Friday, March 14, 2008

வார்த்தைகளில் வரைதலும் தொடர்புகளற்ற குறிப்புகளும்

வியாழக்கிழமை கடவுளர்களை ஜமாலன் புதன் கிழமையே நலம் விசாரித்ததால் சில வாரங்களாய் தலைவைத்துப் படுக்காதிருந்த கராமாவிற்கு தனியாய்ச் செல்ல வேண்டியதாய்ப் போயிற்று. தனியே குடிப்பதை விடச் சலிப்பானது எதுவுமில்லை.இன்றைய மாலையை நுரை பொங்கத் ததும்பி வழியும் பொன்னிற மதுவினைக் கொண்டு குளிப்பாட்டுவோம் ரீதியிலான கிளிட்சே க்களை முனகியபடியிருந்த சமயத்தில் என் எதிர் இருக்கையில் ஓர் இந்தியத் தம்பதிகள் வந்தமர்ந்தனர்.Henican pitcher யைத் தருவித்த கணவர் விரைந்து குடிக்க ஆரம்பித்தார்.அவரின் மனைவி அவரின் குப்பியில் இரு சிப் அடித்துவிட்டு வேண்டாமென்பதாய் தலையசைத்தார்.பின் கழிவறை செல்ல எழுந்திருந்த மனைவியுடன் கழிவறை வரைச் சென்றார்.மனைவி உள்ளே சென்ற சிறிய இடைவெளியில் பிலிப்பைன் பார்டெண்டரிடம் அவசரஅவசரமாக ஒரு லார்ஜ் கேட்டார்.பொறுமையில்லாது அவரே எழுந்து சென்று லார்ஜை வாங்கி வந்து பியர் ஜாரில் உற்றிவிட்டு உடனே பணத்தையும் கொடுத்துவிட்டார்.இந்த லார்ஜ்ஜை பில்லில் சேர்க்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.திரும்பி வந்த மனைவியிடம் இன்னொரு சிறிய டின்னுக்கான ஸ்பெசல் அனுமதி வாங்கிக்கொண்டு அதையும் குடித்து முடித்தார்.ஆக ஒரு பிட்சர்,ஒரு லார்ஜ்,ஒரு டின் பியர் இதைக் குடித்து முடிக்க அவர் எடுத்துக் கொண்ட நிமிடங்கள் பதினைந்திலிருந்து இருபது நிமிடங்களே. இதற்கு நடுவில் அவர் மனைவியை சமயோசிதமாய் ஏமாற்றவும் மெனக்கெட்டார்.இந்த நிகழ்வு அவரின் மேல் ஒரு பரிதாபத்தை வரவைத்தது.எங்கேயோ,ஏதோ,எவையோ நம்மை திருப்திபடுத்திக்கொண்டிருக்கிறது அல்லது எதையோ திருப்திபடுத்த நாம் எந்தவகையிலாவது மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறோம்.இது போன்ற ஒரு சூழலில் என்னை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன் இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ள வேண்டுமென்றால் சிலவற்றை எவ்வித தயக்கமுமில்லாமல் விட்டொழிவதே நேர்மையான செயலாய் இருக்க முடியும்.

*********

அது எதிர்பார்த்திராத ஒரு சிறிய கண முடிவில் குறுக்கு வெட்டாய் என் இடது கரத்தை அதன் அடிவயிற்றில் இறக்கினேன்.மீண்டுமது சுதாரித்து எழுவதற்குள் இந்த எல்லையைக் கடந்துவிட வேண்டும்.இதுநாள்வரை குடித்திருந்த பியர்கள் ஓடவிடாமல் செய்துவிட்டிருந்தது. முதன்முறையாய் மதுவினைச் சபித்தபடி ஓடிக்கொண்டிருந்தேன்.தொலைவில் அது நெருங்கும் சப்தங்கள் கேட்டபடியேயிருந்தது. இந்தச் சாலைசந்திப்பில் கலந்துவிட்டால் போதும் பின்பு அதனால் தொடரமுடியாது...தொலைவில் மிகப் பிரகாசமான வெளிச்சப் பந்துகள் முன்னோக்கி நகர்ந்து வந்தது.வாகனமாயிருக்கும் என சாலையின் ஓரமாய் ஒதுங்கினேன்.அருகினில் வர வர வெளிச்சம் மிகப் பிரம்மாண்டமானதாயிற்று வேனிற்கால சூரிய உதயத்தில் தகிப்புகளோடு மேலெழும் சூரியனின் உக்கிரத்தைக் கொண்டிருந்தது. தாங்கமுடியாமல் கண்களை மூடிக்கொண்டேன்.வெளிச்சம் நீண்டு, பரவி, சூழ்ந்து என் தலைமுடியைப் பிடித்து தூக்கி தனது வாயினுள் போட்டுக்கொண்டது.

**********

அந்திவானத்தை கண்ணிமைக்காமல் பார்ப்பது நிறைவைத் தருமொரு செயல்.மேகத்தைக் கவனித்தல் என்றொரு ஓஷோ தியான முறையுமிருக்கிறது. திரண்ட, இளகிய, மென்மையான, இழைகளோடிய, நீல, வெள்ளை நிற மேகங்களை வெளிர் நீல வானப் பின்னனியில் கண்ணிமைக்காது படுத்தபடி பார்த்துக்கொண்டிருப்பது மிகவும் இணக்கமான செயல்.இந்த நாட்டில் அத்தனை மேகங்களில்லை..வானமும் அத்தனை நீலமாய் இருக்காது.. மேலும் வானம் வெகு தொலைவிலிருப்பது போன்ற உணர்வையும் தரும்....குளிர்காலங்களில் மட்டும் திரெண்டெழுந்த மேகங்களைப் பார்க்கலாம்....அப்போது வானமென்னவோ நெருங்கி வந்திருப்பதாய்த் தோன்றும்...இரண்டு நாளைக்கு முன்பான என் வானம் தப்புதலில் ஒரு பறவையைப் பார்த்தேன்...முதலில் அது பறவை எனத் தோன்றவில்லை பட்டம் என்கிற வடிவத்தையே நினைவூட்டியது.... இருள் தொடங்கியிருந்த மாலையில் கண்களைக் கூர்ந்து பார்த்ததில் அஃதொரு பட்டமில்லை என்பது உறுதியாயிற்று....பறவை என நம்புவதா வேண்டாமா? எனற யோசனையோடு உற்று நோக்கியதில் அது பறவையேதான்...இறக்கைகள் இல்லாத பறவை.. ஆம்! அதற்கு இறக்கைகள் இல்லை....மேலும் அது பறக்கவும் இல்லை... மிதந்துகொண்டிருந்தது.. எவ்வித அவசரமுமில்லாமல் மிக நிதானமாக மிதந்துகொண்டிருந்தது.. மனதில் மெல்லியதாய் குளிரின் சாயல்களில் பயம் படரத் துவங்கியது.. அந்த மிதந்த பறவை எனது மாடியின் கிழக்குத் திசையிலிருந்துதான் வந்தது.. காற்றே இல்லாத வெளியில் அந்நீளமான சற்று அகலமான பறவை மசூதியின் கோபுரத்தை சுற்றி மிதந்து பின் மெல்ல மீண்டும் நான் நின்றிருந்த வாக்கில் திரும்பி மிதந்து வந்தது.. என்னில் பதட்டம் சீராய் கூடியது.. அதை இன்னும் கூர்ந்து நோக்கினேன்.. மழலையின் பழகத் துவங்கும் நடையின் சாயல்களில் அது அசைந்து,மிதந்து வந்தது ..கீழே இறங்கிப் போய்விடலாமா என்ற எண்ணம் மிகத் துவங்கிய கணத்தில் அது தன் திசையை மாற்றியது.. பின் மெல்ல இருள் புள்ளியில் கலந்து மறைந்தது... அடுத்தநாள் காலையை புகை மூடியிருந்தது.சில கார்கள் எரிந்தன... சில உயிர்கள் பிரிந்தன... சிலர் தன் உடல் பாகங்களை இழந்தனர்...நான் அந்த பறவையை வரைய முயன்று தோற்று வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருக்கிறேன்..

10 comments:

Anonymous said...

//Henican picture//

Heineken pitcher?

Ayyanar Viswanath said...

மாற்றிவிட்டேன் அனானி நன்றி

முபாரக் said...

//இது போன்ற ஒரு சூழலில் என்னை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன் இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ள வேண்டுமென்றால் சிலவற்றை எவ்வித தயக்கமுமில்லாமல் விட்டொழிவதே நேர்மையான செயலாய் இருக்க முடியும்//

கல்யாணத்துக்கு அப்புறம் குடிக்கமாட்டேன்னு சொல்ல கூச்சப்பட்டு இப்டி சப்பைக்கட்டா ;-)

கோபிநாத் said...

\\இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ள வேண்டுமென்றால் சிலவற்றை எவ்வித தயக்கமுமில்லாமல் விட்டொழிவதே நேர்மையான செயலாய் இருக்க முடியும்.\\

அப்போ சீக்கிரம் மூடுவிழாவா!!! (பதிவுகளையும் சேர்த்து தான்)

சென்ஷி said...

உணர்வுகளை வார்த்தைகளாய் மாற்றுவது மிக சிரமம், அது உங்களுக்கு மிக எளிதாய் கைகூடுகிறது.

அந்த விபத்து நிகழ்ச்சிக்கான உங்கள் புனைவு.... மிக அருமை. மனதை நெருடுகிறது.

Unknown said...

//அது எதிர்பார்த்திராத ஒரு சிறிய கண முடிவில் குறுக்கு வெட்டாய் என் இடது கரத்தை அதன் அடிவயிற்றில் இறக்கினேன்.//
//இறக்கைகள் இல்லாத பறவை.. ஆம்! அதற்கு இறக்கைகள் இல்லை....மேலும் அது பறக்கவும் இல்லை... மிதந்துகொண்டிருந்தது..//

மேலுள்ள இரண்டுக்குமிடையில் ஏதாவது சம்மந்தமிருக்கிறதோ.

Anonymous said...

arumai

Anonymous said...

arumai

நிஜமா நல்லவன் said...

////எங்கேயோ,ஏதோ,எவையோ நம்மை திருப்திபடுத்திக்கொண்டிருக்கிறது அல்லது எதையோ திருப்திபடுத்த நாம் எந்தவகையிலாவது மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறோம்.இது போன்ற ஒரு சூழலில் என்னை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன் இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ள வேண்டுமென்றால் சிலவற்றை எவ்வித தயக்கமுமில்லாமல் விட்டொழிவதே நேர்மையான செயலாய் இருக்க முடியும்.////


அவசரப்பட்டு ஏதும் முடிவு பண்ணிடாதீங்க. விட்டொழித்ததனால சொல்லுறேன். அவ்வுளவுதான்.

KARTHIK said...

//கல்யாணத்துக்கு அப்புறம் குடிக்கமாட்டேன்னு சொல்ல கூச்சப்பட்டு இப்டி சப்பைக்கட்டா ;-)//


//அவசரப்பட்டு ஏதும் முடிவு பண்ணிடாதீங்க. விட்டொழித்ததனால சொல்லுறேன். அவ்வுளவுதான்.//

ரிபீட்டு......

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...