Sunday, October 7, 2007

ஏதோ ஒரு புள்ளியில் அய்க்கியமாவதற்கான முஸ்தீபுகள் என்பதைத் தவிர்த்து நமது பறத்தல்களுக்கு வேறெந்த பெயர்களுமில்லைநிலைப்பாடு
அன்பு என்பதற்கு சுயநலம் என்கிற வார்த்தைதான் ஆகச்சரியானது.நேசித்தல் என்பதோ,காதல் என்பதோ,தியாகம் என்பதோ,துரோகம் என்பதோ தன்முனைப்பின் மற்றும் தன் சார்ந்ததின் வெளிப்பாடுகளாக மட்டும்தான் இருக்கமுடியும்.

நிகழ்
உன்னுடைய அ விற்கும் என்னுடைய அ விற்குமான இடைவெளியின் அகலத்தை வெள்ளைப் பெண்ணிற்கும் கருப்பு பெண்ணிற்கும் இடையேயான வித்தியாசங்களோடு பொருத்திக் கொள்ளலாம்.உடலமைப்பை தவிர்த்து வேறெந்த விதத்திலேயும் இரு பெண்களையும் ஒப்பிடமுடியாததைப்போல் ஒரே தளத்தில் இயங்குகிறோம் என்பதை தவிர்த்து வேறென்னவிருக்கிறது உனக்கும் எனக்கும்?.பொதுப்புத்தியானது பெண்கள் என்கிற வரையறையை தருவது போல் நம்மையும் காதலர்கள் என வரையறுத்து எந்த ஒன்றையும் ஒரு முத்திரைக்குள் அடைத்துக் கொண்டுவரும் சமூகம் தன் வழமையை செவ்வனே முடித்து விட்ட திருப்தியில் ஓரமாய் அமர்ந்து நம் செயல்பாடுகளை கவனிக்கிறது.எப்போதுமே மூடாத இக்கொள்ளி கண்களின் முன்னால்தான் உன்னுடன் பேசித்தொலைய வேண்டியிருக்கிறது.நீயும் கூட இந்த அடையாளங்களை விரும்புகிறாய் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தும் காற்றின் சாயல்களில் உன் மணற்பரப்பில் சில கீறல்களை,சில தற்காலிக அசைவுகளை மட்டும் செய்துவிட முனைந்து உன் விரல்களை பிடித்துக் கொண்டேன்.

அடையாளங்களை விரும்பிடாத பெண்ணொருத்தி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டாள்.அவளின் மரணம் குரூரமாய் இருந்தது.தான் அடையாளங்களை விரும்பினதில்லை என அவள் அடித்துக் கொண்ட தம்பட்டம் அனைத்தும் சொற்களின் வடிவம் உதறி புழுக்களின் வடிவத்தை பெறத் துவங்குகிறது.ஏதோ ஒரு புள்ளியில் அய்க்கியமாவதற்கான முஸ்தீபுகள் என்பதைத் தவிர்த்து நமது பறத்தல்களுக்கு வேறெந்த பெயர்களுமில்லை என அவள் புன்னகையோடு சொன்னபோது அவள் கழுத்தை நெறித்து விடத் தோன்றியது.அவள் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள் மீதும் அவளால் எழுதப்பட்ட பிரதிகளின் மீதும் அவளது நள்ளிரவு பேச்சுகளின் மீதும் பாசியென படியத் துவங்குகிறது பாசாங்கின் வேர்கள்.இவளது மரணம் என்னுடைய தற்கொலையின் நாட்களை தோராயமாக கணக்கிட்டு சொன்னது.அவளின் சாயல்களில் என்னையும் தற்கொலை செய்துகொள்ள தூண்டிய அவளின் பெருமுயற்சிகளுக்கிரையாகி இதோ உன்னை காதலிக்கத் துவங்குகிறேன்.

நிகழிலிருந்து பிறழ்தல்

தன்னலம் கருதா என்கிற வார்த்தையை இனி எழுதப்போகும் வரலாறுகளில் சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இந்த ஒற்றை வார்த்தைதான் நமது பரப்பு கெட்டுச் சீரழிய காரணமாய் இருந்து வந்திருக்கிறது.இனி வரப்போகும் தலைவர்கள்,வழிநடத்துவோர்,இயக்க வேர்கள்,கட்சித் தூண்கள்,சமூக காவலர்கள், மக்களின் சேவகர்கள் அனைவருக்கும் இவ்வார்த்தையை பிரயோகிக்க தடை விதித்துவிட்டால் அவர்களின் விளிம்பை கவரும் யுக்தி தகர்க்கப்படும்.அதுமட்டுமல்லாது எதிர் தலைவர்கள் எதிர்வழிநடத்துவோர் எதிர்இயக்க வேர்கள் எதிர்கட்சித் தூண்கள் எதிர்சமூக காவலர்கள் எதிர்மக்களின் சேவகர்கள் வேறெந்த வார்த்தையை பிரயோகிப்பது என்பது தெரியாமல் குழம்பிப்போவர்.மேலும் தலைவரின் வழி நடப்போர்,தலைவர் கொள்கை பரப்புவோர், மக்களிடையே தலைவர்களை கொண்டு செல்வோர் ஆகியோர் தங்களின் சுய அடையாளங்களை (புகைப்படம்,பெயர்)பயன்படுத்தவும் தடை விதித்துவிடவேண்டும் அப்படி செய்துவிட்டால் அடிவருடி, தொண்டன்,கொள்கை பரப்பு செயலன் என்பது போன்ற அப்பாவித்தனமான வார்த்தைகளையும் அகராதியிலிருந்து பெயர்த்துவிடலாம்.

அச்சு இயந்திரங்கள் மூலம் தருவிக்கப்பட்ட புரட்சியின் நிகழ் முகம் கோரமானதாய் இருக்கிறது.இன்றைய சூழல் சீர்குலைந்து போக இவ்வியந்திரங்களே துணையானது மிகப்பெரிய சோகம்.நாளேடுகள்,நம்பர் ஒன் பத்திரிக்கைகள் போன்றவற்றில் கற்பழிப்பு செய்திகளையும் நடிகைகளின் செய்தி/புகைப்படங்களையும் வெளியிட தடைவிதித்துவிடலாம். தலைவர்களின் தொலைக்காட்சிகளில் நியூஸ்,ப்ளாஷ் நியூஸ் போன்றவற்றை ஒளிபரப்ப தடை செய்துவிடலாம். மேலும் செய்தி ஊடகங்களில் கிடைக்கும் 10 சதவீதத்திற்கு அதிகமான வருவாய் அனைத்தையும் அரசாங்கத்திற்கு வரியாய் செலுத்திவிடவும் மீறினால் ஊடக உடமைகளனைத்தும் தீக்கிரையாக்கப்படுமெனவும் கடுமையான ஆணைகளை விதித்து விடலாம்.

நிலைப்பாடிலிருந்து பிறழ்தல்

எங்கேயாவது யாரிடமாவது நேசத்தின் சிறகுகள் இருக்கலாம்.எப்போதுமே பொய்க்காத,சலிக்காத,வெறுக்காத,தன்முனைப்பில்லாத,இதுவரை கிட்டியிராத,சாத்தியப்படுமென தோன்றாத அன்பென்ற கதகதப்பான ஒன்று இருந்துவிடக்கூடும் என்கிற உந்துதல்கள் இன்றைய நாளை வாழ்ந்துவிட போதுமானதாய் இருக்கிறது.

*நிகழின் முதல்வரி அ.மார்க்ஸின் வித்தியாசங்களின் அரசியலிலிருந்து எடுக்கப்பட்டது

17 comments:

நிலா said...

மாமா உங்கள பத்தி கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான் போல இருக்கு.

குசும்பன் said...

அருமையான தலைப்பு , அதை படித்துவிட்டு வந்து கருத்து சொல்கிறேன்!!!

(பதிவுமாதிரி தலைப்பை வச்சா எப்படிய்யா படிக்கிறது,பிறகு பதிவை தனியாக படிக்கனும்)

குசும்பன் said...

அபி அப்பா இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த தலைப்பை விட சிறியதாக ஒரு பதிவு போட்டு இருந்தார்:((( அவ்வ்வ்வ்வ்

Anonymous said...

எவ்வளோ பெரிய தலைப்பு, எவ்வளோ பெரிய பதிவு!!!

குசும்பன் said...

லொடுக்கு ஓடி வாங்க ஓடி வாங்க அய்யனார் பதிவு போட்டு இருக்கிறார்:))

அய்ஸ் லொடுக்கு ஊரில் இருந்து வந்தாச்சு :))))))))))))))))))))))))))

Anonymous said...

நிலாகுட்டி புஜ்ஜு செல்லம் இந்தப் பக்கமெல்லாம் வராதே.மூனு கண்ணன் இருக்கான்.

Udhayakumar said...

அய்யனார், நான் உங்கள் சொந்த கருத்துக்கள் என நினைத்து முழுதாக வாசித்து முடித்தால், ம்ம்ம்ம்... நல்ல வாசிப்பு அனுபவம். பகிர்ந்தமைக்கு நன்றி!!!

Ayyanar Viswanath said...

நிலா கண்ணு அப்பா எப்படி இருக்கார்? :)

குசும்பர்ர்ர்ர்ர்ர்..

உதயகுமார்
முதல்வரி மட்டுந்தாங்க அ.மார்க்ஸ் து கருத்தெல்லாம் நம்ம சரக்குதான்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாசிக்க நல்லாத்தானிருந்தது. :)

//கற்பழிப்பு //

இந்த வார்த்தையைத் தவிர்த்திருக்கலாம். பாலியல் பலாத்காரமென்று சொல்லலாமென்று நினைக்கிறேன். மற்றும்படிக்கு வார்த்தைகளை மாற்றிவிட்டால் தாக்கம் குறைவு என்றில்லைதான். ஆனால், வார்த்தைகளிலாவது மாற்றினால், கொஞ்சம் கொஞ்சமாக எண்ணங்கள் மாறலாமில்லையா? அதாவது கற்பு + அழிப்பு என்ற எண்ணம். இன்னொன்று போன வாரம் வானொலியில் பாதியில் கேட்ட நிகழ்ச்சியொன்றில் இந்த பாலியல் பலாத்காரம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். போன மாதம் ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றைப்பற்றிச் சொல்ல்விட்டுப் பேசியதைக் கேட்கும்போது இங்கேயும் tabooக்கள் இருக்கின்றன என்றும், நம்மூரைவிடக் கொஞ்சந்தான் மாறியிருக்கென்றும் புரிந்தது.

-மதி

கதிர் said...

எலே பஞ்சாயத்த கூட்டுங்கடா! பிராது கொடுத்தவன கட்டி இழுத்துட்டு வாங்கடா...
அய்யனாருக்கு ஒண்ணுன்னா இந்த அமீரக அன்பர்கள் சும்மா இருக்க மாட்டாங்க.
ஊருக்கு போன ஒரு பச்ச மண்ண இப்படி அநியாயமா அழுவ விட்டானுங்க...

அய்ஸ்.
ஒண்ணு கவலப்படாத ராசா இந்த வெள்ளிக்கிழமை தீவிர விசாரணை பண்ணிடலாம்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அட! ஊருக்குப்போயிருந்தீங்களா. அதான் ஆளக்காணல. சொல்லியிருந்தா.. :D

சரி அதைப்பிறகு பாப்பம். இப்போதைக்கு கதிருக்குத் துணையா நிக்கிறேன்னு சொல்லிக்கிறேன்.

-மதி

ஜே கே | J K said...

ஸ்ஸப்பா...

தலைப்ப படிச்சுட்டேன்.

ஜே கே | J K said...

முழுதும் படிச்சும் ஒன்னும் வெளங்களையே.

அய்யோ அய்யோ.....

அப்பவே சொன்னாங்க இந்த பக்கம் வராதனு. ம்ம்ம். விதி யார விட்டது.

Anonymous said...

இந்த பதிவு ஆழ்மனதின் அடித்தளத்தில் விகஸித்த எண்ணங்களின் சீறிய வெளிப்பாட்டில் சிலிர்த்த பனித்துளியின் தகவாய் ஒளிர்ந்த ஆத்மப்ரஹாசத்தின் நிகழ்வினால்....

ஹையோ...ஹையோ... நாக்கு சுளுக்கிகிச்சே...குசும்பா, சீக்கிரம் டாக்டர கூப்புடுப்பா.......

Ayyanar Viswanath said...

மதி

செய்தி ஊடகங்களைப் பற்றி பேசுமிடமாதலால் அங்கே பயன்படுத்தும் வார்த்தையை அப்படியே போட்டுவிட்டேன்.ஆனாலும் மாற்றி இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது...

ஆமாம் மதி ஒரு வாரம் போய் விட்டு வந்தேன் ..அப்புறம் முக்கியமான ஒரு விதயம் தம்பி யோட சேராதீங்க :)

Ayyanar Viswanath said...

எலேய் கதிரு தீவிர விசாரணை க்கு எம்புட்டு செலவாகும் :)

ஜேகே :)

ramachandranusha(உஷா) said...

ஆச்சரியமாய் இருக்கிறது. இவ்வளவு நீள தலைப்பை பிளாக்கர் எப்படி ஏத்துகிடுச்சு???

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...