Tuesday, July 29, 2008

உள்ளேயிருந்து சில குரல்கள் - 1யார் பிரகாரம் ஒருத்தன் மன நோயாளிங்கிறது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைதானே.யார் சரி யார் தப்புங்குறது எப்பவுமே ஒரு பிரச்சினதான்

சிலவருடங்களுக்கு முன்பு என் நண்பணின் சகோதரரைப் பார்க்க அரசு மன நல மருத்துவமனை - பாகாயத்திற்கு சென்றிருந்தேன்.எலெக்ட்ரிகல் டிப்ளமா முடித்து ஒரு நல்ல பணியிலிருந்த நண்பரின் சகோதரர், ஏதோ ஒரு நாளில் எதையோ கண்டு பயந்ததாயும், அதற்குப் பின்னர் அவர் தன் வசம்மீறி தன்னெதிரில் இருப்பவர்களைப் பார்த்து சத்தம் போடுவதாகவும்,கோபம் மிகுந்த சமயங்களில் வன்முறையில் இறங்குவதாகவும், நண்பண் சொன்னான்.தொடர்ச்சியாய் சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் இப்போது எப்போதாவதுதான் இப்படி நேர்கிறதெனவும் சொன்னான்.அந்த வினோதமான சூழல் என்னை ஏற்கனவே பயந்த,நெகிழ்ந்த ஒரு மனநிலைக்குத் தள்ளியிருந்தது.குழந்தைகள் சிகிச்சைப் பிரிவைக் கடந்தபோது எதுவோ அடைத்தது.ஆனாலும் வலிந்த இயல்புடன் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.மறந்தும் அவரிடம் எதையும் நோண்டவில்லை.பேசிமுடித்து வெளியில் வந்தவுடன் அவரைவிட பல விதயங்களில் நான் பின்தங்கி இருப்பதாய் உணர்ந்தேன்.மிகத் தெளிவான ஒரு நபர் அவர்.எந்த ஒரு நொடியில் சகலமும் காணாமல் போகிறது. எந்த நிமிடத்தின் துவக்கத்திலிருந்து மனதின் வினோதங்கள் நம்மை முழுதாய் ஆக்ரமிக்கின்றன என்பது புரியாத ஒரு புதிராகத்தான் இருக்கிறது.

கோபிகிருஷ்ணனின் இந்தப் புத்தகம் மிகப்புதியமுறையில் எழுதப்பட்ட ஒரு நாவல்.வெறும் தகவல்களாய் சொல்லப்பட்டிருக்கும் மனதின் பல்வேறு நிலைகள்.முதுநிலை உளவியல் படித்த ரவீந்திரனும் ஸ்டெல்லாவும் மனநோயாளிகளைப் பற்றின சமூகத்தின் தவறான புரிதலினை களையும் பொருட்டு ஒரு மனநல காப்பகத்தில் சந்தித்த மனநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்வதுதான் இந்நாவல்.அய்ம்பத்தி ஒன்பது மன நிலைகள் தனித்தனியாய் சொல்லப்பட்டிருக்கின்றன.அதனோடு பார்க்கும் காட்சிகளையும் பதிவு செய்திருக்கிறார்.19 காட்சிகளையும் 59 நிலைகளையும் இன்றும் தொடரும் பழமையெனும் தலைப்பில் ஆறு தனித்தனி குறிப்புகளும் சில செய்திகள் சிந்தனைகள் எனும் தலைப்பில் எட்டு குறிப்புகளும் உள்ளன.வெளியீட்டாளர்கள் (வம்சி புக்ஸ்)சிறுகதைகள் என வகைப்படுத்தியுள்ளனர்.கோபி இதனை படைப்பு என்பதோடு நிறுத்திக்கொள்கிறார். சிறுகதையா? நாவலா? என பதிப்பகத்தார் குழம்பியிருக்கக்கூடும்.ஒரு ஆராய்ச்சி நூலின் வடிவத்திலும், பல சிறுகதைகளின் வடிவத்திலும், மொத்தமாய் பார்த்தால் நாவலின் வடிவத்திலுமாய் இப்படைப்பை பல விதங்களில் பொருத்திக்கொள்ளலாம்.என்னைக்கேட்டால் கோபியின் ஒட்டு மொத்த படைப்புகளும் ஒரே நாவலின் வெவ்வேறு பக்கங்கள் என்பேன்.

ஏன் மன வினோதங்களையும் இயல்பாய் அங்கீகரிக்கக்கூடாது? எனக்கேட்கும் கோபி சுவாதீனம்,சுவாதீனமின்மை என்கிற பாகுபாடுகள் அற்ற சமூகத்தை உண்டாக்க உதவுவது தனது இலட்சிய கனவு என்கிறார்.மன நோயாளி,பைத்தியக்காரன் என சக மனிதனை அழைப்பது மிகப்பெரிய வன்முறை.மேலும் அவ்வாறழைக்க யாருக்கும் உரிமையும் இல்லை எனும் கோபி இப்படைப்பில் அவ்வார்த்தைகள் புரிதல் நிமித்தமாக கையாண்டதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறார்.

இந்தப் புத்தகத்தை படித்த முடித்தவுடன் இதில் சொல்லப்பட்டிருக்கும் பல நிலைகளில் நான் இருப்பதாக உணர்ந்தேன்.என் குணாதிசயங்களை ஒத்த பல நண்பர்கள் இப்புத்தகத்தில் காணக் கிடைத்தார்கள்.என்னுடைய அபார போலித்தனத்தின் காரணங்களோ என்னமோ நான் சமதளத்தில் இருந்துகொண்டிருக்கிறேன் அல்லது அது போன்ற ஒரு பிம்பத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.இந்த 59 நிலைகளில் உலவும் மனிதர்களின் அடிப்படைப் பிரச்சினை பயம்தான்.பயம்.. பயம்.. பயம்.. வாழ்வைப் பற்றின பயம்.. சமூகத்தினை பற்றின பயம்.. அடுத்தவர்களின் மதிப்பீடுகள் பற்றிய பயம்.. கட்டமைக்கப்பட்டவைகளின் மீதான பயம்.. புனிதங்களை மீறுவதன் பயம்.. புனிதங்களாய் இல்லாமல் போனதின் பயம்.. ஒருகட்டத்தில் மிகுந்த பயங்கள் தாங்காது, தன்னைக் காத்துக்கொள்ளும்பொருட்டு,வன்முறையாளர்களாக சடுதியில் மாறிப்போகிறார்கள் அல்லது சந்தேகிக்கிறார்கள்.தொடர்ச்சியான சந்தேகித்தல் வினோதமான நடவடிக்கைகளுக்கு அவர்களை உட்படுத்துகிறது.சில சந்தேகங்கள் கொலையிலும் சில சந்தேகங்கள் தற்கொலையிலும் முடிந்துபோகின்றன.

புத்தகத்திலிருந்து.....

நிலை 11

"இங்கெ எவ்வளவு நாளா இருக்கிங்க?"
"பதினஞ்சு நாளு இருக்கும் சார்"
"ஒங்க பேரென்ன?"
"பாளையம் சார்"
"என்ன வேல செய்யுறீங்க?"
"எனக்கு டெய்லர் வேல தெரியும்:எங்க வீட்டுல எல்லாரும் டெய்லருங்க சார்"
"ஏன் இங்க இருக்கீங்க?"
"நான் பீ துன்னுவேன் சார்"
"என்னது?"
"நா பீ துன்னுவேன் சார்"
"ஏன் அந்த மாதிரி?"
"அது கொஞ்சம் டேஸ்டா இனிப்பா இருக்கும் சார்"
"அது ஒங்களுக்கு தப்புன்னு தோணலயா?"
"என்ன தப்பு சார்?"
"ஒண்ணுமில்ல அத ஒங்களால நிறுத்த முடியலயா"
"இல்ல சார் இன்னிக்கு காலெயிலகூட ஒரு தடவ துண்ணேன்.என் கிராமத்தில என் சிநேகிதன் ஒருத்தன கூட எம்மாதிரி இருக்கான்."
"அவரும் இங்க இருக்காரா?"
"தெரியல்ல சார்"
"ஒங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"
"ஆயிரிச்சி.ஒரு பொண்ணு இருக்கா.நா வேணாம்னு சொல்ல சொல்ல என்னெ எங்கப்பா கல்யாணம் பண்ணிவச்சிட்டாரு்"
"ஏன் கல்யாணம்னா ஒங்களுக்குப் பிடிக்காதா?"
"எனக்கு அது தப்புன்னு தோணுது சார்.நான் என் பொண்டாட்டிகிட்ட தப்பா நடந்துகிட்டேன்.அவ பஞ்சு போல இருப்பா.நா தான் அவள கெடுத்துட்டேன்."
...........
"அவங்க ஒங்ககிட்ட நீங்க அந்த மாதிரி நடந்துகிட்டதா சொன்னாங்களா?"
"இல்ல சார் பஞ்சு போல இருக்குற ஒடம்பக் கெடுத்தா அது தப்புதான சார்"
"நீங்க ஒங்க மனைவி கூட எத்தன வருசம் வாழ்ந்திருப்பீங்க?"
"நாப்பது அம்பது வருசம் சார்"
"ஒங்க வயசென்ன?"
"இருபத்தி ஒம்பது இருக்கும் சார்"
"ஒங்க கொழந்த பேர் என்ன?"
"அருண் சார்.ஆனா பொண்ணா மாறி செல்வியாயிடுச்சி.ஆஸ்பத்திரில இருந்தப்ப ஆம்பிளக்கொழந்தையா இருந்திச்சி.வீட்டுல ஒரு வாரமாய் பொண்ணா வளர்த்து செல்வியாக்கிட்டாங்க."
........................
.......................
"ஒங்கள் ஒங்க மனைவி ஏத்துப்பாங்களா?"
"மாட்டா சார் நா தான் அவளக் கெடுத்திட்டன்.அம்மாவக்கூட கெடுத்திட்டேன்."
"அப்படின்னு யார் சொன்னா?"
"தெரியல்ல சார்"
"சரி பாளையம் நீங்க வார்டுக்கு போய் ஓய்வெடுத்துக்குங்க"
"சரி செல்வி சார்"

நிலை - 23.

எந்தலையில மூளையே இல்ல. நரம்புங்க அறுந்திருச்சி. குடல் போட்ற சத்தம் காது வரைக்கும் கேக்குது.சிறுநீரக நரம்புங்க,முதுகு நரம்புங்க அறுந்திருச்சி.கை நரம்புகளும் அறுந்திருச்சி. நரம்புங்களாம் இழுத்திட்டிருக்கு. கண்ணுலேயிருந்தும், காதுலேயிருந்தும், மூக்குலேயிருந்தும், உண்ணிப்பூச்சிங்க விழுந்திட்டு இருக்கு. தலையில இருந்து பேன், பேனா விழுந்திட்டிருக்கு. தலமுடியெல்லாம் நெட்டுக்குத்தலா நிக்குது. எப்பவும் தாகமா இருக்கு. பல்லெல்லாம் ஒண்ணொன்னா கீழ விழுந்துட்டே இருக்கு. ஒடம்பு பூரா வலிக்குது. ஒடம்புல ரத்தமே சுண்டி போச்சி. ரத்தம் சுண்டுற வாசன எனக்கு நல்லாவே கேட்குது. என்கிட்ட வராதீங்க. என் ஒடம்பு, ஒங்க ஒடம்புல இருக்கிற ரத்தத்த உறிஞ்சிரும். எல்லாமே என் ஊர் சனங்க என் மேல ஏவி விட்டிருக்க சாத்தானோட வேல.

காட்சி 11

புறநோயாளிகள் பிரிவு. தங்கள் பெயர் அழைக்கப்படுவதற்காக நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள், பெஞ்சுகளில் அமர்ந்து காத்திருந்தனர். ஒரு மூலையில் ஒரு வாலிபன். கைகள் பின்புறம் ஒரு கயிற்றினால் இறுக்கமாக கட்டப்பட்டிருந்தன. கால்களும் அப்படியே. வாலிபன் திமிறிக்கொண்டிருந்தான். இருவர் அவனருகில் இருந்தார்கள். வாலிபன் "ஒலகத்தில இருக்க அத்தென பேரும் தேவடியாபசங்க.. இந்த டாக்டருங்க என் பிரச்சினைக்கு என்ன பெரிசா தீர்வு சொல்லிடப்போறாங்க?" எனக் கத்தினான்.அவனை அழைத்து வந்திருந்த இருவரின் ஒருவன் அவனது தாடையில் ஒரு குத்து விட்டான். வாலிபன் இன்னும் திமிறினான்.மீண்டும் ஒரு குத்து விழுந்தது. "அடிங்கடா டேய்.. கட்டிப்போட்டுதான என்ன அடிக்கமுடியும்" என்று வாலிபன் கத்தினான்.

19 comments:

வால்பையன் said...

ஐயோ கடவுளோ!
இந்த புத்தகம் எனக்கு உடனடியாக வேண்டும்.
நான் இதில் எந்த காட்சியில் வருகிறேன் என்ற ஆர்வம் என்னை விட்டு தனியேரி என் தலையில் டம்மு டம்மு என்று அடிக்கிறது.

எங்கே கிடைக்கும், எங்கே கிடைக்கும்

வால்பையன்

ரௌத்ரன் said...

அய்யனார்...ஏற்கெனவே" மானுட வாழ்வு தரும் ஆனந்தம்"என்ற கோபிகிருஷ்ணனின் சிறுகதை தொகுப்பை வாசித்திருக்கிறேன்...வாசிப்பு தந்த அதிர்வுகளை சொல்வதற்கில்லை.கல்லூரி நாட்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அப்பொழுது நான் நிறைய பான் பீடா வகைகளை உபயோகிப்பேன்.என் நண்பனொருவன் என்னிடம் நாக்கு தடித்து விடும் என அடிக்கடி கூறிக்கொண்டிருப்பான்.ஒரு இரவில் எனது நாக்கு தடித்து போய்விட்டதாக நான் உணரத்தொடங்கினேன்.
உங்களுக்கு யூகிக்க சிரமமாக இருக்கும்.நம்பவும் கூட...
எனது நாக்கை திரும்ப திரும்ப கண்ணாடியில் பார்த்தேன்.மனமெல்லாம் நாக்காகி விட்டது போல் ஆகிவிட்டது.ஒரு முழு இரவின் உறக்கம் சத்தியமாக போய்விட்டது.மனப்பிறழ்வென்பது யாரோ ஒருவனுக்கு நிகழக்கூடிய ஒன்றல்ல என்பதை அந்த அனுபவம் இப்பொழுது உணர்த்துகிறது.மேலும் உடல் மனம் குறித்த தீவிரமான பிரக்ஞையும் தேடலும் உருவாக அந்நிகழ்வு உதவியது.ஏனோ பகிர்ந்து கொள்ளத்தோன்றியது.

sukan said...

//ஏன் மன வினோதங்களையும் இயல்பாய் அங்கீகரிக்கக்கூடாது? எனக்கேட்கும் கோபி சுவாதீனம்,சுவாதீனமின்மை என்கிற பாகுபாடுகள் அற்ற சமூகத்தை உண்டாக்க உதவுவது தனது இலட்சிய கனவு என்கிறார்.மன நோயாளி,பைத்தியக்காரன் என சக மனிதனை அழைப்பது மிகப்பெரிய வன்முறை//

மனித இயல்பின் அழகுதான் இவ்வாறான சிந்தனை என்பேன். இயல்பை தொலைத்த மானுட வாழ்வில் சுவாதீனத்திற்கும் சுவாதீனமின்மைக்கும் இடையில் இடைவெளி சற்று குறைந்த நிலையிலான அனுசரிப்பு நடந்தால் அதுவே மிகப்பெரிய மாற்றம்.

இப்பதிவு படிக்க கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றிகள்.

KARTHIK said...

இந்தப்பதிவை படித்து முடித்தவுடன் anyindia வில் ஆர்டர் போட்டுவிட்டேன்.
நல்ல பதிவுங்க தொடருங்கள்.

anujanya said...

நல்ல பதிவு. பிறழ்வுக்கும் Genius என்னும் நிலைக்கும் இடைவெளி மிகத் துல்லியமானது. பல விளையாட்டு வீரர்களும் (Nastase, McEnroe), கலைஞர்களும் (Van Gough, புல்லாங்குழல் மேதை மாலி) eccentric behaviour உடன் அவர்கள் துறைகளில் மிளிர்வதைக் கண்டிருக்கிறோம். செயல் படுத்துவது சிக்கல் எனினும் கோபியின் இலட்சியம் மிக உயர்வான ஒன்று. பதிவுக்கு நன்றி.

அனுஜன்யா
(அந்தப் பக்கம் வந்து விடாதீர்கள்)

அபி அப்பா said...

:-))))))))))))))

MSK / Saravana said...

//இந்த புத்தகம் எனக்கு உடனடியாக வேண்டும்.
நான் இதில் எந்த காட்சியில் வருகிறேன் என்ற ஆர்வம் என்னை விட்டு தனியேரி என் தலையில் டம்மு டம்மு என்று அடிக்கிறது//

வழிமொழிகிறேன்..

Ayyanar Viswanath said...

வால் பையன்
வம்சி புக்ஸ் வெளியீடாக வந்துள்ளது.உங்கள் ஊரில்தான் புத்தக கண்காட்சி தொடங்கியிருக்கிறார்களே தேடிப்பாருங்கள்...

ரெளத்ரன்

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்சினை இந்த புத்தகத்தில் அதிகமான நிலைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.பெரும்பாலான மனங்களுக்கு கற்பனையும் பயமும்தான் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது..புத்தகத்தை வாசித்து விட்டு சொல்லுங்கள்...

Ayyanar Viswanath said...

நர்மதா

சக மனிதன் மீதிருக்கும் அன்பே இதுபோன்ற ஏற்றதாழ்வுகள் மிக்க சமூகத்தினை புறந்தள்ளக் காரணமாக இருக்கின்றது.கோபியின் எழுத்துக்களில் இந்த சக மனித நேசத்தை சற்று அதிகமாகவே உணர முடியும்...நன்றி..

கார்த்திக்
அவசியம் படியுங்கள்..நன்றி..

Ayyanar Viswanath said...

அனுஜன்யா
இந்த பிறழ்வு மற்றும் அதிபுத்திசாலித்தனம் குறித்து கென்வில்பர் பகிர்ந்துள்ளவற்றை இதன் தொடர்ச்சியில் பதிகிறேன்..

உங்கள் பக்கம் வந்துகொண்டிருந்தானிருக்கிறேன் :)

சரவணக்குமார் : நன்றி

அபிஅப்பா ::)

லேகா said...

//கோபியின் ஒட்டு மொத்த படைப்புகளும் ஒரே நாவலின் வெவ்வேறு பக்கங்கள் என்பேன்//

இவ்வரிகள் எனக்கு வண்ணதாசன் படைப்புக்களை நினைவுபடுத்துகின்றது.யாரும் யோசிக்காத செல்ல விருப்பம் கொள்ளாத மனநல மருத்துவ வெளியில் நிகழும் நிகழ்வுகளின் இப்பதிவை வாசிக்க ஆவலாய் உள்ளேன்.நல்ல எழுத்தாளரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கோபியைப் பற்றித் தொடர்ந்து எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி, அய்யனார்.

Sridhar V said...

//நல்ல பதிவு. பிறழ்வுக்கும் Genius என்னும் நிலைக்கும் இடைவெளி மிகத் துல்லியமானது. //

மிகக் 'குறுகலானது' என்று சொல்ல நினைத்தீர்களோ என்று தோன்றுகிறது. உண்மையில் மனப்பிறழ்வைத்தான் பலசமயம் அற்புத சக்திகளாக கொண்டாடுகிறோம். திருவண்ணாமலை சித்தர்களிலிருந்து நோபல் பரிசு வாங்கிய ப்ரொபசர்கள் (ஜான் நாஷ்) வரை....

//அபார போலித்தனத்தின் காரணங்களோ என்னமோ நான் சமதளத்தில் //

:-))

Ayyanar Viswanath said...

லேகா வண்ணதாசன்,வண்ணநிலவனின் உலகங்களைப் போலவே கோபியின் உலகமும் ஏறக்குறைய ஒரே மாதிரியான மனிதர்களையே திரும்ப திரும்ப சந்திக்க நேரிடும் உலகம்..
கோபியை வாசித்து விட்டு சொல்லுங்கள்

சுந்தர்
கோபியின் உலகத்திலிருந்து என்னால் இன்னமும் வெளிவர இயலவில்லை
நன்றி..

Ayyanar Viswanath said...

லேகா வண்ணதாசன்,வண்ணநிலவனின் உலகங்களைப் போலவே கோபியின் உலகமும் ஏறக்குறைய ஒரே மாதிரியான மனிதர்களையே திரும்ப திரும்ப சந்திக்க நேரிடும் உலகம்..
கோபியை வாசித்து விட்டு சொல்லுங்கள்

சுந்தர்
கோபியின் உலகத்திலிருந்து என்னால் இன்னமும் வெளிவர இயலவில்லை
நன்றி..

Ayyanar Viswanath said...

ஸ்ரீதர்

இடைவெளி குறுகலானதுதான் இப்பதிவின் தொடர்ச்சியில் அறிவுஜீவித்தனத்திற்கும் பிறழ்விற்குமான இடைவெளியை எழுத முயலுகிறேன்..சற்று அழுத்தமாயிருக்கவே காதல் கவிதைகளை பதிவிட்டேன்.. :)
நன்றி

Wandering Dervish said...

மனசு'ன்றதே ஒரு மாயம்'னு பலபேரு சொல்றாங்க. ஆனா இந்த மனசு ஏற்படுத்துற மாயங்கள் தான் எத்தனை? எத்தனை? ..அதுலேயும் எத்தனை விதமான கொடூர மாயங்கள் ..

இத்தனை மாயங்கலேயும் புரிகிற மனசுக்கு, அந்தா மயங்கள பத்தி புரியுமா??
கணிக்கவே முடியாதா ஒண்ணா தெரியுது இந்த மனிதமனமும் அதன் ரகசியங்களும்

நித்தி .. said...

மன நோயாளி,பைத்தியக்காரன் என சக மனிதனை அழைப்பது மிகப்பெரிய வன்முறை.மேலும் அவ்வாறழைக்க யாருக்கும் உரிமையும் இல்லை

என்ன அற்புதமான வரிகள்....
எல்லாருமே ஒரு வகையில் மனநோயாளி தாம்...
'im workholic'இப்படி அவர்களின் வேலையில் மிக அதிகமான ஒட்டுதல் உள்ளவர்களும் நம்மில் எவ்வளவு பேர் இருக்கிறோம்...இதுவும் ஒருவைகையான மனநோயே...

இவ்வளவு அற்புதமான படைப்பை போட்டமைக்கு மிக்க நன்றி தோழா....

பகலவன் பிரமீளா said...

அருமையான இடுகை! நல்லதொரு நூலை அறியத்தந்தமைக்கு நன்றி அய்யனார்!

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...