Sunday, June 22, 2008

நினைவுகளை மீட்டல் : கோடைஅதிகாலை வேம்பூக்களின் வாசம் முதல் முத்தத்தின் உயிர்த்துடிப்புகளை நினைவூட்டிப்போகின்றது.வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களினை, கோடைகால இரவுப் புழுக்கம் முடிந்த அதிகாலை, தென்றலின் வடிவம் கொண்டு வருடிப்போகிறது.இந்த உள்ளிழுக்கும் சுவாசத்தினுக்காக, இந்த சுவாத்தினூடாய் நுரையீரலை அடையும் வேம்பூவின் கிளர்ச்சிக்காக, இந்த அதிகாலையை கொண்டாடலாம்.கொல்லைப்புற வேம்பூ, முற்றத்துப் புங்கை இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள்.

இந்த மலையை அதிகாலையில் பார்க்கவேண்டும்.பிரமிடின் முழுமையான வடிவம் அல்லது மலையின் முழுமையான தோற்றம் நம் வீட்டிலிருந்துதான் மிகச் சரியாக தெரிகிறதென்பார் அண்ணன்.எனக்கென்னமோ மிகக் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் சக உயிரியாகத்தான் இந்த மலை, இந்த இடத்திலிருந்து நினைவூட்டுகின்றது.மிக ஓய்வாக, மிக லகுவாக, மிக சாந்தமாக, மிக அழகாக, வீற்றிருக்கும் இன்னொரு ஜீவன் இம்மலை.வெள்ளி இன்னமும் ஒளிர்ந்திருக்க, துடைத்து வைக்கப்பட்ட வெளிர்நீலத்தின் அழகினை தலைக்கு மேல் சூடியிருக்கும் இந்நித்திய பூவினை நீங்கள் மலையென்றும் அழைக்கலாம்.

எதிர்ச்சாலையில் எதிர்ப்படுவர் எவருமற்ற ஒரு குக்கிராம வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் பயணிப்பது எத்தனை குதூகலமானதென்பதைச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.இரு புறங்களிலும் அடர்த்தியாய் புங்கை மரங்கள் பூத்திருக்கும் நண்பகலில் ஒற்றையனாய் பயணிக்கும் தருணங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவை.மிகப்பரந்த ஏரிக்கரையின் இருமருங்கிலும் எப்படி இத்தனை வளர்த்தியாய் அடர்த்தியாய் மரங்கள் வளர்ந்திருக்கின்றன?. மிகப் பெரு அடிமரத்தின் பொந்துகளிலிருந்து கிளியின் கெச்சட்டங்கள் வெகு தொலைவினை கடந்து செல்கையிலும் கேட்க முடிகிறது.தவிட்டு வால் குருவிகள் வெகு சுவாதீனமாக சாலையின் இரு பக்கங்களிலும் நடந்து போகும் இந்நண்பகலில், நான் அவைகளின் இறக்கைகளை கடன் வாங்கிப் பறக்கத் துவங்குகிறேன்.

சூரியனைப் பழித்துக் கவிதை எழுதுபவர்களை செவிட்டில் அறையலாம்.இதோ இந்தக் கோடையின் வீச்சை உள்வாங்கியபடி மரங்களற்ற சாலையில் பேருந்து புகைக் கழிவினை உள்ளிழுத்தபடி என் சிறுநகரத்தில் நடந்து கொண்டிருக்கிறேன். உச்சந்தலை கொதித்து உடலின் எல்லாச் சிறு துளைகளிலிருந்தும் வியர்வை நீராய் வெளியேறும் பரவசத்தை உணர்வது் அற்புதமானது.நெற்றியின் இருபுறங்களில் துவங்கி, பின்னங்கழுத்து வழியாய் பல்கிப் பெருகி, எவரும் தொடா இடங்களை மிக மென்மையாய் தொட்டு வழியும் இவ்வியர்வையை நான் நேசிக்கிறேன்.முன் நெற்றியிலிருந்து வழிந்து, மூக்கினைக் கடந்து, உதட்டைத் தொடும் இந்நீரை, என் உடல் நீரை, என் நாவுகளில் சுவைக்கிறேன். அது அமிர்தமெனச் சொல்லப்படுவதையெல்லாம் விடச் சிறந்ததாய்த்தான் இருக்க முடியும்.கோடையை இயற்கை கொண்டாடுகிறது. எல்லாத் தாவரங்களும் பச்சையுடுத்தி பூக்களை அணிந்துகொள்கின்றன. அவை மாலைநேரத்தில் கணவனின் வருகைக்காய் காத்தி்ருக்கும் புது மணப்பெண்ணை நினைவூட்டியபடியிருக்கின்றன. புழுக்கத்தை உள்வாங்கி தென்றலை வெளித்துப்பும் கோடை மிக உன்னதமானது.கோடை காலத்தில் வானம் தன் அழகின் மொத்தத்தையும் அள்ளித் தருகிறது.வெளிர் நீல வானில் தவழும் வெள்ளை நிற மேகங்களை நான் காதலிக்கிறேன்.அந்தியில் வானம் தன் மிகச்சிறந்த ஓவியங்களை உலகிறகு மொத்தமாய் தருகிறது.மழைக்கால மழைக்கிருக்கும் சோம்பலும் சகதியும் கோடை மழைக்கில்லை கோடை மழை முற்றத்தில் தெளிக்கும் நீரையொத்தது. மேலும் இம் மழையை பனியொத்த உதடுகளின் முத்தமெனவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.உதடுகள் மட்டுமின்றி உடலெங்கும் தரும் முத்தம் கோடை மழையின் தொடுகையாக இருக்கலாம். சிறார்களோடு இம்மழையில் குதிப்பதும், ஓடுவதும், கத்துவதும், என் கசடுகளை வெளித் துப்புவதற்கான மிகச் சிறந்த வழி.

என் சின்னஞ்சிறு நினைவுப்பேழையினுள் கண்ணில் விரியும் அற்புதங்களை வாரிப்பூட்டிக் கொள்ள விரும்புகிறேன்.விருப்பென்றும் வெறுப்பென்றும்
ஏதுமில்லை. இந்த இடத்தில் நானிருந்தால் நானிருக்க விரும்புகிறேன். பின்பெதுவுமற்ற சூழலில் முன்பிருந்ததை சொற்களினைக் கொண்டு வரையத் துவங்குகிறேன்.என்னால் ஒரு ஓவியனாவதற்கான கொடுப்பினைகள் இல்லாமல் போனது. நான் சபிக்கப்பட்டவனானதால் வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருக்கிறேன்.இறையும் வார்த்தைகள் தனக்கேற்ற வடிவத்தினை எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தினையாவது தந்துவிட வேண்டும்.அஃதெப்போது ஒற்றை வடிவத்தினை கொண்டுவிடுகிறதோ அப்போது என் விரல்களை ஒடித்துக் கொள்ளவேண்டும்.

நான் வாழ்ந்தேன்.வாழ்கிறேன் நிகழ்வுகளாலும் நினைவுகளாலும்...

********************************

10 comments:

thamizhparavai said...

மன்னிக்கவும்... உங்களின் வார்த்தைகளை விடவும் அதிகம் பேசியது,கிராமத்தையும், கோடையையும் நினைக்க வைத்தது புகைப்படமும்,புன்னகை முகங்களும்..

வால்பையன் said...

மரமும், மரம் சார்ந்த இடங்களாக சுற்றி வருவது
நல்ல ஒரு நினைவூட்டியாக இருக்கிறது,

வால்பையன்

சென்ஷி said...

நல்லா இருக்கு மாப்ள...

//அதிகாலை வேம்பூக்களின் வாசம் முதல் முத்தத்தின் உயிர்த்துடிப்புகளை நினைவூட்டிப்போகின்றது.//

ஆரம்பத்துலேயே ஆரம்பிக்கற மொதோ ஆளு நீதான்னு நினைக்குறேன் :))

ஆயில்யன் said...

//இரு புறங்களிலும் அடர்த்தியாய் புங்கை மரங்கள் பூத்திருக்கும் நண்பகலில் ஒற்றையனாய் பயணிக்கும் தருணங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவை//

எனக்கும், இதே போன்றதொரு அனுபவம் + இதே போன்ற இரு புறத்து மரங்களின் வரிசைக்கிடையில் பயணத்தித்த நாட்கள் பற்றிய நினைவுகள் அரங்கேறின!

நல்லா இருக்கு :)

ச.பிரேம்குமார் said...

உங்கள் எழுத்தோட்டம் அருமை அய்யனார்

KARTHIK said...

// எதிர்ச்சாலையில் எதிர்ப்படுவர் எவருமற்ற ஒரு குக்கிராம வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் பயணிப்பது எத்தனை குதூகலமானதென்பதைச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. //

உண்மைதாங்க.

chandru / RVC said...

நல்லா இருக்குங்க. நானும் அப்படியே மரங்களுக்கு நடுவிலே நடந்துட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு. என் வாழ்க்கையிலும் கொன்றை மரங்கள் தவிர்க்க முடியாதவை, நன்றி அய்யனார்,நினைவுகளை மீட்டெடுத்ததற்கு !
பறவை வேட்டையும் நல்லா இருந்துச்சு, கமெண்ட் போட மறந்துட்டேன் :)

Ayyanar Viswanath said...

தமிழ்பறவை
விளையாடிக் களைத்து தூங்கப்போன ஒரு இரவில் வீட்டிலிருந்த அனைத்து குழந்தைகளையும் உட்கார வைத்து எடுத்தேன்..சுற்றிலும் அடர்த்தியாய் இருள் இருந்தாலும் புன்னகைகள் மட்டும் பளிச்சென வந்திருந்தது..நன்றி

மிக்க நன்றி வால்பையன்..

மிக்க நன்றி டில்லி :)

Ayyanar Viswanath said...

நன்றி:ஆயில்யன்

நன்றி நிர்வாகி :)

ஆட்களற்ற சாலையில் நடப்பது அற்புதம்தான் கார்த்திக்

Ayyanar Viswanath said...

பொதுவாய் மரங்களின் மீதும் குறிப்பாய் கொன்றை மரங்களின் மீதும் காதல் பெருகியபடியே இருக்கிறது RVC மிக்க நன்றி...

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...