Monday, October 29, 2007

இந்த அந்நிய தேசத்தில் குளிர்காலம் துவங்கிவிட்டது..உர்ரென என்னேரமும் உறுமியபடி இருக்கும்
குளிர்ப்பெட்டியின் மூச்சை நிறுத்தியாகிவிட்டது
சன்னல்களைத் திறக்கத்தான்
சற்று சிரமப்பட வேண்டியிருந்தது
இப்போது சன்னல்கள் வழி
புழுதியோ வெம்மையோ வருவதில்லை
காற்று எந்த நதியில் குளித்து விட்டு வந்ததோ?
இத்தனை குளுமை
பெண்ணின் அழுத்தமான
உள்ளங்கைப் பற்றல்களைப் போல…

சிற்றுந்துகளின் மேல் அதிகாலைகளில்
ஒயிலாய் துயில்கொள்ளும்
புலியின் சாயல்களையொத்த பூனைகளின் பாடுதான்
இனித் திண்டாட்டம்
விடியற்காலை குளிருக்கு அவை
இந்த மாடிப்படிக்கட்டுகளின் அடியில்
புதைந்து கொள்ள வேண்டியிருக்கும்..
அதிகாலைப் புகைகளுக்கு நடுவில்
கம்பளிச் சட்டையணிந்த
சிறார்களை இனி பார்க்கலாம்...
அதில் ஏதோ ஒரு சிறுமி
பனியில் குளித்த பூவினை நினைவுபடுத்தலாம்
புறாக்களைத் தவிர்த்து வேறுவிதமான பறவைகளும்
கண்ணில் படத் துவங்கியாயிற்று
வாரயிறுதிகளில் இனி
குளிரூட்டப்பட்ட மது புட்டிகள் தேவைப்படாது
இரவில் மொட்டைமாடியில் குளிரில்
மெல்லிதாய் நடுங்கியபடி புகைக்கலாம்
விடியவே கூடாதென வேண்டியபடி
போர்வைக்குள் ஒரு கதகதப்பான உடலை
நினைவில் தருவித்து
இறுக்கி கட்டித் தூங்கலாம்
நீளமான வீதிகளில் விரல்பிடித்தபடியும்
வெட்கிசிரித்தபடியுமாய் நடைபயிலும்
தமிழ் தேசத்து இளஞ்சோடிகளை
இன்னும் அதிக பொறாமைக் கண்ணோடு
பார்க்க நேரிடலாம்...

எப்போதும் எவருமற்று இருக்க நேர்ந்தாலும்
குளிர்காலம் மிகவும் ரம்மியமானது

7 comments:

நாகை சிவா said...

//இத்தனை குளுமை
பெண்ணின் அழுத்தமான
உள்ளங்கைப் பற்றல்களைப் போல…//

கதகதப்பா தானே இருக்கும்.. நீங்க குளுமையா இருக்கும் என்று சொல்லுறீங்க..

//அதில் ஏதோ ஒரு சிறுமி
பனியில் குளித்த பூவினை நினைவுபடுத்தலாம்//

:)

//வாரயிறுதிகளில் இனி
குளிரூட்டப்பட்ட மது புட்டிகள் தேவைப்படாது//

இனி பியர் வேணாம், சரக்கே போதுங்குறீங்க...

//எப்போதும் எவருமற்று இருக்க நேர்ந்தாலும்
குளிர்காலம் மிகவும் ரம்மியமானது//

:)

கூடவே க.போ.யா. ரம்யா கூட ரம்மி ஆடினா எப்படி இருக்கு... ;)

கோபிநாத் said...

\\குளிரூட்டப்பட்ட மது புட்டிகள் தேவைப்படாது
இரவில் மொட்டைமாடியில் குளிரில்
மெல்லிதாய் நடுங்கியபடி புகைக்கலாம்
விடியவே கூடாதென வேண்டியபடி
போர்வைக்குள் ஒரு கதகதப்பான உடலை
நினைவில் தருவித்து
இறுக்கி கட்டித் தூங்கலாம்\\

ம்ம்...அனுபவிக்கணும்...;))

கதிர் said...

சூப்பர்!

குசும்பன் said...

"தமிழ் தேசத்து இளஞ்சோடிகளை
இன்னும் அதிக பொறாமைக் கண்ணோடு
பார்க்க நேரிடலாம்... "

எல்லோருமே இப்படிதானா? விளங்கிடும் அவுங்க குடும்பம்!!

Anonymous said...

nice!!!!!!!;)

Ayyanar Viswanath said...

நல்ல விளக்கம்யா புலி :)

கோபி :)


தம்பி நெசமாத்தான் சொல்றியா :)

Ayyanar Viswanath said...

குசும்பா உன்ன மனசில வச்சிதானயா எழுதினேன் :)

நன்றி ஜெஸிலா அப்படியே தங்கமணி கிட்டயும் சொல்லுங்க :)

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...