தது.

சுந்தரின் புகை ஆதங்கங்கள் நியாயமானவையே.புகைக்கு ஆதரவளித்தால் எங்கே அறிவுசீவிப் பட்டம் கிடைக்குமோவென பயந்தே பின்னூட்டத்தை தவிர்த்திருந்தேன்.பொது இடங்கள் எனச் சொல்லப்படுவதில் பேருந்து மற்றும் சினிமா அரங்குகளினுள் புகைப்பது எரிச்சலானது.அருகிலிருப்பவர்களே அதை தடுக்க முடியும்.நான் பயணிக்கும் பேருந்துகளில் என் முன் அமர்ந்திருப்பவர் புகைத்தால் எழுந்துபோய் புகைக்கவேண்டாமெனக் கேட்டுக்கொள்வது வழக்கம் திரையரங்கினுள் புகைத்தாலும் அவ்வண்ணமே பிறர் செய்வதை பார்த்துமிருக்கிறேன்.இதற்கு தனியொரு சட்டமும் தண்டனைகளும் தேவையில்லாதது.போக்குவரத்துச் சட்டங்கள் நமது காவலர்களுக்கு இன்னொரு ஆதாயமாக எப்படி வழிவந்ததோ அவ்வண்ணமே இப்புகைச் சட்டங்களும் நமது காவலர்களுக்கு இன்னுமொரு வரும்படியாய் மாறிப்போகலாம்.இச்சட்டத்தினுக்கான பின்புலம் மக்கள் நலன் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.ஏதாவது ஒரு போதை எப்போதும் மனிதர்களுக்கு தேவைப்படுகிறது அதை எந்தக் கொம்புச் சட்டங்களாலும் மாற்றவியலாது.புகைத்தால் உடல் கெடும் என்பது புகைப்பவனுக்கு தெரியாததல்ல.இதை உணர்த்த புகுத்த விழிப்புணர்வுகளை வேண்டுமானால் சமூக நல அறக் காவலர்கள் செய்து கொண்டிருக்கட்டும்.அதற்காக அதிரடிச் சட்டங்களை இயற்றுவது வீணானது.துபாய் போன்ற கடுமையான சட்டங்கள் கொண்ட நாடுகளில் பான்பராக்,தம்பாக்கு இன்னபிற வாய்வழி போதைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் விற்பனை என்னவோ அமோகம்தான்.இப்போது துப்பிய எச்சில் கறைகளை தூய்மையாக்கும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது.

ஜீன்ஸ் அணிந்த யுவதி ஒருத்தர் பொட்டீக்கடையில் புகைக்கும் புகைப்படம் ஒன்றை இரண்டு மூன்று பக்கங்களில் பார்க்க நேரிட்டது.பெண் புகைப்பது என்ன அருங்காட்சியக செயலா?ஏன் இத்தனை முக்கியத்துவம் அப்புகைப்படத்திற்கு எனத் தெரியவில்லை.நமது குறுகிய மனங்களின் இன்னுமொரு வெளிப்பாடெனப் புன்னகைத்து கடக்க வேண்டியதுதான்.சென்னை வாழ்வில் ஒருமுறை கடற்கரைக்கு சென்றிருந்தேன்.புகைக்கு நெருப்பில்லாமல் போகவே எட்டு மணி இருளில் கடற்கரையில் நெருப்பு தேடி அலைந்தேன்.தூரத்தில் கங்குகள் சுடர்விடவே நிம்மதிப் பெருமூச்சோடு அருகில் சென்று நெருப்புக் கேட்டேன்.ஜீன்ஸ் அணிந்த யுவதி புகைத்துக்கொண்டிருந்தார்.அவரிடமும் தீப்பெட்டி இல்லை புகைத்துக் கொண்டிருந்ததையே கொடுத்தார்.முதன்முதலாய் ஒரு பெண் புகைத்த மீதத்தில் என் புகைக்குப் பற்றவைத்தேன்.மிக மகிழ்ச்சியாய் இருந்தது. "உங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில் நமது புகைகளை மாற்றிக்கொள்ளலாமா" என வாய் வரை வந்த கேள்வி ஏதோ ஒரு தயக்கத்தில் நின்றுபோனது.பெண்களுடன் ஒரே புகையை பகிர்ந்துகொள்வது உன்னதமானது.நண்பர்கள் எச்சில் மீதங்களோடு புகை மீதங்களை கொடுத்தால் கடிந்துகொள்ளும் வழக்கம் பெண்களுடன் புகைக்கும்போது மட்டும் காணாமல் போய்விடுவது ஏன்?

Friday, October 10, 2008

கனவுபவர்களின் கலகம் - last tango in paris & The DreamersBernardo Bertolucci யின் last tango in paris ஏற்படுத்திய அதிர்வுகள் வன்மமானது.dreamers ஐ முதலில் பார்த்திருந்தால் இன்னமும் மிகப்பெரும் அதிர்வுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம் the last emperor bertolucci மட்டுமே எனக்கு அறிமுகமாகியிருந்தமையால் last tango bertolucci மிகப்பெரும் அதிர்ச்சியளித்தார். dreamers ஐ சமீபத்தில்தான் பார்க்க நேரிட்டது.முன்முடிவுகள் இருந்தமையால் நேரிடையான அதிர்ச்சிகளின் பங்கு சற்றுக் குறைவாகத்தானிருந்தது.last tango in paris இன் Maria Schneider ரும் Marlon Brando வும் பெரும்பாலான காட்சிகளில் ஆடைகள் அணிருந்திருப்பதில்லை.மிக வன்மமான புணர்வுகள் திரைப்படம் முழுக்க வந்த வண்ணமிருக்கும்.எனினும் அத்திரைப்படம் மிகப்பெரும் கிளர்வையோ அல்லது தூண்டுதலையோ ஏற்படுத்தியிருக்கவில்லை.இன்னபிற போர்னோக்களுக்கும் bertolucci முன் வைக்கும் அரசியல்பூர்வமான உடல்மொழிக்குமான வித்தியாசங்களை முதலிரண்டு காட்சிகளிலேயே புரிந்து கொள்ளலாம்.இத்திரைப்படத்தில் ஒரு காட்சி, தனது அடையாளங்களை அழிக்க விரும்பும் brando தனது பெயரை முதலில் அழிக்கிறான். தன்னை பெயரிட்டு கூப்பிடுகையில் பெருங்கோபத்தையும்,அசூசையுணர்வைம்,மிருகத்தனத்தையும் ஒரே நேரத்தில் பெறுகிறான்."என்னை எவ்வித அடையாளத்திற்கும் உட்படுத்தாமால் ஏற்றுக்கொள்" என தன் காதலியிடம் சொல்லுகிறான். அவள் எப்படி அழைக்கவென வினவுகையில் பெருங்குரலெடுத்து கத்துகிறான். "ப்ப்ப்ப்ஓஓஓஓ என என்னை அழை, க்க்க்கோஓஓஓஒ வென நான் உன்னை அழைக்கிறேன்.அடையாளங்கள் ஆபத்தானவை" எனச் சொல்லி சிரிக்கும் காட்சி அரசியல் கூருணர்வு அல்லது சித்தாந்த புரிதல்களின் உச்சமாய் வெளிப்பட்டிருக்கும்.


The dreamers திரைப்படம் மூன்று cinema freak களின் உலகத்தைப் பேசுகிறது.இதில் தியோவும் இசபெல்லாவும் இரட்டையர்கள்.french படிக்க france வரும் அமெரிக்கனான Mathew, இவர்களின் ரசனைக்கு ஒத்துப்போகவே நெருக்கமாகிறான்.godart, Robert Bresson,chaplin என மூவருக்குமான புள்ளிகள் ஒன்றே.godart ன் band of outsiders திரைப்படத்தில் வரும் ஓடிக்கடக்கும் சாதனையை முறியடிக்கும் காட்சியிலிருந்து திரைப்படம் அடுத்த தளத்திற்கு நகர்கிறது.தியோவும் இசபெல்லாவும் ஒரே படுக்கையிலிருப்பதை பார்க்கும் mathew முதலில் அதிர்ச்சியடைகிறான்.பின்பு குளியலைறையில் உடல் பற்றிய எவ்வித பிரக்ஞையும் இல்லாமல் இருவரும் புழங்குவது அவனையும் அவர்களின் உலகத்தில் நுழைய ஏதுவாய் இருக்கிறது. ஒரு திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க முடியாமல் தோற்கும் தியோவை மண்டியிட்டு சுயமாய் இன்பிக்குமாறு தண்டிக்கிறாள் இசபெல்லா.இன்னொரு திரைப்பட கேள்விக்கு தவறாய் பதில் சொல்லும் mathew வை தன் முன் இசபெல்லாவுடன் கலவி கொள்ளும் தண்டனையளிக்கிறான் தியோ.இசபெல்லாவுடனான கலவி உச்சத்தில் ரத்தம் தெறிக்க, mathew கலவரமும் ஆனந்தமும் ஒருங்கே அடைகிறான்.அவளின் ரத்தத்தை முகத்தில் பூசிக்கொள்கிறான்.படம் முழுக்க விளையாட்டுத்தனமும், கேலியும், சமூக ஒழுங்கை நிர்குலைக்கும் துணிச்சல்களும், மிக இயல்பாய் விரவிக்கிடக்க மார்க்சிச பெர்ட்லூச்சியே காரணமாய் இருந்திருக்க முடியும்.

இத்திரைப்படத்தை incest என பொத்தாம் பொதுவாய் கடந்துவிடமுடியாது.இசபெல்லாவும் தியோவும் கலவி கொள்வதில்லை.அவர்களுக்குள் இருப்பது காதலே.இன்னொருத்தியோடு தியோ கலவி கொள்ளும் சப்தங்களை தாங்கிக்கொள்ளமுடியாமல் துயருறுகிறாள் இசா.இக்காட்சியினூடாய் மட்டுமே காதல் வெளிப்படுகிறது மற்றபடி இரட்டையர்களின் மிக இயல்பான நெருக்கமே சொல்லப்பட்டிருக்கிறது.பால்தன்மை குறித்தான பிரக்ஞைகள் இருவருக்கும் இல்லாமலிருக்கிறது என்பதற்காக மட்டும் இதை incest ல சேர்த்து விட முடியாது."கலகம் என்பது உயர்ரக ஒயினைக்குடித்தபடி உலக சினிமாக்கள் பார்ப்பது, மிகப்பெரும் புத்தகங்களை கரைத்துக் குடிப்பது, வேண்டிய மட்டும் இன்பம் துய்ப்பது மட்டுமில்லை. புரட்சிக்கு முதலில் தெருவில் இறங்க வேண்டும்" என்கிறான் mathew.கிறங்கிய மதுவில் ஆடைகளற்று தூங்கும் மூவரையும் கண்டு அதிர்ச்சியடைந்து அவர்களின் தேவைக்கான காசோலையை வைத்து விட்டகலுகிறார்கள் இசா,தியோ வின் பெற்றோர்கள்.விழிப்பில் உணர்ந்துகொள்ளும் இசா தற்கொலைக்கு முயலுகிறாள்.Mouchette திரைப்படத்தில் வரும் Robert Bresson னின் நாயகி தற்கொலை செய்து கொள்ளும் காட்சியை நினைத்துக்கொள்கிறாள்.தெருவிலிருந்து பாய்ந்து வீட்டின் கண்ணாடியை உடைக்கும் ஒரு கல இருவரையும் விழிக்கச் செய்கிறது. இசா தற்கொலையை மறைக்கிறாள்.மூவரும் அரசுக்கு எதிரான கலகத்திற்காக தெருவில் மற்றவர்களோடு இணைகிறார்கள்.(1968 student rebellions - France).Mathew தடுக்க தடுக்க இசபெல்லாவும் தியோவும் வன்முறையை கையிலெடுக்கிறார்கள்.

Friday, October 3, 2008

ஊரும் வாழ்வும்........அக வாழ்வு...
பின்னந்தலையை துளைத்துப் பாயுமொரு துப்பாக்கித் தோட்டா வெகுநாள் கனவில் வந்த வண்ணமிருக்கிறது.சில பதறிய விழிப்புகளில், அத் தோட்டா வந்த திசை நனவிலியின் குழப்பமான எத்தனையோக்களின் இன்னொரு எச்சமாய் திசை தொலைத்து, தன்னை இழக்கிறது. சுற்றிலும் கண்ணாடிகளால் சூழப்பட்ட அறைகளில், தனித்தமர்ந்திருக்கையில், எங்கிருந்தோ விரைந்து வரும் குண்டுகள், மூளையை / தலையை பக்கவாட்டிலிருந்து சிதறச்செய்வதாய், சில மாயத் தோற்றங்கள் நிகழ்ந்து மறைகின்றன.கனவில் பின்னந்தலையாகவும், நினைவில் பக்கவாட்டிலுமாயும், என் தலையைத் தெறிக்க, வெகுநாட்களாய் இத்துப்பாக்கித் தோட்டாக்கள் பெரும் முயற்சி செய்துகொண்டு வருவதை, வெகு நுட்பமான என் மன உணர்வுகள் தடம் பிடித்ததை உணர்ந்து, பெரு மகிழ்வு கொண்டேன்.அவ்வப்போது தலையை கைகளினால் தடவிக்கொள்வேன்.பாய்ந்து வரும் தோட்டாக்களுக்கு சிக்காமல் என் தலையை அடிக்கடி குனிந்தோ, சாய்ந்தோ, கவிழ்ந்தோ, காப்பாற்றிக் கொள்வேன்.கூட்டமான இடங்களுக்கு செல்கையில் வெகு கவனமாய் இருப்பேன்.இந்தக் கும்பலில் எத்திசையிலிருந்து வேண்டுமானாலும் விரையலாம் என் தலையை சிதறடிக்கும் தோட்டாக்கள், அதைத் தவிர்க்கும் பொருட்டு அடிக்கடி தலையின் இருப்பை மாற்றியமைத்துக் கொள்வேன். உள்ளுணர்வு அதிகமாகத் துடிக்கையில், எவ்விடத்தில் இருந்தாலும் உடனடியாய் தரையில் படுத்துக்கொள்வேன். தோட்டாக்கள் மிகப்பெரும் ஏமாற்றமடைந்து எங்காவது தன் வலிமை இழந்திருக்கலாம்.தோட்டாக்கள் அகன்றதை உள்ளுணர்வு சொன்னதும் மிக உவப்பாய் எழுவேன். கண்ணுக்கே தெரியாத அவ்விரோதியை ஏமாற்றிவிட்டதை உணர்ந்து மகிழ்வில் கத்துவேன்.கூச்சலிடுவேன்.என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு என் செய்கைகள் கோமாளித்தனமாய்த் தெரியலாம். என்னைப் பார்த்துச் சிரிக்கலாம். பைத்தியமெனலாம். மன உளவியலின் அடிப்படையில் சில புதிய நோய்க்கூறுத்தன்மையை மேற்கோள் காட்டலாம், அல்லது புதியதொரு வாயில் நுழையாப் பெயரை துப்பறிந்து, என் இயல்புகளோடு பொருத்திப் பார்த்து, மிக நீளமான விரிவுரை ஒன்றை இச்சமூக ஆர்வலர்கள் நிகழ்த்தலாம். அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை.என் புலப்படா விரோதிகளைப் பற்றி என்னைச் சுற்றியுள்ளவர்களுக்குத்(புலப்படும்) தெரியாது.அவர்/வை கள் ஒரு சிறிய விசையிலிருந்து பாயும் வலிமை கொண்டவர்கள்/ன. எல்லாவற்றையும் சிதறடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்/வை. அவர்/வை களுக்கு இலக்கு என் பின் மற்றும் பக்கவாட்டுத் தலை. ஆம்! அவர்கள் / அவைகள் என்னை முன்புறமாய்த் தாக்குவதில்லை.இந்த சிக்கலான உணர்வுகளைப் புரியவைக்கவே இப்படிச் சிக்கலாய் எழுதினேன். மற்றபடி புரியாமை நிலைக்குத் தள்ளுவது என் நோக்கமல்ல.புரியாமைகளின் ஒத்திசைவின் அதிர்வுகள் மாத்திரமே பகிரத் தூண்டுவதால் இப்புரியாமையும், சிக்கலும், தலைசுத்தலும் கடேசியாய் வாந்தியும்.

பு/பிற வாழ்வு

நீல வானில் வெண்மை திரண்ட மேகங்கள் காற்றின் அலைக்கழிப்புகளுக்கேற்றார்ப்போல் தன் வடிவங்களை அமைத்துக்கொள்கின்றன.குட்டித் தும்பிக்கை கொண்ட யானையொன்று, தன் தும்பிக்கை நீளும் வித்தைகளை மிக மெதுவாய் நிகழ்த்திக்கொண்டிருக்கும். இன்னுமொரு மாலையில் வாயைப் பிளந்த முதலையொன்று, ஒரு வினோத சிறிய உயிரை மெல்ல விழுங்கிக்கொண்டிருக்கும்.படக்கதைகளென விரியும் மேக நடனங்கள், மிதக்கும் வனங்களாகின்றன.தாவும் குரங்கு,கிளையழிக்கும் யானை, மானின் முதுகில் பதியும் சிறுத்தையின் முன்னங்கால்கள், இப்படிச் சிலவாய் வனங்களின் உயிர்களை, வெகு துல்லியமாய் மேகங்கள் கொண்டிருக்கும்.வனங்களில் வழி தப்பி மீள்வதும், வானில் நினைவு தொலைந்து மூழ்குவதும் ஒரே உவப்பைத் தரவல்லது.வழமையாய் மின்சாரம் போகும் விடியல், கொசுக்களை அனுப்பி என்னை என் வீட்டின் மாடிக்குத் தூக்கி வரச் செய்யும்.நான் விழிநிறை தூக்கங்களோடு வானில் புதைவேன்.குறிகளற்ற மேகக் கலவியில் திசுக்களெங்கிலும் கிளர்வு.

இந்த முன்பகலை பார்த்துக்கொண்டிருப்பது வெகு சாந்தமானது.மாமர அடிபாகத்தில், செங்குத்தாய் அமர்ந்து, வால் தூக்கிப் பார்க்கும் சாம்பல் நிற அணில், அருகாமையிலிருக்கும் எம்மரத்திற்குத் தாவும்? என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாது.சில நேரங்களில் அது எங்கும் தாவாமல் மாமரத்தின் உச்சிக்கே மீண்டும் விரையும்.பெரிய வண்ணத்துப் பூச்சியொன்று எவ்விடத்திலும் அமராது அலைந்து கொண்டிருக்கும். வண்ணத்துப் பூச்சிகள் அமர என் வீட்டின் சிறு தோட்டத்தில் மலர்களில்லை.எனினும் வண்ணத்துப் பூச்சிகள் அலைந்து கொண்டுதானிருக்கின்றன.சிமெண்ட் தரையிலமர்ந்து தேநீர் பருகியபடி அலையும் வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்போது தொலைபேசியில் அழைக்கும் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன். இவ்வண்ணத்துப் பூச்சி அமர்வதற்கான இருக்கை என்னிதயப் பூவாய் இருக்கலாம். முருங்கை மரப் பூத்தேனின் மீது, தேன் சிட்டுகளுக்கு அலாதி பிரியமாய் இருக்கக்கூடும்.சிட்டுக்குருவிகளை விட மிகச்சிறிய இப்பறவைகள் விதவிதமான வண்ணங்களில் இருக்கும். மஞ்சளும் நீலமும் கலந்த சிறுபறவைகள் என் வீட்டிற்கு வழமையானவை.தேனுண்ட பறைவகளின் உற்சாக கீச்சுகள் முன்பகலை வண்ணமயமாக்கும்.

நண்பகல் கருப்பு வெள்ளை திரைக்கானது.நெற்றிநரம்பு புடைக்க சிவாஜியின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் வார்த்தைகளாய் இறைந்து கொண்டிருக்கும்.கைகளிரண்டையும் உயரத் தூக்கி பாபூ பாபூஊஊஊ எனக் கத்தும் ஆலயமணி ஜமீந்தார், நினைவு தப்பிய காதலியை மீன் தொட்டி சிதற சந்தித்து அதிர்ச்சியுறும் ஆண்டவன் கட்டளை விரிவுரையாளர்,வேலைக்காரன் வீட்டு அதிரசத்தை அறியாமல் உண்டு பின் உணர்ந்து வாந்தியெடுக்கும் 'பார் மகளே பார்'மேல்தட்டு பணக்காரர்,ஒச்சிடுவேன் என நாகேஷ் உடன் கலாய்க்கும் கலாட்டக் கல்யாணம் பணக்கார இளைஞன்.என சிவாஜி மிக மெதுவாய் என் நண்பகலை நகர்த்திக்கொண்டிருப்பார்.எந்தவித எதிர் குணங்களும் இல்லாத, மிக நல்ல, மிக யோக்கிய, மிக நேர்மையான, பெருங்கொண்ட சத்தியவான் எம்ஜிஆரை என்னால் 30 நிமிடத்திற்கு மேல் பார்க்கமுடிவதில்லை.

ரமணர் ஆசிரமத்திலிருந்து மலையிலிருக்கும் கந்தர் ஆசிரமத்துக்கு செல்லும் மலைப்பாதை என் பால்யங்களோடு மிக நெருக்கமானது.பள்ளிக்காலத்தில் என் பாடங்களை அப்பாதை வழிகளில் அமர்ந்துதான் படித்தேன். நண்பர்களோடும் தனித்தும் சுற்றித்திரிந்த மலைப்பாதை அது.கோடை விடுமுறைகளில் அப்பாதைகளில் அமர்ந்துதான் கதைப்புத்தகங்களை படித்துக்கொண்டிருப்பேன். குறிப்பாய் ரஷ்ய மொழிபெயர்ப்புகளை, ராதுகா பதிப்பக வெளியீடுகளின் பெரும்பாலான புத்தகங்களை அங்குதான் படித்தேன்.வெயிலேறத் துவங்கியதும் பாறைக்கடியில் தஞ்சம் புகுந்தபடி, பனிப்பொழியும் ரஷ்ய சதுப்பு நிலக் காடுகளில் என்னைத் தொலைத்திருப்பேன்.இந்த முறை சென்ற போது சமீப மழையால் மலை மிகப் பசுமையாய் இருந்தது.மிக அருகினில் மேகக்கூட்டங்கள், சுழன்றடிக்கும் காற்று, என மிக அற்புதமான ஒரு பொழுதில் ஓஓஓஓஒ வெனக் கத்தினேன் பாறைகளில் பட்டுத் தெறித்த என் குரல் எங்கேயோ புதைந்து கிடந்த என் ஆதி வேர்களின் மீதங்களை மீட்டெடுத்தது.மஞ்சள் கொன்றை மலர்கள் அங்கங்கே பூத்துக்குலுங்கின. மலைக்குரங்குகள் கண்ணில் பட்டன.இவ்வகை குரங்குகள் இப்போதுதான் வந்திருக்கின்றன போலும்.மலைக்குன்றின் முடிவும் புதிய ஒன்றின் துவக்கமுமான இடமொன்றில் மிக அடர்த்தியாய் மரங்கள் சூழ்ந்திருந்தன.அடர்வான மரமொன்றின் அடிவேரில் தலைசாய்த்து அமர்ந்திருந்தேன். சுழன்று சுழன்று அடித்துக்கொண்டிருந்த காற்று நிதானமானது. சொல்லில் விவரிக்க முடியா மஞ்சம்பில் கலந்த வாசனையை அக்காற்று கொண்டிருந்தது.முடிந்த வரை என்னில் நிரப்பிக்கொண்டேன்.மலை விட்டிறங்கும்போது எப்போதும் பூத்திருக்கும் இந்நித்தியப்பூவினை நீங்கள் மலையென்றும் அழைக்கலாம் என்கிற என் பழைய வாசகம் நினைவில் வந்துபோனது.

நான் நீந்திக களித்த பெரும்பாலான கிணறுகளை எப்போதோ மூடிவிட்டிருந்தனர்.வெற்றிலைக்கிடங்குகள்,கண்ணுக்கெட்டியவரையிலான பசும் வயல்வெளிகள், அடர்வான மரங்கள், ஏரியிலிருந்து நீர் வரும் அகலமான வாய்க்கால், சாலையின் இருமருங்கிலும் அடர்த்தியாய் வளர்த்திருந்த புளியமரங்கள், என எதுவுமில்லை.நகரம் பெரிதாய் ஒன்றும் வளர்ந்துவிடவில்லை ஆனால் எல்லா விவசாய நிலங்களும் ப்ளாட்டுகளாகி விட்டன.புதிதுபுதிதாய் ஏகப்பட்ட நகர்கள் முளைத்திருக்கின்றன.விவசாயிகள் நிலங்களை விற்றுவிட்டு, பணத்தை வங்கியில் பாதியும், வட்டிக்கு பாதியுமாய் இறைத்திருக்கிறார்கள்.பெருகிய பணம் டாஸ்மாக்குகளில் மிதந்துகொண்டிருக்கிறது. வேட்டி எதுவுமற்று கடைக்கருகிலேயே தூங்கிப்போகும் எத்தனையோ விவசாயிகள் முன்பொரு காலத்தில் பயிர்செய்து பசுமைகளை உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள் என்பதை நம்புவதற்கு சிறிது கடினமாய் இருக்கிறது.பணம் தன் விகாரப் பற்களினால் கடித்துத் துப்புவது இயல்பு வாழ்வையும் யதார்த்த மனிதர்களையும்தான்.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...