Sunday, December 9, 2007

உண்மைகளைப் பேசுதல்,கண்டறிதல் மற்றும் எழுதுதல்

பேசுதல்

ராஜேசு க்கு என் மேல தனிப்பட்ட பிரியம்
எங்க எப்ப எப்படி கூப்டாலும் ஒடனே வர
மச்சான் நாச்சி மாதிரி எவனாலும் முடியாது
எல்லோரோடயும் சட் னு பழக
பாலா மாதிரி எவனும் இல்ல
எதுன்னாலும் சிவா முன்னால வந்து நிப்பான்
செந்தில் மாதிரி குடிக்க எவனுமில்ல
பழநி மாதிரி அக்கறையா இருக்க
ஒருத்தனாலயும் முடியாது
பல்லன் மாதிரி எவனாலையும்
பசங்கள கவனிக்க முடியாது
கிறுக்கன் மாதிரி கிறுக்கன் ஒலகத்தில எவனுமில்ல
பசங்களுக்கு
என் கூட குடிக்கிறா மாதிரி வருமா?

கண்டறிதல்

இன்றைய மாலையை மதுவினால் குளிப்பாட்ட
நாள்முழுக்க குற்ற உணர்வை நிரப்பி வைத்தாயிற்று
நாளைய மாலைக்கு ஒரு ஆப்பிரிக்க திரைப்படம்
அதற்கடுத்த நாள் இருக்கவே இருக்கிறது உம்பர்த்தோ ஈகோ
வார இறுதிக்கு தியாகுவும் கதிரும் கராமா ஓட்டலும்
இருக்கும்வரை ஒன்றும் பிரச்சினையில்லை
கொஞ்சம் துயரத்தை
தனிமையை
காதலை
அழகியலை
சிலாகித்தலை
வெறுப்பை
கூட்டிக்கொண்டால்
கவிதையையோ
புனைவையோ
சினிமா கட்டுரையையோ
எழுதிவிடலாம்
இந்த வாரம் எப்போதும்போல் ஆரவாரம்தான்..

எழுதுதல்

உண்மையை எழுதமுடியுமென்கிற கணத்தில்
நானொரு முற்றுப் புள்ளியை வைத்துவிடுவேன்
(அ)
எழுத்து
உண்மையை கண்டறிதலுக்கான
இன்னொரு வழி

...........................00000000000000.....................

பேசுதல்

ஒன்றினுக்காய் உருகுவது
ஒன்றினுக்காய் இன்னொன்றினை
விட்டுக்கொடுப்பது
சதா அதே நினைப்பாய் இருப்பது
எங்கு சென்றாலும் பின் தொடர்வது
கேர் கேரிங்
வித் லவ்
பிரியங்களுடன்
முத்தங்களுடன்

இதையெல்லாம் விட ஆபாசமான சொற்கள்
வேரெதுவும் இருக்க முடியாது..

பசி கொண்ட உடல்கள்
தேவதைகளின் வடிவமேற்று
ஆளறவமற்ற இடங்களில்
சக உடல்களைத் தின்று தீர்க்கிறது..
முன் வந்து விழும் வெளிச்சத்தில்
பதறியடித்து எழுந்து
விரல்களைப் பற்றியும்
இதழ்களைப் பற்றியுமாய்
எழுதிக் குவிக்கிறது போன்ற பாவனையில்
தலை கவிழ்ந்தமர்கிறது

நீக்கமற எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது
சுயநலத்தின் குரூரம்..
காதலை விட வன்முறையானது
வேறெதுவும் இல்லை..


கண்டறிதல்

இரண்டு பியர்களுக்கு மேல் குடித்துவிட்டால்
பழைய காதலிகளுக்குத் தொலைபேசி
இன்னும் அவள் நினைப்பிலேயே இருப்பதாய்
சத்தியம் செய்யலாம்..
உடன் வந்தவனை
ஐ லவ் யூ மச்சி
என குழறலாய் நேசத்தை சொல்லலாம்

என்ன செய்வது?
குடித்த பின்பெழும் நேசங்களை மட்டும்
சொல்லாமலிருக்க முடியவில்லை...

எழுதுதல்

எழுதப்பட்டவைக்கும் எழுதப்படபோவைக்குமான
வித்தியாசங்கள்
பெரிதாய் எதுவுமில்லையெனினும்
உங்களால் உடனே தடம்பிடித்து விடுமளவிற்காவது
உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன
ஆனால்
எழுதப்படுபவை எல்லாமே உண்மையுமல்ல
எழுதுகிறவன் எல்லாமே பொய்யனுமல்ல
எழுதுபவன் எழுதிக்கொண்டிருக்கிறான்
எழுத்து எழுதுபவனை எழுதிக் கொண்டிருக்கிறது

உலகம் இயக்கத்திலிருக்கிறது....

9 comments:

Anonymous said...

//
நீக்கமற எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது
சுயநலத்தின் குரூரம்..
//

உங்கள் அனைத்து பதிவிலும் பெரும்பாலும் இந்த கருத்தும் நீக்கமற நிறைந்திருக்கிறது..

கதிர் said...

நான் சிவனேன்னு எழுதிகிட்டு இருக்கேன் என்னை ஏன்யா இப்படி இழுத்து விடற?

அந்த ஆப்பிரிக்க அழகிகளை பற்றி எழுதாமல் சென்சார் செயதது ஏனோ?

கதிர் said...

//பசி கொண்ட உடல்கள்
தேவதைகளின் வடிவமேற்று
ஆளறவமற்ற இடங்களில்
சக உடல்களைத் தின்று தீர்க்கிறது..//

காதல் வயப்பட்டவர்கள் எப்பாடுபட்டாவது தனது காதலனையோ காதலியையோ மடக்கி போட உபயோகிக்கும் பிரயோகங்கள் :)
பசிகொண்ட உடலுக்கு அப்படிதான சார் இதுக்கு அர்த்தம்?

கோபிநாத் said...

விரைவில் சந்திப்போம்...

காட்டாறு said...

//எழுத்து எழுதுபவனை எழுதிக் கொண்டிருக்கிறது
//

ம்ம்.. நிதர்சனம்!

manjoorraja said...

//எழுதப்படுபவை எல்லாமே உண்மையுமல்ல
எழுதுகிறவன் எல்லாமே பொய்யனுமல்ல
எழுதுபவன் எழுதிக்கொண்டிருக்கிறான்
எழுத்து எழுதுபவனை எழுதிக் கொண்டிருக்கிறது//

மனதை தொட்டது

ஆடுமாடு said...

//எழுதுபவன் எழுதிக்கொண்டிருக்கிறான்
எழுத்து எழுதுபவனை எழுதிக் கொண்டிருக்கிறது//

நச்!

Anonymous said...

சரிதான் கவுஜையை எழுதத் தொடங்கிட வேண்டியதுதான் இல்லேன்னா கட்டுப்படியாவாது போலிருக்கு

சாத்தான்குளத்தான்

Anonymous said...

Yenakku Pidithathu.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...