Monday, September 1, 2008

சில கவிதைகளும் நிறைய புலம்பல்களும்...


ஒவ்வொரு தொடரலிலும்
வழி தப்புகிறேன்
மின்னலின் ஒளியுமிழ்ந்து
நீலங்களின் பின் மறைகிறாய்
எந்நொடியிலும் முகம் தொடலாம்
ரகசியங்கள் கரைந்த
முதல்
மழைத்துளி...

தொடர்ச்சியாய் உனது பின்னால் அலைந்து கொண்டிருக்கும் என்னிருப்பு இரவுகளில் ஆசுவாசமானதாகவும், விடியல்களில் புத்துணர்வுகளாகவும், பின் மதியங்களில் கசப்புகளாகவும், மாலையில் வெறுப்புகளாகவும், பொழுதிற்கொன்றாய் வடிவம் கொள்கின்றது.மழை பிடித்துக்கொண்ட மாலையில்,வீடு திரும்ப தாயின் வருகையினுக்காய் காத்திருக்கும் பள்ளிச் சிறுவனின் எதிர்பார்ப்புகளோடு, எவருமற்ற இவ்விடத்தில் அமர்ந்து, உதிர்ந்த புங்கம் பூக்களை மழைநீர் அடித்துப்போகும் காட்சியை சலனமில்லாது பார்த்தபடியிருக்கிறேன்.பூமியணைத்த மழையின் கரங்களையொத்து, உன் வளைக்கைகள் இடறும் கத கதப்பான அவ்வணைப்பை நினைவில் தருவித்து, குளிரும் இவ்வுடலை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன்.குடை கொண்டு வரும் யாரோக்கள் யார்யாரையோக்களை அணைத்தபடி அவ்வப்போது கடந்து செல்கின்றனர்.எனக்கான முறைக்கு இன்னும் சிறிது காலமாகலாம்.

அவநம்பிக்கைகளின் மொத்த உருவம் நான்.சந்தேகித்தலின் கூரிய நகங்களையும் துவேசங்களின் வலிமையான பற்களையும் ஒருமித்து வளர்த்திருந்தேன்.உனது புன்னகைகளின் மூலம் ஒவ்வொன்றாய் காணாமல் போகச் செய்தாய்.லாவகமான விலகலில் நீல வானில் ஒளிழ்ந்து மறையும் மின்னல்களைக் கண்முன் கொண்டுவந்தாய்.இரகசியங்களின் மொத்த விருப்பிடம் நீ!.புதிர்களின் பின்னலைந்து தோற்கும் ஒவ்வொரு முறையும், இன்னுமதிகமாய் புன்னகைகளையும், புதிர்களையும், உருவாக்கிக் கொண்டு போனாய்.எலிவேட்டைக்காரனின் இசைக்கு மயங்கிய எலியென, உன் வசீகரம் நிரம்பி வழியும் தெருக்களெங்கிலும், உன் இசையினை உள்ளுக்குள் நிரப்பியபடி பின் தொடர்கிறேன்.மங்கிய மாலைகளில் காணாமல் போகும் அவ்விசையை இரவெங்கிலும் நகரத்தின் முடுக்குகளில் தேடியலைந்து பித்தம் கொண்டேன்.இதுவரை கேட்டிராத, இதுவரை சந்தித்திராத, இதுவரை உணர்ந்திராத, இதுவரை அறிந்திராத, எத்தனையோக்களின் பிம்பங்கள் உனது நிழல்களின் தடங்களில் மிக மெளனமாய் படர்ந்திருந்தன.

எனக்குத் தெரிந்த அத்தனை மொழிகளையும் துணைக்கழைத்தேன்.நானறிந்த அத்தனை வழிகளும் சுழல் வடிவங்களாகி, துவங்கிய இடத்தினுக்கே மீண்டும் கொண்டு வந்து சோர்ந்தன.எதைக் கொண்டும் நெருங்க முடியாத அபூர்வ மலர்களை, உனது கிளைகள் பிரசவித்திருந்தன.தெரிந்த பறவைகளிடம் சிறகுகள் வாங்கி பறக்கத் துவங்கினேன் அஃதொரு திரும்பவியலா இடங்களில் என்னைத் தொலைத்து, தன்னையுதிர்த்திக் கொண்டது.செடிகளின் துளிர்த்தல்களை மனதில் வாங்கி இதோ இவ்வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருக்கிறேன். எதைக்கொண்டும் சமன் செய்துவிடா முடியா என் துயரங்களைப் போலவே எவ்வடிவம் கொண்டும் உன்னிடம் சேர இயலவில்லை.ஆனால் உன்னிடம் தோற்றுப்போவது குறித்து எனக்கு எவ்வித வருத்தமுமில்லை.உன்னை வசப்படுத்தாமை குறித்து மகிழ்வே.உனக்கான உயரங்களை விழிகள் விரியப் பார்க்கும் சிறுவனாய் இருந்துவிட்டுப்போகிறேன்.

மூடப்பட்ட நுழைவுகளின் முன்பு
கைகளின் பின்னால்
உனக்கான மலர்களை
மறைத்துவைத்தபடி
காத்திருக்கிறேன்
ஒரே நேரத்தில் நிகழலாம்
இரு திறப்புகள்
-------------------------------------------------------

எந்த ஒன்று தொடர்ச்சியாய் இப்படி அலைக்கழிக்கிறது?எதை நோக்கிய நகர்வுகள் என்னுடையது?இந்தக் காத்திருப்புகளின் மீது போர்த்தியிருக்கும் இயலாமைகளின் விசும்பல்களை எதைக் கொண்டு மறைக்க?.எந்த ஒன்றின் பின் தொடரும் இருண்மை இது?
பாலை மணலில் தங்க ஊசியைத் தேடியலைகிறேன். எங்காவது ஒளிந்திருக்கலாம் ஊசியின் சாயல்களில் ஒரு இழை.நகர்வுகளுக்கான,வெற்றியின் சாயல்களுக்கான விலைகள் மிகவும் அதிகமானவை.அவை தரும் அயர்ச்சியும் அலைவும் தாங்கொணா வலி தருபவை.வெறுமைகளடர்ந்த இந்த இரவினில் நம்பிக்கைகளின் வெளிச்சப் புள்ளியாய் எங்காவதிருக்கலாம் என்னை நிரப்பித் தூங்கும் இன்னொரு உயிர்.

குளத்தினை மூட விரையும்
ஆகாயத் தாமரையென
என் நேசங்கள் பரவுவதை
நீ மிகையென்றும்
போலியென்றும்
தவிர்த்துப்போகாதே
நீரினடியில்
பற்றுதலுக்காய்
அலைந்துகொண்டிருக்கின்றன
என் மிக மெல்லிய வேர்கள்.
---------------------------------------------------

இயலாமைகளின் உச்சங்கள்
வன்மங்களின் தாழினைத் திறக்கின்றன
வலிந்து திறக்கப்பட்ட
மதுக்குப்பியின் நுரைப்புகளென
பொங்கிப் படர்கிறது
திசையெங்கும் விந்து
நகரமெங்கிலும் விழித்திருக்கும்
ஆண்குறிகள் சபிக்கலாம்
இந்த இரவை
இந்தத் தனிமையை
இந்தக் காமத்தை
இந்தக் கடவுளர்களை

16 comments:

தமிழன்-கறுப்பி... said...

இன்னொரு முறை படித்துவிட்டு வருகிறேன்...

தமிழன்-கறுப்பி... said...

மனதிற்கு நெருக்கமாய் இருக்கிறது...

தமிழன்-கறுப்பி... said...

கடைசிக் கவிதைக்கான சந்தர்ப்பம் என்னிடமும் இருந்தது எப்படிச்சொல்வதென்கிற வகை தெரியாமல் (இப்பொழுதெல்லாம் வார்த்தைகளை கோர்வையாக பேசக்கூட முடிவதில்லை அல்லது அதற்கான சூழல் வாய்க்கவில்லை) ) அப்படியே சொற்களை சிதறவிட்டுக்கொண்டிருந்தேன் எனக்குள்ளேயே...

சென்ஷி said...

:))

கலக்கல் கவிதைகள் அய்யனார்.

M.Rishan Shareef said...

வழமையைப் போல வெறுமனே வாசித்து, ரசித்துவிட்டுப் போக மனமில்லை. அற்புதமான எழுத்தாற்றலைக் கொண்டிருக்கின்றன உங்கள் மனதும் விரல்களும். தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.

MSK / Saravana said...

ஒவ்வொரு கவிதையும் நிகழ்வும் அதை சொல்லிய விதமும் அழகோ அழகு..

MSK / Saravana said...

//குளத்தினை மூட விரையும்
ஆகாயத் தாமரையென
என் நேசங்கள் பரவுவதை
நீ மிகையென்றும்
போலியென்றும்
தவிர்த்துப்போகாதே
நீரினடியில்
பற்றுதலுக்காய்
அலைந்துகொண்டிருக்கின்றன
என் மிக மெல்லிய வேர்கள்.//

என்ன சொல்ல.. இந்த கவிதையை பற்றி..??


இதுதானுங்க்னா கவிதை..
:)
:)
:)

KARTHIK said...

// என் நேசங்கள் பரவுவதை
நீ மிகையென்றும்
போலியென்றும்
தவிர்த்துப்போகாதே.//

அருமை.

anujanya said...

அய்யனார்,

'சாரா' வுக்குப்பின் கொஞ்சம் லைட்டா எழுதுவீர்கள் என்று எண்ணினேன். ம்ஹூம்.
தேடல், காத்திருப்புகளின் சுவாரஸ்ய வலி, உங்கள் வார்த்தை ஜாலங்களில் மிளிர்கிறது. Hamlin நகரின் ஒவ்வொரு எலியும் எவ்விதம் மயங்கி இருக்கும் என்று மீள்யோசிக்க வைக்கிறது.

ஒருவாறு தன்னைத் தேற்றியவாறும், நம்பிக்கைப் புள்ளிகளைக் கோர்த்தவாறும், சிலசமயம் தோல்விகளின் வினோத வசீகரங்களில் வயப்பட்டும் இருக்கும் கதைசொல்லி, முடிவில் (இயலாமைகளின் உச்சங்களால்) வன்மம் பரவும் ஒருவித extreme மனநிலை அடைவதும் புரிந்து கொள்ள முடிகிறது.

எப்போதும் போல் மொழி அழகு. ரசித்த வரிகள்:

//அபூர்வ மலர்களைப் பிரசவிக்கும் கிளைகள்//
//தொலைத்து தன்னை உதிர்க்கும் சிறகுகள்//

மேலும்,

//உன்னிடம் தோற்றுப்போவது குறித்து எனக்கு எவ்வித வருத்தமுமில்லை.உன்னை வசப்படுத்தாமை குறித்து மகிழ்வே.உனக்கான உயரங்களை விழிகள் விரியப் பார்க்கும் சிறுவனாய் இருந்துவிட்டுப்போகிறேன்.//

இந்த வரிகள் உங்கள் வாசகர்களுக்கும் ஒரு மாதிரி பொருந்தும்.

எல்லாக் கவிதைகளும் அக்மார்க்.
//ஒரே நேரத்தில் நிகழலாம்
இரு திறப்புகள்//
சில்லென்ற காற்று வீசும் புத்துணர்ச்சி வரிகள்.

வாழ்த்துக்கள் ஐஸ்.

அனுஜன்யா

chandru / RVC said...

பதிவு முழுதும் இயல்பை தடம் பிரித்து அறிய முடிகிறது. அய்யனார், இந்த வகையான எழுத்தை வாசிப்பது ஒரு வகையான போதை,உங்களுக்கும் அது தெரிந்திருக்கும். மூன்று கவிதைகளும் அருமை. உண்மையில் நீங்கள்தான் தமிழ்க்கவிதைகளை வேறோர் தளத்திற்கு நகர்த்தும் முயற்சியில் இருக்கிறீர்கள் போல :)

ரௌத்ரன் said...

அசத்தலான எழுத்துங்க....

அசலானதான்னு வந்த சின்ன சந்தேகத்தை உங்கள் கவிதைகள் துடைத்து தூரப் போடுகின்றன...

ஆனால் இன்னுமொரு சந்தேகம் வந்துவிட்டது.நீங்க அய்யனார் தானா?இல்லை அவரோட பினாமியா....?இவ்வளவு மென்மையை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை....

MSK / Saravana said...

[இடைவெளி - எஸ்.சம்பத்]
இந்த நாவலின் மின் நூலை என் இணைய முகவரிக்கு அனுப்பி வைங்களேன்..

m.saravanakumar4@gmail.com

உங்களுக்கு நன்றிகள் பல..
:))

MSK / Saravana said...

மேலும் உங்களிடம் இதுபோன்ற புத்தகங்கள் மின்நூலாய் இருக்கும் பட்சத்தில் எனக்கு அனுப்பி வையுங்களேன்.. சிரமம் பார்க்காமல்..

நானும் படித்து இன்புறுவேன்..

நன்றி..
MSK

Anonymous said...

அய்யனார் மிகச்சரியாக இதே போன்ற ஒரு மனநிலையில் நான் இருக்கிறேன்..அதை எழுதவும் தீர்மானித்திருந்தேன்.. நான் நினைத்த அத்தனை வார்த்தைகளும் இதில் இருக்கிறது.. அத்தனை பிரிவும் வலியும் புன்னகையும் கூட.. இப்போத எப்படி எழுதினாலும் உங்களதின் மறுபிரதியாயத்தான் எழுதமுடியும் என்று தோன்றுகிறது.. எல்லாமும் எல்லாருக்கும் தான் நிகழ்கிறது.. எமக்கு மட்டுமாய்ப் புழுங்கிக் கொண்டிருக்கிறோமா நாம்..

Sridhar V said...

வலிமையான மொழி. படிப்பதே ஒரு அனுபவமாக இருக்கிறது.

நீங்க நேர்ல பேசும்போதும் இப்படித்தான் பேசுவீங்களா? :-))

Ayyanar Viswanath said...

தாமதமான பின்னூட்ட வெளியிடல்களுக்கும் பதிலளிக்காமைக்கும் நண்பர்களிடம் மன்னிப்பு... தொடர்ச்சியான இணையத தொடர்பில்லாமையே அதற்கான காரணம்.

பின்னூட்டங்களிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றியும் அன்பும்....

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...