Tuesday, January 29, 2008

தொடர்பறுந்த பிரதேசங்களில் விபரீதங்களோடு பூக்கத் துவங்கும் மூங்கில் மரங்கள்


1
அருணாசலப் பிரதேசம் இந்திய வரைபடத்திலிருக்கிறது ஆனால் அருணாசலப் பிரதேசத்தின் வரைபடத்தில் எங்களின் பிரதேசம் இல்லை என்பதை என்னைத் தேடி வந்தவன் சொன்னான்.வரைபடங்கள், வேற்று மனிதர்கள், புற பிற உலகங்களைப் பற்றி எதுவும் தெரியாது எங்களுக்கு. உலகம் குறித்தான,மனிதர்களின் வாழ்வு குறித்தான அவனின் சிலமணிநேர விளக்கங்களில் கதைகள் படிப்பது மனிதர்களின் மிகப்பெரிய புனித செயல் அல்லது மனிதர்களின் புத்திக்கூர்மையை தீட்ட வல்ல செயல் அல்லது படிப்பவன் மட்டுமே புத்திசாலி,படித்தல் மட்டுமே புத்திசாலித்தனமான செயல் எனப் புரிந்துகொண்டமையால் அவனுக்கான கதைகளாய் இதை சொல்லத் துவங்குகிறேன்.இதை எழுதிக் கொண்டிருக்கும் அதிமேதாவிக்கு இதை எழுதி முடித்ததும் மிகப்பெரிய செயல் ஒன்றை செய்து முடித்ததாய் உவப்பு ஏற்படலாம்.அந்த உவப்பினை ஆரம்பத்திலேயே எண்ணி கேலியாய் சிரித்துக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

எனக்குப் பழக்கமானது எண்பத்தி எட்டு முகங்கள் மட்டுமே,பிறந்ததிலிருந்து இந்த எண்பத்து எட்டு பேரை மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன் அத்துடன் இந்த எல்லையற்ற வெளி, எங்களைத் தவிர்த்து வேறொருவரைத் தெரிந்திடா விலங்குகள், செடிகள், தாவரங்கள் இன்ன பிற உயிரினங்களென இந்த உலகம் மிகவும் தன்வயமானது.விசித்திரங்களுக்கான புதுமைகளுக்கான வாய்ப்பு எப்போதுமே ஏற்பட்டதில்லை. எங்களின் சிறு குழு வம்சத்தின் கடைசி மனிதன் நான் (எண்பத்தெட்டாவது மனிதன்).இந்த எண்ணுடன் நிறுத்திக் கொள்வதென எங்களின் குழுத் தலைமைப் பெண்ணொருத்தி அறிவித்ததினால் எங்களின் மொத்த சமூகமும் தங்களின் இனப்பெருக்க துவாரங்களை அடைத்துக் கொண்டன.சமூக கட்டுகளுக்காக இனப்பெருக்கத்தைத் தடை செய்திருந்தாலும் நாங்கள் அனைவரும் மனிதர்களென்பதால், உடலுறவு இன்பம் என்பதைத் துய்த்து வந்திருப்பதால் அதன் கிளர்ச்சியிலிருந்து எங்களால் விடுபட முடியவில்லை. திருட்டுத்தனமாக கலவி புரிந்தோம் அது குறித்து விளக்கமாக பேசவேண்டியதில்லை இருப்பினும் தகவலாய் சொல்லவேண்டுமெனில் எங்கள் குழுக்களில் கலகக்காரர்கள் சிலர் விலங்குகளைப் புணர்ந்ததாய் செய்திகள் கேள்விப்பட்டதுண்டு.இந்த அறிமுகங்கள் போதும் இனி எங்கள் தலைமைப் பெண்ணின் மொழியில் நீங்கள் தொடர்ந்து இக்கதையைப் படியுங்கள்.

2

இந்த வருடம் பனி சற்றுக் கடுமைதான்.நண்பகலில் கூட சூரியன் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறான். பனி மூடிய இந்தச் சமவெளியை மூங்கில் தோப்பிற்கு மேலிருக்கும் பாறையின் மீது ஏறிப்பார்ப்பது பரவசத்தை ஏற்படுத்தும்.என் இளம் வயதில், என் துணையுடன் இது போன்ற பனிக்காலங்களில் அந்தப்பாறையடியில்தான் காதல் புரிந்தேன். விடிந்ததும் பாறையின் மீதேறியமர்ந்து இச்சமவெளியை உற்று நோக்கியபடி அமர்ந்திருப்பேன்.அந்தக் காலங்கள் மிகவும் இனிமையானவை இது போன்ற ஒரு குளிரில்தான் என் யோனி விறைத்துப் போனது. கலவிக்கு முயன்று தோற்ற என் துணை வெறுப்பின் உச்சத்தில் பாறையின் மீதிருந்து குதித்து தற்கொலை செய்து கொன்டது. விதிர்த்துப் போன நான் அதன் உடல் தேடியெடுத்து சிதைந்த தலையினை மட்டும் கொண்டுவந்து என் வீட்டின் முன் வைத்தேன் அதுவரை அம்மக்களுக்கு அது தலைவனாக இருந்தது. குல வழக்கப்படி என் மகன்தான் அதைக் கொன்று தலைவனாக வேண்டும்
ஆனால் என் மகன் ஒரு கவிஞனாக இருந்தான். அவன் முற்றிலும் தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவனில்லை என்பதால் நானே இக்குழுவின் தலைவியானேன்.மூடிய யோனியின் உதடுகள் பின்பெப்போதுமே திறக்காததினால் அன்று பிறந்த ஒரு குழந்தையினோடு இனப்பெருக்கத்தைத் தடை செய்தேன்.

நான் தலைவியானதற்கு பிறகு இரண்டு முறை மூங்கில் மரங்கள் பூத்தன.(அதற்கு முன்பு மூன்று முறை)மிகக் குறைவாகப் பூத்ததினால் பெரிய அளவில் பாதிப்பு ஏதுமில்லை. பூத்துக் குலுங்கிய மூன்று நாட்களில் மொத்தம் முன்னூறு மான்களும், பதினெட்டு சிங்கங்களும், பத்தொன்பது ஆலமரங்களும் பதினோரு நந்தவனங்களும் அழிந்து போயின.இரண்டு முறையும் மனித சேதாரம் எதுவுமில்லாததால் மக்களுக்கு என்மீது நம்பிக்கை வந்தது. மேலதிகமாய் ஐந்து முறை மூங்கில் மரங்கள் பூத்ததை பார்த்தே ஒரே பெண்ணும் நானாக இருந்ததினால் (எங்கள் வயதை மூங்கில் பூப்பதை அடிப்படையாக கொண்டு கணக்கிடுவோம்)எனக்காக எதை வேண்டுமானாலும் செய்ய இம்மக்கள் தயாராக இருந்தனர்.கலகக்கார கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாய் தெரிந்து கொள்ள முடிந்தது எனினும் வெளிப்படையான எதிர்ப்புகள் எனக்கு இல்லாமல் இருந்தது. இதற்கு பின்னால் என் ராஜதந்திரங்களின் உபயோகம் இருந்தது எனச்சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்.அரசியல் தந்திரங்கள் மற்றும் காதல் யுக்திகளை வெளியில் சொல்வது எப்போதுமே மிகவும் ஆபத்தானது.

இன்றைய காலையில் அப்பாறைக் குன்றின் மீதேறி இபபனியை பார்க்க விரும்பினேன்.வழித்தடத்தை கால்கள் பழகியிருந்ததால் பனிமூடிய புகை நடுவினில் நடந்துகொண்டிருந்தேன்.மூங்கில் தோப்பினை நெருங்கும் முன் கால்களில் ஏதோ இடறியது குறுக்கும் நெடுக்குமாய் ஏதோ ஓடின சந்தேகத்தோடு கையில் பிடித்துப் பார்க்கையில் பச்சை நிற எலிகள்.. இதயம் படபடவென அடிக்கத்தொடங்கியது. ஆத்திரத்தோடு அச்சிறிய பசிய எலிகளை வீசியெறிந்தேன். ஆம்! அது நிகழ்ந்தே விட்டது.. மூங்கில் மரங்கள் பூக்கத் தொடங்கிவிட்டன... வாசம் மிகக் கடுமையாய் இருந்தது.. சிறிது நேரம் சுவாசித்துக் கொண்டிருந்தால் மயங்கி விழுவது உறுதி.. மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டேன்.. சடாரென பனிப்புகை கலைந்தது.. பாய்ந்த சூரிய வெளிச்சத்தில் சற்றுப் பதறிப்போனேன் பூக்கள்.. பூக்கள்..பூக்கள்...எங்கும் பூக்கள்....கண்களுக்கெட்டிய தூரம் வரை கொத்துக் கொத்தாய்ப் பூக்கள்..ஒரே இரவில் எப்படி இத்தனைப் பூக்க முடியும்? அடர்த்தியாய், நீளமாய், வாசனையாய், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பூக்கள்..எனக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது..இந்த முறை நம் ஒட்டு மொத்த சமூகமும் அழிந்தே போய்விடும் என உறுதிபடுத்திக் கொண்டேன்...ஓட்டமும் நடையுமாய் என் வீட்டை அடைந்து மயங்கி விழுந்தேன்...

கண்விழித்துப் பார்த்தபோது ஒட்டுமொத்த மக்களும் என் முன் குழுமியிருந்தனர்.மூங்கில் பூத்திருந்ததை பார்த்ததின் பயரேகைகளை அவர்களின் முகத்தில் படிக்க முடிந்தது.சற்று உரத்தகுரலில் ஒருவன் முன் வந்து சொன்னான் (இவன்தான் புலிகளைப் புணர்பவனாய் இருக்கமுடியும்) "இந்தப் பிரதேசம் முழுக்க போர்த்தியிருக்கும்படி கடினமான,யாராலும் புக முடியாத கூரை ஒன்றினை வேய்ந்துவிடுவோம். அதுவும் இன்றைய பொழுதிற்குள் அப்போதுதான் பாதுகாப்பாய் இருக்கமுடியும்" என்றான்.அவன் யோசனையையும் அவனையையும் எனக்குப் பிடித்திருந்தது. எண்பத்தி ஆறு பேரையும் கூரை வேயும் பணியில் ஆழ்த்திவிட்டு அவனை தனியே அழைத்து வந்தேன்.மூடிய என் யோனி உதடுகளை திறக்கப் பணித்தேன். அவன் முதலில் தன் குறியினால் முயன்று தோற்றான்.கூரிய நகங்கள் மற்றும் பற்கள் கொண்டும் முயற்சித்துப் பார்த்து தோல்வியடைந்து,நிம்மதியற்று அப்படியும் இப்படியும் நடந்தான்..தலையை இடதும் வலுதுமாய் ஆட்டியபடி இடையிலிருந்த குறுவாளினைக் கொண்டு என் கழுத்தினை அறுக்க ஆரம்பித்தான்.

இந்த இடத்திற்கு மேல் இக்கதையினை தொடரவேண்டிய சுமை கலகக்காரனின் தோள்களில் விழுவதால் அவனது மொழியில் தொடர்ந்து படியுங்கள்
3


என்னை எப்படி இவர்கள் கலகக்காரனென அழைக்கிறார்கள் எனப் புரியவில்லை.தினவெடுத்து அலைவது,தடைகளை மீறுவது, யாருக்கும் தெரியாமல் தேங்கியுள்ள நமைச்சல்களை தீர்த்துக் கொள்வது இவற்றைத் தவிர நான் வேறெதுவும் செய்திருக்கவில்லை.சாதாரணர்கள் மிரளும் ஒன்றினை செய்யத் துணிவது மாத்திரமே கலகத்தின் அடையாளமென மாறிப்போனது வரலாற்றின் தவறாய்த்தான் இருக்க முடியும். புலிகளை சுலபமாய் புணர முடிந்த என்னால் அவளை ஏதும் செய்ய முடியவில்லை. வெட்டி வீழ்த்த முடிவெடுத்த கணத்தில்தான் பதவியின் மீதான மோகங்கள் கிளை விட ஆரம்பித்தன அல்லது பதவியின் மீதான சடுதியில் தோன்றிய கிளர்வுகளே அவளைக் கொல்ல காரணமாயிருந்தன..இப்போது நான் இந்தப் பிரதேசத்தின் தலைவன். வீழ்த்திய அவளின் தலையோடு குத்துக்காலிட்டு வெகுநேரம் அமர்ந்திருந்தேன் இருள் கவ்வ சிறிது நேரமிருக்கும் தருவாயில் என் தலைக்குமேல் பெரிய கூரையொன்றினைப் பார்க்க முடிந்தது. வெற்றிகரமாய் கட்டளையை நிறைவேற்றிய குடிமக்கள் எவ்வித எதி ர்ப்புமில்லாது என்னை தலைவனாய் தேர்ந்தெடுத்தனர்.முதல் சட்டமாய் இனப்பெருக்கத் தடையை நீக்கினேன்.கலவி என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. நினைத்த நேரத்தில்,பிடித்த இடத்தில் பிடித்தவர்களோடு கலவியில் ஈடுபடுங்களென சத்தமாய் அறிவித்தபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.அதே இடத்தில் தத்தம் துணையுடன் இணைய ஆரம்பித்தனர் (இதைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது perfume திரைப்படத்தின் இறுதிக் காட்சியினை நினைத்துக் கொண்டேன். அந்தத் திரைப்படத்தை யாரேனும் பார்த்திருந்தால் நீங்களும் அதுபோன்ற ஒரு காட்சினை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்) வெகு நாட்களாய் தேங்கி கிடந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் தெருக்களில் வெள்ளமென பாய்ந்தோடியது. உற்சாக கூச்சல்களும் இன்ப முனகல்களும் என்னை கிளர்வடையச் செய்தது.எத்தனை நாட்கள் இவ்வாறு கிடந்தோமென ஒருவரும் அறியவில்லை.

சோர்வின் மிகுதியில் நான் மெல்ல வெளிவந்து கூரையின் ஒரு பகுதியினைக் கிழித்துப் பார்த்தேன்..எங்கள் பகுதி தவிர்த்து சுற்றியிருந்த அடர்ந்த காடுகள் தீக்கிரையாகியிருந்தன.மூங்கில்மரங்கள் இருந்த சுவடேயே காணவில்லை.மெல்ல மக்களை எழுப்பி வெளியில் கூட்டிச் சென்றேன்.. காட்டுத் தீயில் கணக்கிலடங்கா கானக விலங்குகள் மடிந்துபோயிருந்தன. பிணக்குவியல்களுக்கு நடுவே சில வினோத உடல்களையும் பார்க்க முடிந்தது.ஒரு விலங்கிற்கு மூக்கிற்கு பதிலாய் யானையின் தும்பிக்கை இருந்தது.இன்னொரு விலங்கிற்கு மூன்று முகங்கள் இருந்தன.இன்னொன்று பெரிய கொண்டையோடும் உடல்முழுக்க சாம்பல்களைத் தீட்டிக்கொண்டுமிருந்தது.பெண்ணுடல்களை ஒத்த சிலவற்றையும் பார்க்கமுடிந்தது...மரத்தாலான கருவியொன்றினையும், தாமரை மலர் ஒன்றினையும், சிங்கமொன்றினையும் கெட்டியாய் பிடித்தபடி சிலப் பெண்ணுடல் விலங்குகள் இறந்து கிடந்தன...

*மாற்று எழுத்துக்களை வலையில் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கும் நேசத்திற்குரிய நண்பர்களுக்கு....

*When bamboo flowers என்கிற documentry ஒன்றினை National Geograpic Channel லில் பார்க்க நேரிட்டதின் தொடர்ச்சியே இப்புனைவு இதனோடு அந்த documentry யினையும் பார்ப்பது ஆழமான புரிதலுக்கு வழிவகுக்கும்..

12 comments:

Anonymous said...

நன்றாக இருக்கிறது, அய்யனார்.

தமிழச்சி said...

///*மாற்று எழுத்துக்களை வலையில் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கும் நேசத்திற்குரிய நண்பர்களுக்கு....///

தோழருக்கு வணக்கம்
அழகான பதிவு.

Anonymous said...

GREAT WRITING , KEEP IT UP

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அய்யனார், கதை சரியான formல் வரலையோன்னு தோனுது. baton ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுவது, ஒரே மாதிரி இருக்கிறதோ...?

மூன்று பேர் கதை சொன்னாலும், ஒரே மொழில், நடையில் இருப்பது ஒரு குறையாகத் தெரிகிறது.

வித்தியாசமான முயற்சி, தொடருங்கள்.

KARTHIK said...

அருமையான படைப்பு
பகிர்ந்தமைக்கு நன்றி

Anonymous said...

அய்யனார்,

"தலைப்பை மட்டும் நன்றாக வைத்து விட்டு உள்ளே இவ்வளவு அசிங்கமாக ஏன் எழுதுகிறீர்கள்?"
என்று யாராவது உங்களுக்கு பின்னூட்டமிட்டால் எப்படியிருக்கும் உங்களுக்கு.

தமிழச்சியின் எழுத்துக்கும் உங்கள் எழுத்துக்கும் 'வகைப்படுத்துதல்' வேறொன்றும் வித்தியாசம் தெரியவில்லை எனக்கு. 'போடா இலக்கிய ரசனை இல்லாதவனே' என்று நீங்கள் சொல்லலாம். இலக்கியமோ சமூக சீர்திருத்தமோ ஆபாசம் என்று வரும்போது எல்லாம் ஒன்றுதான். புனைவென்றால் மட்டும் எந்த வகையில் சிறப்பு? எல்லா புண்ணாக்கும் ஒன்னுதான்.

நீங்கள் எழுதுவதுதான் சரியென்றால், சரோஜாதேவி எழுதுவது கூட சரிதான்.

இரண்டு கால்களுக்கிடையிலேயே குடிகொண்டிருக்கும் இந்த பி.ந தேவையில்லை தமிழுக்கு.

Ayyanar Viswanath said...

டிசே,தமிழச்சி,அனானி,சுந்தர் மற்றும் கார்த்திக் நன்றி

முகமிலி அ பெயரிலி

தமிழச்சி ஆபாசமாக எழுதுகிறார் என நான் எங்காவது எப்போதாவது சொல்லியிருக்கிறேனா?எல்லாவற்றையும் அரைகுறையாக மேம்போக்காக புரிந்துகொள்ளாது என்னவாய் விமர்சித்திருக்கிறேன் என்பதை முழுதாய் படித்து விட்டு வாருங்கள் பிறகு உரையாடுவோம்

ரௌத்ரன் said...

அய்யனார்..புனைவு அமர்க்களம்.

பெயரிலி://இரண்டு கால்களுக்கிடையிலேயே குடிகொண்டிருக்கும் இந்த பி.ந தேவையில்லை தமிழுக்கு.//

உங்களுக்கு தேவையில்லை என்று கூறுங்கள் பெயரிலி.

பாண்டித்துரை said...

கதை நன்றாக வந்துள்ளது அய்யனார்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

கதை மாந்தர்களை பேச வைத்திருக்கும் உத்தி உங்கள் பதிவுகளில் நான் வழக்கமாக காண்பதுண்டு, அந்தக்கடைசி பத்தி சொல்லாமல் சொல்லும் செய்திகளை வாசகர்களின் கற்பனைக்கு விட்டிருக்கும் பாங்கும் அருமை. வாழ்த்துக்கள்...

Ayyanar Viswanath said...

ரெளத்ரன்,பாண்டித்துரை மற்றும் கிருத்திகா: நன்றி

Anonymous said...

:)

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...