Monday, January 7, 2008

உரையாடல் வடிவக் குறிப்புகள் அல்லது அய்யனார் குறிப்புகள்

கவிதை எழுதுவது என்பது காட்டுமிராண்டித்தனமானது-மார்க்ஸிய சிந்தனையாளர் தியோடர் அடோர்னோ

சமுதாயத்திற்கு கவிஞர்களால் எந்த வித நன்மையும் இல்லை,அவர்கள் சோம்பேறிகள் மட்டுமல்லாது விசும்பேறிகளும் கூட என்னுடைய குடியரசில் அவர்களுக்கு இடமில்லை எல்லோரையும் நாடு கடத்து - பிளாட்டோ


சுய விசாரணைகள் அல்லது தன்னைப் பற்றி யோசித்தல்(பற்றியே அல்ல) குறிப்பிட்ட இடைவெளிகளில் செய்யப்பட வேண்டிய ஒன்று.பொருத்திப் பார்த்து புளகாங்கிதம் அடைந்துகொள்வது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் பொருத்திப் பார்த்து வெட்கப்படுவதிலும் இருக்கிறது.இவ்வாறு இருக்கிறேன் என்பதை முழுமையாய் புரிந்துகொள்வது மட்டுமே நிறைவான ஒன்றாய் இருக்க முடியும்.தன் சார்ந்து இயங்குவது மட்டுமே நேர்மையானதாக இருக்க முடியும்.சுயநலம் என்ற வார்த்தையை தேவையில்லாத இன்ன பிற வார்த்தைகளோடு (தியாகம், பொதுநலம், நித்யகாதல், என்றென்றைக்குமான, நிலைத்திருக்க கூடிய ,இன்ன பிற ப்ளா ப்ளாக்கள்...)சேர்த்துவிடலாம். தன் வீர்யத்தை இழந்த சொற்களை சேகரிக்க வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தை இப்போது உணர்கிறேன்.

செய்து முடிக்கப்படாதவைகளின் கணம் சுமக்க முடியத ஒன்றாய் எப்போதும் இருக்கிறது.சார்ந்து வாழ்வதின் சோர்வுகள் தொடர்ந்தபடியே இருக்கிறது.நாளைக்கு, பிறகு, அப்புறம் ,மெதுவா, தேவையில்லை, அய்யோ! யோசிக்கத் தோணல!.. இந்த வார்த்தைகளை அதிகமாய் பிரயோகிக்கிறேன்.இத்தனை நாட்களாய் வாழ்ந்ததில் பெருமைப்பட்டுக் கொள்ள எதுவுமே இல்லை சிறுமைப்பட்டுக்கொள்ள நிறைய இருக்கிறது இருப்பினும் முன் பத்தியில் சொன்னது போல என்னை நான் முழுசாய் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். ஒன்றை எழுதிவிடுவது மிகச் சுலபமான ஒன்று அதை தன்னுடன் பொருத்திப் பார்ப்பது எத்தனை அலுப்பைத் தரும் என்பதினை எழுதி முடித்தவுடனேயே புரிந்து கொள்ள முடிகிறது.

எந்த ஒன்றைத் துவங்கும்போதும் என்னிலிருந்துதான் ஆரம்பிக்கிறேன் எந்த ஒன்றை முடிக்கும்போதும் என்னை அங்கு கொண்டு போய் விடுகிறேன். கவனித்தல் / பார்த்தல் (witnessing / watching) இரண்டிற்குமான வித்தியாசங்களை ஜேகே வோ ஓஷோவோ சொல்லியிருப்பார்கள் இரண்டும் ஒன்றுபோலவே தோன்றினாலும் இரண்டிற்குமான இடைவெளி மிக அதிகம்.வித்தியாசங்களை புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருக்கிறது. நம்புவது பின் நம்பிக்கை பொய்த்துப் போவது இதெல்லாம் அறியாமைகளின் குறைபாடுகள் மட்டுமேயன்றி சாராம்சத்தின் தவறுகள் எதுவுமே இல்லை. இதைப் புரிந்து கொள்வதே நம்முடைய குற்றவுணர்விலிருந்து நம்மை மீட்டெடுக்கும் வழி..(சமூகத்திற்கு திட்டவட்டமாக சிலதுகளை சொல்லிவிட வேண்டும் என இப்போதெல்லாம் கங்கணம் கட்டித் திரிகிறேன்)

அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போ! இந்த வார்த்தையை விட அருவெருப்பானது எதுவுமில்லை.எத்தனை விதயங்களில் சகித்துக் கொள்கிறேன்/ கொண்டிருக்கிறேன் சகித்துத், தவிர்த்து, கண்டுகொள்ளாமல் விட்டு அலுப்பாய் இருக்கிறது.எனக்கான ஒன்றை என்னுடையதை எப்போது தெரிவு செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை.எனக்கு மட்டுமேயான ஒன்று கிட்டும் என்ற நம்பிக்கைகள் கூட இப்போதெல்லாம் மெல்ல தன் வீர்யத்தை இழக்கிறது. நாம் வாழும் சமூகம் நம்மை சகித்து வாழ்வதற்கான தயாரிப்புகளை பிறந்த உடனே செய்துத் தர முன் வருகிறது/வந்துகொண்டிருக்கிறது.எதையும் சகித்துக் கொள்ளாது எனக்குப் பிடித்த வாழ்வினை எப்போதாவது வாழ்ந்திருக்கிறேனா? என யோசிக்கையில் நான் தனியாய் இருந்த காலகட்டங்கள்தான் நினைவில் வருகிறது.மதுரையில் வாழ்ந்த சொற்ப காலகட்டத்தில் அலுவலகம் தவிர்த்து வேறெந்த மனிதர்களையும் எனக்கு தெரியாது தெரிந்து கொள்ள விரும்பவில்லை.மிக விசாலமான அந்த வீட்டினுள் தனியொருவனாய் மிக நிம்மதியாய் கடந்துபோனது அப்போதைய நாட்கள்.அந்நாட்களில் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த பின் ஆடை அணியும் பழக்கமும் இல்லாதிருந்தது.அந்த சுதந்திரமும் நிம்மதியும் ப்ளாங்க் மனநிலையும் மீண்டும் எப்போது வாய்க்குமெனத் தெரியவில்லை.

இந்த எழுத்துச் சனி பிடித்ததிலிருந்து மண்டைக்குள் சதா ஏதாவது ஓடியபடியெ இருக்கிறது.சம்பவங்களை எல்லாம் எழுத்தாக மாற்றிப் பார்க்கிறது.எப்போதுமே சந்தையில் நிற்கின்ற உணர்வு எப்படியோ வந்துவிட்டது.மிக மிக அந்தரங்கமென சொல்லிக்கொள்ள என்னிடம் எதுவுமே இல்லாமல் போய்விட்டது.நகர்ந்துகொண்டே இருப்பது அலுப்பு தட்டக் கூடியதாய் இருக்கிறது.எங்காவது ஒரு இடத்தில் பட்டறையை போடவேண்டும்.எல்லாக் கருமத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்.வேறென்ன செய்ய?

நட்சத்திரங்கள் இறந்துபோனவனின் கண்களைப் போல இருக்கின்றன என்ற கவிஞர் சிவரமணியைப் பற்றித் தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா?ஆனந்தவிகடனில் சில வருடங்களுக்கு முன்பு இவரது கவிதை ஒன்றினைப் படித்தேன்.சிவரமணி என்கிற பெயர் மறந்துபோய் கவிதை மட்டும் மனதில் ஒட்டிக்கொண்டது.யுத்தகால இரவொன்றின் நெருக்குதல் எமது குழந்தைகளை வளர்ந்தவர்களாக்கிவிடுகிறது.... என்பதாய் தொடங்கும்.அந்தக் கவிதையை அப்போதைய என் வாழ்வோடு தொடர்பு படுத்திக் கொண்டு பார்த்துக்கொண்டதால் அது அப்படியே மனதில் தங்கிவிட்டது.சேரனின் உயிர் கொல்லும் வார்த்தைகளை நேற்றுப் படித்துக்கொண்டிருந்த போது கவிஞர் சிவரமணி தற்கொலை செய்து கொண்டதை தெரிந்து கொள்ள முடிந்தது.அத்தோடு தற்கொலைக்கு முன் தன் கவிதைகளை எரித்து விட்டதாயும் நண்பர்களிடமிருந்த சில கவிதைகள் மட்டும் எஞ்சியிருப்பதாயும் சேரன் எழுதியிருந்தார்.அந்தக் கவிதைகள் எங்காவது கிடைக்குமா?

7 comments:

Anonymous said...

அய்யனார்,
சிவரமணி, செல்வியின் கவிதைகள் தனித்தொகுப்பாய் வந்திருக்கின்றன. நூலகத்தில் இணைக்கப்பட்டுள்ள 'சொல்லாத சேதிகள்' தொகுப்பில் சிவரமணியின் சில கவிதைகளை வாசிக்கலாம்.
http://www.noolaham.net/project/01/16/16.htm
....
'கேட்ட கேள்விக்கு விடையில்லாதபோது மவுனமாக இருக்கப் பழகவும்' என்ற சிவரமணியின் வரிகள் எனக்குப் பிடித்தமான ஒன்று.

KARTHIK said...

//நம்புவது பின் நம்பிக்கை பொய்த்துப் போவது இதெல்லாம் அறியாமைகளின் குறைபாடுகள் மட்டுமேயன்றி சாராம்சத்தின் தவறுகள் எதுவுமே இல்லை.//

நல்ல மொழி நடை.
கொஞ்சம் எளிமையை பயன்படுத்தினால் எல்லாருக்கும் புரியும்.

Ayyanar Viswanath said...

நன்றி டிசே

சரி கார்த்திக்

கண்மணி/kanmani said...

அய்யனார் மொக்கை தொடர் விளையாட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன்.
http://kouthami.blogspot.com/2008/01/blog-post_09.html
சரியென்று பட்டால் எழுதுங்க.
ஒரு மாறு பட்ட எழுத்துப் பரிமாணத்தில் வாசிக்க ஆசை

விமலா said...

crude philosophy! நிறைய விசயங்களை குறித்து எழுதியிருக்கிறீர்க்ள்.

//நம்புவது பின் நம்பிக்கை பொய்த்துப் போவது இதெல்லாம் அறியாமைகளின் குறைபாடுகள் மட்டுமேயன்றி சாராம்சத்தின் தவறுகள் எதுவுமே இல்லை.//

இதை மட்டுமே JK "The First and Last Freedom" ல் விளக்கியிருப்பார்.

எப்படி அய்யனார், saturate ஆகாம தீவிரத்தன்மையுள்ள பதிவுகளை
அடுத்தடுத்து பதிவிடுறீங்க!

Boston Bala said...

இவ்வித குறிப்புகள் பிடித்திருக்கின்றன.

(அடைப்புக்குறிக்குள் எழுதுவது ஓட்டத்தில் இடையூறுகளாக தடுக்குகின்றன.)

Ayyanar Viswanath said...

சீக்கிரம் எழுதிடுறேன் டீச்சர்

நன்றி விமலா

பாபா அடைப்புகுறிகள் நிறைய விசயங்கள சொல்ல வசதியா இருக்கு ..தவிர்க்க முயற்சிக்கிறேன் ..நன்றி

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...