Monday, October 29, 2007

பாதுகாப்புகளற்ற வெளியில் இயங்குகிறது சகலமும்எந்த ஒன்றின் அடிப்படையில்
நாளைக்கான வாக்குறுதிகளைத்
தருவதெனப் புரியாது
திகைத்துப்போயிருக்கிறது
நம்பிக்கைகள்
ஏற்கனவே தரப்பட்டவைகளை
திரும்பப் பெறுவதெப்படி
எனத் தெரியாமல்
தனிமைக் கூட்டின் சுவர்களில்
விடாது மோதியபடி கதறித் தீர்க்கிறது
ஆற்றாமையின் புலம்பல்கள்

எல்லாவற்றின் பின்னாலும் பல்லிளித்து நிற்கிறது
தேவைகளின் பருத்த பெருநிழல்

இயங்குதலின் அடிப்படை
மாற்றமென்பதால்
மாறிக்கொண்டே இருக்கும் நிறங்களின் மேல்
எந்தத் தவறும் இல்லை
நம்பிக்கைகள்,வாக்குறுதிகள்
என்றென்றைக்குமான சாஸ்வதங்களென்று எதுவுமில்லை

இன்றைய தினத்தில் என்னை அடையாளம் கண்டு சிரிக்கிறது
நான் வழக்கமாய் சந்திக்கும்
ஓர் கருப்பு தேசத்து குழந்தை

இந்த அந்நிய தேசத்தில் குளிர்காலம் துவங்கிவிட்டது..உர்ரென என்னேரமும் உறுமியபடி இருக்கும்
குளிர்ப்பெட்டியின் மூச்சை நிறுத்தியாகிவிட்டது
சன்னல்களைத் திறக்கத்தான்
சற்று சிரமப்பட வேண்டியிருந்தது
இப்போது சன்னல்கள் வழி
புழுதியோ வெம்மையோ வருவதில்லை
காற்று எந்த நதியில் குளித்து விட்டு வந்ததோ?
இத்தனை குளுமை
பெண்ணின் அழுத்தமான
உள்ளங்கைப் பற்றல்களைப் போல…

சிற்றுந்துகளின் மேல் அதிகாலைகளில்
ஒயிலாய் துயில்கொள்ளும்
புலியின் சாயல்களையொத்த பூனைகளின் பாடுதான்
இனித் திண்டாட்டம்
விடியற்காலை குளிருக்கு அவை
இந்த மாடிப்படிக்கட்டுகளின் அடியில்
புதைந்து கொள்ள வேண்டியிருக்கும்..
அதிகாலைப் புகைகளுக்கு நடுவில்
கம்பளிச் சட்டையணிந்த
சிறார்களை இனி பார்க்கலாம்...
அதில் ஏதோ ஒரு சிறுமி
பனியில் குளித்த பூவினை நினைவுபடுத்தலாம்
புறாக்களைத் தவிர்த்து வேறுவிதமான பறவைகளும்
கண்ணில் படத் துவங்கியாயிற்று
வாரயிறுதிகளில் இனி
குளிரூட்டப்பட்ட மது புட்டிகள் தேவைப்படாது
இரவில் மொட்டைமாடியில் குளிரில்
மெல்லிதாய் நடுங்கியபடி புகைக்கலாம்
விடியவே கூடாதென வேண்டியபடி
போர்வைக்குள் ஒரு கதகதப்பான உடலை
நினைவில் தருவித்து
இறுக்கி கட்டித் தூங்கலாம்
நீளமான வீதிகளில் விரல்பிடித்தபடியும்
வெட்கிசிரித்தபடியுமாய் நடைபயிலும்
தமிழ் தேசத்து இளஞ்சோடிகளை
இன்னும் அதிக பொறாமைக் கண்ணோடு
பார்க்க நேரிடலாம்...

எப்போதும் எவருமற்று இருக்க நேர்ந்தாலும்
குளிர்காலம் மிகவும் ரம்மியமானது

நேற்று பெய்த மழைநேற்று மழையில் தெப்பலாக நனைந்து வந்ததாய் சொன்னாய்

கடைசியாய் நான் நனைந்த நாளை நினைவுக்குள்
கொண்டு வர முயன்று தோற்றேன்
இந்த ஊரில் போன வருடம் டிசம்பர் மாத இறுதியில்
இரண்டு தினங்கள் வெகு குறைவாய் மழை பெய்தது
இந்த ஊர் மழைக்கு ஏற்றதுமில்லை..

மழையில் நனைந்த என் வீட்டு முற்றத்துப் புங்கைமரம்
கொல்லை முருங்கை, மா, கொய்யா, எலுமிச்சை மரங்களை
நினைத்துக் கொண்டேன்..
மழை ஓய்ந்தபின் மலையில் மேகக்கூட்டங்கள்
சற்று ஓய்வெடுத்து
மெல்ல விலகும் காட்சி அற்புதமானது..
என் அம்மாவின் தேநீரோடு மாடியில் தேங்கியிருக்கும் மழைநீரில்
கால்கள் துழாவியபடி நடந்த காட்சியும் வந்து போனது..
அவள் என்னறைக்கு வரும்போதெல்லாம் பின்னாலேயே மழையை
அழைத்து வந்த தினங்களை நினைத்துக்கொண்டேன்..
ஒரு நள்ளிரவில் பெருத்த சப்தங்களோடு
பூமியை நிறைத்த பெருமழையில்
இருவரும் வெகுநேரம் கட்டிக்கொண்டு அழுததும்
நினைவில் வந்து போனது..

நீ மழைபெய்ததாய் என்னிடம் சொல்லியிருக்க வேண்டாம்

Sunday, October 28, 2007

மீட்டெடுத்தல்பாதுகாப்புணர்வின் ருசியை இதுவரை அறிந்ததே இல்லை
எது கொண்டும் வாழ்வினை சமன்படுத்த முடியாமல் போகிறது
வெட்டி எறியப்பட்ட மிருகத்தின் ரத்தத் துளிகளிலிருந்து
பல்கிப் பெருகியதென ஆங்காரமாய் முன் நின்று சிரிக்கிறது
இயலாமையின் எச்சங்கள்...

எல்லாவற்றையும் தின்றுசெறிக்கும் மிக வலிமையான
மிருகமொன்றை யாரேனும் பார்த்தால் சொல்லுங்கள்!
அதற்குத் தின்னக் கொடுக்க
வழிவழியாய் வந்த ரத்தமும் சதையுமான துயரங்களும்
ஒரு போதும் மாற்றிடமுடியாத அவலங்களும்
என்னிடம் ஏராளமாயிருப்பதை..

சாம்பல் படிந்த என் வீட்டின் சுவர்களுக்கு
வண்ணங்கள் தேடியலைந்து கொண்டிருக்கிறேன்
தேவதை கதைகளில் வருவதுபோன்று
அவை ஏழு மலைகளையும் கடல்களையும் தாண்டிய
தனித்தீவில் நெருப்புக்கோளங்களுக்கு மத்தியில்
ஒரு பெட்டியினுள் வைத்துப் பூட்டப்பட்டிருக்கலாம்..

எப்படியிருப்பினும்
பறக்கும் கம்பளமும் தங்கநிற சாவியும்
கிடைக்காமலா போய்விடும்?

Wednesday, October 24, 2007

பதினான்காம் நகரமும் நானும் பிற நகரங்களும் மனிதர்களும்என் நகரத்தை எனக்காக இவர்கள் தருவதற்கு முன் பதிமூன்று நகரங்கள் இருந்தது.பதிமூன்று சிக்கலான எண் என்பதால் அதனை மாற்ற வேண்டி எல்லா நகரத்தின் கடவுளர்களும் பதினான்காவது நகரமாக என் புதிய நகரத்தை ஒரு பதிமூன்றாம் தேதி நள்ளிரவில் தோற்றுவித்தனர்.தலைவனாக என்னைத் தேர்ந்தெடுக்க இவர்களுக்கு தேவைப்பட்ட தகுதியெல்லாம் பதிமூன்றாம் தேதி நான் பிறந்திருந்தது மட்டுமே.ஒரு நகரத்தின் தலைவனாக எவ்வித தனித்தகுதியும் தேவைப்படாததின் மூலம் இவை சனநாயகத்தின் வழித்தோன்றல்களாக மட்டுமே இருக்கமுடியும் என்பது புலனாகும்.

இங்கிருக்கும் மற்ற நகரங்களின் குடிமக்களைப்போல என் நகரத்தின் குடிமக்களுக்கும் தனி அடையாளம் வேண்டி என் நகரத்தின் கடவுளிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன்.முதலில் அவர் கொம்புகள் வைப்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்.அதில் எனக்கு உடன்பாடில்லை,ஒரு மனிதனை கண்டவுடன் அவனின் 'அகம்' அடையாளம் காணப்படக்கூடியதாய் இருக்க வேண்டுமென பிடிவாதமாயிருந்தேன்.முடிவில் துளைகள் வைப்பதும்,குணத்திற்குப் பொருந்தா உடலின் பாகத்தினை மறையச் செய்துவிடுவதுமான முடிவிற்கு வந்தோம்.இப்போது இந்த நகரத்தில் வாழும் நூற்று இருபத்தி இரண்டு பேருக்கும் அடையாளம் வந்துவிட்டது.அவை கீழ்கண்டவாறு இருக்கும்

1.கால்கள் தரையில் பரவாது மிதந்து செல்வோர் கவிஞர்கள்,கலைத் தன்மை கொண்டவர்கள்.(இவர்களுக்குத் தேவைப்படாத கால்கள் கடவுளின் மூலமாய் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது).
2.அன்பில்லாத,இரக்கமில்லாத கடுமையான குணம் உடைய, இறுக்கமான நபர்களுக்கு இதயம் இருக்குமிடத்தில் பெரிய துளை இருக்கும்(நாளையடைவில் தன் குணத்தை மாற்றிக்கொண்டால் துளைகள் அடைந்து விடும்)
3.ஆண்மை இல்லாதோருக்கு வயிற்றிக்கு கீழ் பெரிய துளையொன்று இருக்கும்(பெண்கள் ஏமாறுவது தவிர்க்கப்படும் அதன் மூலம் கள்ளக் காதல்,கொலை,துரோகம் போன்ற குற்றங்கள் இல்லாமல் போகலாம்.தினத் தந்தி போன்ற நாளிதழ்கள் உருவாகாமலேயே போகக் கூடும்)
4.காதலித்து கொண்டிருப்போருக்கு உதடுகள் தேவையில்லை என முடிவெடுத்து உதடுகளை திரும்ப பெற்றுக்கொண்டாயிற்று.(காதல் மனம் சம்பந்தப் பட்டதுதானே உதடுகள் எதற்கு?)
5மேலும் ஆண் பெண்களுக்கான குறியமைப்புகளையும் மாற்றியமைத்தாயிற்று.முதல் முறை கலவி கொள்ளும் ஆண்,பெண் இருவரும் கடைசி வரை வேறொருவருடன் கலக்க முடியாத அளவிற்கு குறிகளின் தகவமைப்பு மாறிவிடுவது போன்ற அளவீடுகளை வடிவமைத்தாயிற்று(இந்த வடிவமைப்பிற்காக என் நகரத்தின் கடவுள் பதிமூன்று நாட்கள் இரவு பகலாக உழைத்தார்.ஒன்பதாம் நாள் இரவு இது சாத்தியமில்லை என்றதிற்கு நான் பிடிவாதமாய் நின்றேன்.ஒரு முறை காதலில் தோற்றுப்போனதால் இனி காதல் தோல்வி அல்லது ஏமாறுதல்/ஏமாற்றுதல் என்பதே இருக்ககூடாது என பிடிவாதமாய் நின்றேன்.ஒருவழியாய் பதினான்காம் நாள் பிறக்க பதிமூன்று நொடிகள் மீதமிருக்கும் நொடியில் இதனை வடிவமைத்தார்)

என் நகரத்தின் குடிகள் மகிழ்வாயிருந்தனர்.அவ்வப்போது எழும் பிரச்சினைகளையும் நான் சமயோசிதமாய் தீர்த்து வைத்தேன்.உதாரணத்திற்கு என் நகரத்தில் கவிஞன் என்பது பொதுப்படுத்தப்பட்ட ஒன்று.(கால்களை பிடுங்கி கொண்டோம்)ஆனால் நவீன கவிஞர்கள் ஓர் நாள் திரண்டு பிரமிள்,ஆத்மாநாம்,தேவதேவன் சாயலில் எழுதிக்கொண்டிருக்கும் எங்களுக்கும் வைரமுத்து,வாலியை அடியொற்றும் அவர்களுக்கும் கால்கள் இல்லாதிருப்பதன் மூலம் இரு பிரிவினரும் ஒருவராக கருதப்படும் அபாயம் இருப்பதாகவும் மேலும் அது தங்களுக்கு கவுரவ குறைச்சல் எனவும் குமைந்தனர்.பின்பு நான் நவீன கவிஞர்கள்,சாதா கவிஞர்கள் என இரு பிரிவுகளாகப் பிரித்தேன்.சாதா கவிஞர்களுக்கு ஒரு காலைத் திரும்ப கொடுத்துவிட்டு, நவீன கவிஞர்களை அப்படியே விட்டுவிட்டேன்.நானொரு சனநாயகத்தின் அடியொற்றி என்பதால் என்னால் எல்லோரையும் திருப்தி படுத்த முடிந்தது.மேலும் தெருவிற்கொரு மதுக்கடை திறந்து வைத்திருந்ததால் பெரும்பாலும் எவனும் ஆழமாய் சிந்திப்பதில்லை.பின்நவீன புத்தகங்கள்/பிரதிகள் போன்றவைகளை தடை செய்திருப்பதாலும்,நிர்வாண நடனத்தை தேசியமயமாக்கி இருப்பதாலும் என் குடிமக்கள் மகிழ்வாயிருந்தனர்.

நானொரு அரசியல் உயிரி.எனக்கான அரசியலின் முடிவுகள் பெரும்பான்மை குரலின் வெளிப்பாடாக இருந்தும் எனக்கு சிறுபான்மைகளின் மேல் கவர்ச்சி இருந்தது.சக நகரங்களின் தலைவர்கள்,அவர்களின் நகர அமைப்புகள் இவற்றின் மீது பொறாமை இருந்தது.காப்ரியேல் கார்சியா மார்க்வெஸின் நகரம் எனக்கு அதிக பொறாமையைத் தூண்டியது.அவரின் நகரத்தில் பிணங்கள் நாறுவதில்லை.பூமிக்கடியில் புதைக்கப்பட்ட பிணங்களை எத்தனை ஆண்டுகள் கழித்து தோண்டி எடுத்தாலும் அவை புத்தம் புதிய மனித உடல்களாகவே இருந்தது.போர்ஹே,கால்வினோ,நெருடா நகரங்கள் சிறுபான்மையின் கவர்ச்சிகளோடு என்னை ஈர்த்தது.ரமேஷ் ப்ரேம் மாலதி மைத்ரி சகிதமாய் எனக்கு அருகாமையிலிருந்த நகரம் என்னை பொறாமையின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.அவர்களின் உலகத்தில் பிணங்கள் வேறு வடிவமெடுக்கிறது.ஒரு மனிதன் பல்வேறு பிணங்களக மாறுவதற்கான சாத்தியம் அவர்களின் உலகிற்கு இருந்தது.பிணத்துடன் பேச,உறங்க,வாழ அவர்கள் தலைப்பட்டிருந்தனர்.

என் நகரம் இத்தனை வசீகரம் இல்லையெனினும் அங்கே பிரச்சினைகள் இல்லாதிருந்தது மகிழ்வளித்தது.

நான் அவ்வப்போது கதாபாத்திரங்களின் நகரத்திற்கு சென்று வருவேன்.பால்யத்திலும் பதின்மங்களிலும் எனக்கு பிடித்திருந்த மனிதர்கள் வாழும் நகரத்திற்கு போய் வருவேன்.கடைசியாய் இரண்டு நாட்களுக்கு முன்பு போயிருந்தபோது தெரு வழக்கம்போல் குதூகலமாய் இருந்தது.கபீஷ்,ஜோ,எக்ஸ்ரே கண்,சுப்பாண்டி ஒரு புறமும் மாயாவியும் பிலிப்பும் இன்னொரு புறமுமாய் ஓடிப்பிடித்து விளையாடியதில் எழுந்த தூசிக்கு முகம் பொத்தி யமுனா வீட்டில் நுழைந்தேன்.யமுனாவின் வசீகரம் இன்னும் அதிகமாயிருந்தது.அம்மணி மட்டும் வந்து போகிறாள் என்றும் செண்பகம் எட்டியே பார்ப்பதில்லை என்றுமாய் குறைபட்டுக் கொண்டாள்.
இப்போதெல்லாம் இந்த வீதி மாறிப்போய் விட்டது.இங்கே யார் யாரோ வருகிறார்கள்.இந்த நகரத்தின் வீதிகள் அடர்வுத் தன்மை கொண்டு வருகிறது எவர் பேசுவதும் புரியவில்லை.எல்லாரும் கிறுக்கு பிடித்தவர்களைப்போல பேசிக்கொள்கிறார்கள்
என குறைபட்டுக் கொண்டாள்.நான் மெல்ல சிரித்துக் கொண்டேன்.விடைபெறுவதற்கு முன் யமுனா தி.ஜா வை பற்றிக் கேட்டாள்.
எல்லாருக்கும் சிலை வைக்கும் நகரத்தில் அவரின் சிலை இருக்கிறதா?
என்றதற்கு நான் இல்லையென்றேன்.மேலும் பூநூல் போட்டவர்களுக்கு சிலை வைப்பதில்லை என்றேன்.
நிறைய பேர் இருந்தார்களே ஒருத்தருக்கு கூடவா இல்லை?
என்றதற்கு நினைவு வந்தது போல் நகுலனுக்கு மட்டுமிருப்பதாய் சொன்னேன்.
நகுலனா!அந்த ஆள் ஒரு பைத்தியம்! நேத்து வந்து இங்க உட்கார்ந்திருந்தது ரொம்ப நேரம்..
என்றாள் நான் சத்தமாய் சிரித்தபடி பூநூல் போட்டும் பைத்தியமானவர்களுக்கு மட்டுமே சிலை வைக்கப்படும் எனச் சொல்லிவிட்டு வந்தேன்.

Saturday, October 20, 2007

ராமின் பிரபாகரும் நாஞ்சில் நாடனின் பூலிங்கமும்

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக
.........
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதேசிவாஜிக்கு அடுத்தபடியாய் கற்றது தமிழுக்குதான் அதிக பதிவுகள் வந்திருக்கின்றன.வலையில் படத்தை விலாவரியாய் அலசி பிழிந்து காயப்போட்டாயிற்று.குசும்பன், தருமி, ஆடுமாடு, கொங்குராசா,உண்மைத் தமிழன் என கலந்து கட்டி விமர்சித்திருந்தது படம் ஏதோ ஒரு விதத்தில் எல்லாரையும் பாதித்திருப்பதையே தெளிவுபடுத்தியிருந்தது.படத்தில் ஏகப்பட்ட நெருடல்கள் இருந்தாலும் பிரபாகரையும் ஆனந்தியையும் அத்தனை எளிதில் கடந்துபோய்விட முடியவில்லை.தருமி ஐயா சொல்லியிருந்தது போல ஏதோ ஒரு சங்கடம் படம் பார்த்து முடித்தபின்னும் இருந்துகொண்டேயிருந்தது. இரவு பத்து மணி காட்சிக்கு கலேரியாவில் என்னோடு சேர்த்து பதினோரு பேர் மட்டுமே திரையரங்கில் அமர்ந்திருந்தோம்.ஓய்வான மனநிலையில் கூட்டமே இல்லாத நல்ல திரையரங்கில் இரவு காட்சிக்கு உகந்ததாய் இருந்தது கற்றது தமிழ்.

ஜீவா வின் நடிப்பில் நல்ல மெருகு டிஷ்யூம் படத்திலும் இவரின் இயல்பான நடிப்பு மிகவும் பிடித்திருந்தது.பிரபாகர் கதாபாத்திரம் சில குறைகளோடு நன்றாகவே இருந்தது.மண்டைக்குள் மணியொலிக்க தனியறையில் தவிக்கும் காட்சி சிறப்பாய் வந்திருந்தது.அம்பாசமுத்திரம்,அச்சன் கோவில்,பாளையங்கோட்டை,திருவண்ணாமலை,மகாராஷ்டிரா,சென்னை என திரைப்படத்தோடு நாமும் அலைந்து விட்டு வந்த உணர்வை ஒளிப்பதிவு ஏற்படுத்தியிருந்தது.குறிப்பாய் திருவண்ணாமலை வீட்டில் எடுக்கப்பட்டிருந்த சில காட்சிகள்,மலை சுற்றும் வழியில் பதிவித்திருந்த கொஞ்ச நேரமே வந்து போகும் காட்சிகள்,அந்த வடநாட்டு மலைக்கிராம வெட்ட வெளி,ஆரம்பத்திலும் முடிவிலும் வந்து போகும் ரயில் குகை யென சிறப்பான இடத் தேர்வுகள்.கதை சொல்லும் பாணியில் எடுக்கப்பட்ட படங்கள் தமிழில் மிக குறைவு (இதற்கு முன் விருமாண்டி) இதில் வசனங்களும் மிக இயல்பாய் கவித்துவமாய் வந்திருந்தது. “பத்து வார்தைக்கு ஒருமுற நெசமாத்தான் சொல்றியான்னு எந்த பொண்ணாவது கேட்டா அவதான் ஆனந்தி” “கடிதம் எழுத தேவப்படுறதெல்லாம் ஒரு பெயர் மட்டும்தான் மத்தபடி அத அவங்க படிக்கிறாங்களா அவங்களுக்கு போய் சேருதாங்கிறதெல்லாம் முக்கியமில்லை. ””சாவுதான் என்னோட விசிட்டிங்க் கார்டு”.எல்லாவற்றையும் விட இறுதிக் காட்சி ஒரு மேஜிக்கல் ரியலிச கவிதை..

கொஞ்சம் யூமாவாசுகியின் கதாபாத்திரம்போல ஆரம்பித்த பிரபாகரை அப்படியே விட்டிருக்கலாம்.எதை எதை யோ திணித்து பிரபாகர் முழுமையடையாது போனது வருத்தமே.


திரைப்படம் போவதற்கு முன்பு நாஞ்சில் நாடனின் எட்டுத் திக்கும் மத யானை நாவலை படித்து முடித்திருந்தேன்.பி.காம் கடைசி வருடம் படிக்கும் பூலிங்கம் தன் வகுப்பில் படிக்கும் பெண்ணிடம் வெகு சாதாரணமாய் பேசிய காரணத்திற்காக தவறாய் புரிந்து கொள்ளப்பட்டு அபபெண்ணின்(செண்பகம்)தகப்பனாரால் அவமானப்படுத்தப் படுகிறான்(டீகடையில் நையப்புடைக்கிறார்கள்).வன்மம் கொண்ட பூலிங்கம் அவரின் வைக்கோல் போருக்கு தீவைக்கிறான் உயிருக்கு பயந்து ஊரை விட்டு ஓடுகிறான்.ஆந்திரா,கர்நாடகா,கோவா என அலைந்து திரிகிறான்.பெரும்பாலும் ரயில் நிலையங்கள்,ப்ளாட்பாரங்கள் என நாட்கள் போகிறது.ரயிலில் ஐஸ்கிரீம் விற்பது,கோவாவிலிருந்து மது புட்டிகள் கடத்துவது.போதை மருந்து கடத்தல், லாரியில் ஓடுவது என வாழ்வு மாறிக்கொண்டே இருக்கிறது.எங்காவது யாராவது எதிரியாக முளைத்து விடுத்துவிடுகிறார்கள்(பல சமயங்களில் இவனே இவனுக்கு).
ஒருவழியாய் பாம்பாயில் ஒரு பெரிய சாராய வியாபாரியிடம்(அண்ணாச்சி) தஞ்சமடைகிறன்.மிகுந்த பாதுகாப்புகளோடு சாராயம் கடத்துகிறான்.நண்பர்கள் வட்டம்,புதிதாய் தொழில் ஆரம்பித்தல் (வேன் வாங்கி ஆள் போட்டு ஓட்டுகிறான்) என நிலைபெறுகிறது.இவனின் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமான செண்பகம் பம்பாய்கு திருமணமாகி வருகிறாள்.அவளின் கணவரிடம் அல்லல்படுகிறாள்.பூலிங்கம் அவளை அவனிடமிருந்து மீட்டு புதிதாய் வாழ்வை தொடங்குகிறான்.

ஒரு தேர்ந்த திரைக்கதை போன்ற எழுத்து நாஞ்சில் நாடனுடையது.மனக்கண் முன் காட்சிகளாக விரியும் வார்த்தையாடல்கள்.மிகத் தெளிவான,ஆர்வமான எழுத்து என வாசிப்பின்பத்திற்கு நாஞ்சில் நாடன் முழு உத்திரவாதம்.இவரின் மற்றொரு நாவலான சதுரங்க குதிரைகள் பற்றிய கதிரின் குறிப்புகள் இங்கே.இவரின் தலைகீழ் விகிதங்கள் நாவலை தங்கர் சொல்ல மறந்த கதை என படமாக்கி இருந்தார்.நாவல்களை திரைப்படமாக்குவதின் சிக்கல்கள்,தமிழில் ஏன் சிறந்த நாவல்கள் திரைப்படமாவதில்லை என்பது குறித்து பிறிதொரு முறை பேசலாம்.

Saturday, October 13, 2007

கடிதங்களை சேகரிப்பவனின் முதல் கடிதம்


உனக்கான ஒரு கடிதத்தை எப்படியாவது எழுதிவிடவேண்டுமென்கிற தவிப்பை இன்றோடு முடித்துவிட எண்ணி இதைத் தொடங்குகிறேன்.இந்த கடிதத்தில் என்ன எழுதவென்று சரியாய் தெரியவில்லை.தொடங்க வேண்டும் என்கிற எண்ணம்தான் இருந்தது (இனி அது பார்த்துக்கொள்ளும்) இதில் ஒரு சிக்கல் என்னவெனில் ஒழுங்கான திட்டமிடல்கள் எதுவும் இல்லாததால் இதன் வடிவம் கண்டிப்பாய் ஒழுங்காய் வராது எனத்தான் தோன்றுகிறது.எந்த ஒரு ஒழுங்கும், திட்டமிடல்களும் இல்லாத ஒன்றாய்த்தான் உன்னை நேசிக்க ஆரம்பித்தேன் மிகச் சரியாய் சொல்லப்போனால் அதுதான் என் இயல்பாக இருக்கிறது. என் நேசத்தினை பிரியத்தினை உன்னிடம் சரியாய் சொல்லிவிட்டதாய்த்தான் நம்புகிறேன்.தொலைபேசியிலோ நேரிலோ சண்டை போடுவதைப் போல என்னால் கடிதத்தில் உன்னுடன் சண்டை பிடிக்க முடியாது.உன் மீதான என் கோபங்கள் என் எரிச்சல்கள் இவற்றை வார்த்தைகளாக மாற்றக்கூடிய அவகாசம்தான் எப்போதும் கிடைக்கிறதே தவிர அவற்றை எழுத்துக்களாக்கிப் பார்க்கும் வரையில் அவை நீடிப்பதில்லை.என் கடிதங்களுக்கு நீ பதில் போடுவதில்லை என்கிற உன் கொலுசு சிணுங்கல்களுக்கு பதிலாய் இருக்கட்டுமே என்கிற நினைப்பில் ஓய்வான மனநிலையில் இதை எழுத ஆரம்பிக்கிறேன்.

என் பதின்மங்களில் கடிதங்கள் மீது மிகப்பெரிய காதல் இருந்தது.யாரிடமிருந்தாவது வந்து சேரும் கடிதங்கள் என்னுள் ஏற்படுத்தும் மலர்ச்சியினை மழையில் நனைந்த மரமல்லிப் பூக்களின் வாசத்தை ஆழமாய் உள்ளிழுக்கும்போது ஏற்படும் பரவசத்தினோடு ஒப்பிடலாம். பொங்கல் மற்றும் தீபாவளி வாழ்த்து அட்டைகளை அனுப்பாத நண்பர்களை அந்த நொடியிலிருந்து வெறுக்க ஆரம்பிப்பதும், அனுப்பும் நண்பர்களை மிக அதிகமாய் நேசிக்க துவங்குவதுமான மனநிலை அப்போதெனக்கு இருந்தது.மேலதிகமாய் கடிதங்களை சேகரிப்பது என்னுடைய பிடித்தமான செயலாக இருக்கிறது. என் விடுதி முகவரிக்கு வந்து சேர்ந்த முதல் கடிதத்தை கூட இன்னும் பாதுகாப்பாய் வைத்துள்ளேன்.இந்த சேகரித்தலில் இனம் புரியாத ஒரு நேசத்தினை நான் உணர்கிறேன். எனக்காக எழுதப்பட்ட வரிகள் என்றும் என்னைத் தேடிப் பயணித்து வந்த எண்ணங்கள் என்றுமாய் நினைத்துக்கொள்வேன்.இந்த சேகரித்தல்களில் இன்னொரு அசெளகரியமும் உள்ளது.இந்த பழைய கடிதங்கள் எப்போதும் இறந்த காலத்தை கண்முன் நிறுத்துகிறது.கடிதத்தை சேகரித்து வைத்திருக்கும் பெட்டியினை திறக்கும்போது இழந்த எல்லாமும் மீண்டும் உயிர்பெறத் துவங்குவதாய் தோன்றும்.வித்தைக்காரரின் கைகளிலிருந்து திடீரெனப் பறக்கத் துவங்கும் புறாவினைப் போல மனம் சடுதியில் அந்த கடிதம் எழுதப்பட்ட சூழலுக்குத் தாவிவிடும்.பின்பு அலைந்து திரிந்து நிகழிற்கு திரும்பும்போது ஏற்படும் வெறுமையை விட வலி மிகுந்தது எதுவுமில்லை.

கங்காவின் கடிதங்கள்,ஹேமா தன் சாய்வான எழுத்துக்களில் எனக்கெழுதிய நூற்று சொச்ச கடிதங்கள், என் அப்பாவின் உடைந்த கையெழுத்து, என் அண்ணனின் கொம்பில்லாத எழுத்துக்கள், வீணாவிடமிருந்து வந்த வாழ்த்து அட்டைகள், அபூர்வமாய் சங்கமித்ரா எழுதிய ஒரே ஓர் கடிதம், கல்லூரி நண்பர்கள்,பள்ளி நண்பர்கள் எனக்கனுப்பிய வாழ்த்து அட்டைகள், “ஏதாவது வேல அங்க கெடைக்குமா மச்சான்” கள் தீபாவளி பொங்கல் வாழ்த்துக்கள் என குவிந்திருக்கும் பெட்டியினை இப்போதெல்லாம் திறக்க அவகாசம் கிடைப்பதில்லை.மேலும் ஒரு கட்டத்தில் கடிதங்கள் வருவதும், எழுதுவதும் சுத்தமாய் நின்று போயிற்று.

உன்னுடைய முதல் கடிதம் எனக்கு வந்த போன வருடத்தின் செப்டம்பர் மாதத்தின் ஒரு நாளை இப்போது நினைத்துப்பார்க்கிறேன் அந்த நாள் மிகுந்த மகிழ்ச்சியளித்தது அந்த மகிழ்வான மனநிலையை இப்போது நினைவு கூர்ந்தாலும் அந்த மகிழ்ச்சியின் மீதங்கள் நினைவில் பரவுகிறது.முதல் கடிதத்திலியே உன் காதலை சொல்லியிருந்தாய் இருபத்தியிரண்டு பக்கங்களில் நீ சொல்லியிருந்த உன் காதல் என்னை மூச்சடைக்க செயதது. கடிதம் படித்து முடித்துவிட்டு என்னால் சீராய் மூச்சுவிடமுடியவில்லை.பிட்டர்ஸ்வீட் என்கிற ஆங்கில வார்த்தைக்கு அந்த சூழலைத்தான் நினைவு கொள்கிறேன்.ஏதோ ஒரு பயமும் தவிப்பும் உடல் முழுக்க பரவத் துவங்கியது.சலனங்களை விதைப்பது மனதை அசைத்துப்பார்ப்பது நம்பிக்கைகளையும் இணக்கத்தை ஏற்படுத்துவது போன்ற செயல்களை நான் அறவே தவிர்த்து வந்தேன் எப்படியோ உன்னிடத்தில் அதன் சாத்தியக்கூறுகளை நான் செயல்படுத்தியிருப்பது எனக்கே ஆச்சர்யமான ஒன்று.

உன் காதல் புறக்கணிக்க முடியாத வலிமையான ஒன்றாய் என் முன் அமர்ந்து புன்னகைக்கிறது.என் அத்தனை விறீடல்களையும் ஒரு பொருட்டாய் மதிக்காமல் பசி கொண்ட பாம்பு இரையினை மெல்ல விழுங்க ஆரம்பிப்பதைபோல உன் நேசங்களும் பிரியமும் என்னை விழுங்க ஆரம்பிக்கிறது.உன் காதலை மொத்தமாய் எடுத்துக்கொள்ளமுடியாத என் தவிப்பினை எப்படி சொல்வது?.யாரையுமே காதலிக்க முடியாமல் போகச் செய்துவிட்ட காலத்தின் இரக்கமற்ற சாபத்தினை இடையறாது நினைத்துக் கொள்கிறேன்.இந்த கணத்தில் செய்ய இயலுவதை மட்டும், இந்த கணத்தில் என்னால் தர முடிந்ததை மட்டும் பிரியத்தின் மிகுதிகளோடு நான் தருகிறேன் என்பதைத்தவிர சொல்ல வேரெதுவும் இல்லை.

முன்பொரு காலத்தில் நான் இரவு முழுக்க விழித்திருந்து கடிதங்கள் எழுதி குவித்ததைப்போல இன்று எனக்காய் நீ விழித்திருந்து கடிதங்களை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறாய். “எதை விதைக்கிறீர்களோ அதை அறுவடை செய்கிறீர்கள்” என்பது இந்த மட்டில் உண்மையாயிற்று.என் கடிதப்பெட்டியினுள் உன் கடிதங்களையும் சேர்த்துவிட அஞ்சுகிறேன்.இந்த பெட்டி தோல்விகளின் உள்வாங்கலாக மட்டும்தான் இருக்கிறது.நீயும் மற்றுமொரு துயரத்திற்கான ஆரம்பம்தான் என்பது தெளிவாய் தெரிந்திருந்தும் இந்த விளையாட்டினை ஆரம்பிக்கிறேன்.தோற்றுவிடுவோம் எனத் தெரிந்தே விளையாடுவதில் பெரிதாய் இழப்புகள் ஏற்படாது என்பது போல காட்டிக்கொண்டாலும் இழப்புகள் எப்போதும் இழப்புகளாக மட்டுமே இருக்கின்றன.

இரண்டு பக்கங்களுக்கு மேல் எழுத முடியவில்லை தேவி!.. ஏதோ ஒரு சங்கடம் அடி மனதில் பரவுகிறது...நீளம் குறைவான இந்த கடிதத்தை நீ மிகுந்த ஆவலுடன் வேகவேகமாய் படித்துமுடிப்பதை நினைத்துக்கொள்கிறேன். அது ஐஸ்கிரீமை வேகமாய் தின்றுவிட்டு மேலும் எதிர்பார்க்கும் சிறுமியின் மனோநிலையோடு ஒத்துப்போவதாய் இருக்கலாம்.

நாட் எக்ஸிஸ்ட்,புல்ஷிட்,சுயநலம், ஃபார் த சேக் ஆஃப் செக்ஸ்,என்றெல்லாம் ஒரு பாறையின் மீதேறி சத்தமாய் பிரசிங்கித்துக்கொண்டிருந்த என் தோள் தொட்டு திருப்பினாய் இடைவிடாது சொற்களைக் கொட்டியபடியிருந்த என் உதடுகளில் மிகுந்த தவிப்புகளோடு நீ முத்தமிட்ட கணத்தில் சகலமும் உறைந்து போனது.என் விரல்களை பிடித்துக்கொண்டபடி நீ முன்னால நடந்துபோகிறாய் இதோ உன் தடம் பற்றி பின்னால் நடந்துவருகிறேன்.நீ கூட்டி செல்லும் இந்தப்பாதை நானறியாதது வியப்பும் பிரம்மிப்புமாய் வேடிக்கை பார்த்தபடி உன் பின்னால் வருகிறேன்.அடர்வான மர இடைவெளிகளில் வெகு இயல்பாய் நீ நடந்து செல்கிறாய்.வளைந்தும் நெளிந்தும் குறுகியுமான இப்பாதைகளில் உன் வெகு பழகிய லாவகமான நடை இப்பாதைகளின் ஏகபோக உரிமைக்காரி என்பதுபோல இருந்தது...நீ! அற்புதங்களால் நிறைந்தவள்.

நேசங்களை மட்டுமே கொண்டிருக்கும் உன் உலகத்தில் என்னை அனுமதித்ததிற்கு நன்றி.’இது நானறியாதது’,’நான் இதுபோன்று இருந்ததில்லை’ என இடைவிடாது புலம்புகிறேன்.’நான் உனக்கு மட்டும்தான்’ என்றபடி இறுக்கி முத்தமிடுகிறாய்.நான் கொஞ்சம் கொஞ்சமாய் இறந்துகொண்டிருக்கிறேன்.

இழப்புகள் இழப்புகளாகவும்
நேசங்கள் நேசங்களாகவும்
பிரியங்கள் பிரியங்களாகவும்
முத்தங்கள் முத்தங்களாகவும் தான்
எப்போதுமிருக்கின்றன

- நான் -

Thursday, October 11, 2007

பொதுப்படுத்தி மகிழ்தல்கொன்றை மரங்களைப் போலில்லை
இப் பேரீச்சைகள்
மஞ்சணத்திப் பூச்செடிகளையோ
அடர்வாய் பூக்கும்
ஆவாரம் பூச்செடிகளையோ போலில்லை
இந்த தொட்டிப் பூச்செடிகள்
இருப்பினும்
இவற்றைப் பார்க்கும்போது
அவற்றை நினைக்காமல் இருக்க முடிவதில்லை
அவையாய் இல்லாமலே
அவற்றை நினைவுபடுத்துவது
இவற்றின் சிறப்பா? அல்லது
நினைவு கொள்ளும் நினைவின் சிறப்பா?
எது எப்படியோ
மரங்களும் பூக்களும் அழகானவை....

சித்தனின் நண்பகல்மே ஃப்ளவர்கள் உதிரத்துவங்கிய நண்பகலில்
உறக்கம் விழித்தான் சித்தன்
நேற்றிரவுப் போதையில்
சரியாய் புணரமுடியாது போன கழிவிரக்கத்தில்
சுருங்கி கிடந்த குறியை
வெறுப்பாய் நோக்கினான்
'கெடப்' 'கெடப்' 'கமான்'
என கெக்கலித்துவிட்டுப்போன ரீட்டாவினை
மானசீகமாய் இரத்தம் கொப்பளிக்க
மூன்று முறை புணர்ந்தோய்ந்ததில்
பிசுபிசுத்தது உள்ளாடை
படுத்த வாக்கில் கழட்டியெறிந்து
திரும்பிப் படுத்து தூங்கிப் போனான்..

Wednesday, October 10, 2007

பசங்கள நம்பாத நிவி!!!13.08.2006 இரவு மணி 8

சாயந்திரம் வரும்போது அவன பார்த்தேன் பவி! கோரமங்களா சிக்னல் கிட்ட எவளோ ஒருத்தி அவன் முதுகில ஒட்டிட்டிருந்தா…
தெரியுமா? அந்த ராஸ்கல் போட்டிருந்த ஷர்ட் நான் வாங்கி கொடுத்தது..

யாரு? யுவனா? விடு நிவி தட்ஸ் ஆல்..விட்டது சனி ன்னு பேசாம இரு

முடியல பவி..பத்திகிட்டு வருது..எம்மேல எனக்கு ஆத்திரமா வருது..நீ வர்ர வரை ரொம்ப நேரம் குளிச்சேன் அப்பயும் எரிச்சல் போகல..

இதோ பார் நீ இந்த பாலசந்தர் ஹீரோயின் கணக்கா தண்ணில ரொம்ப நேரம் குளிக்கிற நான்சென்ஸலாம் விடு..பி ப்ராக்டிகல் நிவி..
அவன மாதிரி க்ராப்ப ஐ நெவர் சீன்.. நீ அவன விட்டது நெஜமாவே எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது..டோன் பெலிவ் திஸ் பாஸ்டர்ட்ஸ்..வேற ஏதாவது பண்ணு... படி, மியூசிக் க்ளாஸ் போ! ஏதாவது இண்ட்ரஸ்ட்ட வளர்த்துக்கோ ஜஸ்ட் ஒரு பையனோட எல்லாம் முடிஞ்சி போறதில்ல..

ஏய் நிறுத்து! டோன் அட்வைஸ் மி ப்ளீஸ்

ஓகே ஓகே அப்போ அதோ அந்த மூலையில உட்கார்ந்து அழு... ஐ நெவர் மைண்ட்

நான் ஏன் அழனும்?அதுவும் போயும் போயும் அவனுக்கா?

அப்ப ஸ்டாப் திஸ் ப்ளா ப்ளாஸ்...

ஏன் பவி உங்கிட்ட சொல்ல கூட கூடாதா?இதெல்லாம் வேற யார்கிட்ட நான் …..

ஏய் இன்னாடி இது லூசா நீ?..இதோ பார் இந்த சின்ன வட்டத்துகுள்ள இருந்து வெளியில வா! 26 வயசாச்சி உனக்கு நிறைய சம்பாதிக்கிற.. நிறைய சுதந்திரம் இருக்கு உனக்கு.. ஏன் எவனோ ஒருத்தனுக்காக உடைஞ்சி போகனும்?..பி ரிலாக்ஸ்

யெஸ்…சரி சாப்பிட எங்காவது வெளியில போகலாம் காட் டேம் ஆஸ்டல் ஃபுட்

26.08.2006 பவியின் டைரி

நிவி! என் கண்ணம்மா..நீ எப்படி என் மனசுக்குள்ள வந்த? இந்த பெங்களூரு க்கு வந்தப்ப கண்ண கட்டி காட்ல விட்டா மாதிரி இருந்தது.கோயம்புத்தூர்ல அப்பா அம்மா வோட நிம்மதியா வாழ்ந்துட்டு இந்த ஊர்,இந்த ஆஸ்டல் வாசம் வெறுப்பா வந்தது அதுவுமில்லாம இந்த பாடாவதி சாப்பாடு, மூஞ்ச எப்பவும் உர்ர்னு வச்சிருக்கிற கொலீக்ஸ் னு ரொம்ப சோர்வா இருந்தது.அப்பதான் ரூம்மேட்டா நீ வந்து சேர்ந்த உன் வெள்ளந்தியான சிரிப்புதான் உன்கிட்ட என்ன சேர்த்திச்சி. பேசும்போது எப்பவும் எதிராளியின் விரல பிடிச்சிட்டு பேசுற உன்னோட இணக்கம் உடனே உங்கூட ஒட்டிக்க தோணுச்சி..எப்பவும் சிரிக்கம்படி ஏதாவது துரு துரு ன்னு பண்ணிட்டே இருக்குற உன் சுறுசுறுப்பு, எல்லாத்தையும் விட உன் பெரிதான கண்கள் நான் ஆம்பளையா பொறந்திருந்தேன்னா உன்ன விரட்டி விரட்டி லவ் பண்ணியிருப்பேன். அட்லீஸ்ட் எனக்கொரு அண்ணன் இருந்திருந்தா அவனுக்காச்சும் உன்ன கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம்..ம்ஹிம்ம்.. எதுவும் பண்ண முடியாது..

நீ ஏண்டி இத்தனையா குழந்தையா இருக்க? இதோ பார் இந்த உலகம், இந்த சக மனிதர்கள் அத்தன நல்லவங்க இல்லமா..நம்மோட உடல் இருக்கு பத்தியா அதான் நம்மோட சாபம்.. எப்போ குனிவா? எப்படி மடக்கலாம்? எங்க தொடலாம்னு கண்கொத்தி பாம்புகளாட்டும் இந்த பாழா போன நாய்ங்க நாக்க தொங்க போட்டுட்டு அலைவானுங்க..எவனையும் நம்பாத பொண்ணே..ரிஜிட் ஆ இரு.. ஷார்ப் ஆ இரு.. நிறைய படி..தெளிவா யோசி..எங்காவது ஒருத்தன் இருப்பான் நமக்குன்னு ..நம்மள வெறும் உடலா மட்டும் பார்க்காம உள்ளங்கையில் வச்சு கொண்டாட ஒருத்தன் கிடைப்பான் அவன் நம்ம பக்கத்தில கூட இருக்கலாம் ஆனா கவனமா தேர்ந்தெடுக்கனும் ..ரொம்ப கவனமா இருக்கனும்மா வாழ்க்கையில ஏன்னா நமக்கு நிறைய சுதந்திரம் இருக்கு..

உடல்,கற்பு ன்னு இன்னும் பழைய பஞ்சாங்கமாலாம் நான் எதையும் யோசிக்கல பட் நான் பார்த்தவரை பாதுகாப்புணர்வு மட்டும்தான் நிஜம்.பொண்ணுக்கு மட்டும் ஏன் இத்தன பாதுகாப்பு தேவப்படுது அப்படின்னெல்லாம் எனக்கு தெரியல ஆனா பத்ரமா இருக்கனும்.பத்ரம் னா எதுன்னும் சரியா தெரியல என் பாட்டி, அம்மா எல்லாம் பத்ரமான வாழ்க்கைதான் வாழ்ந்திருக்காங்க நானும் பத்ரமாதான் வாழனும் அதுதான் எனக்கும் பிடிச்சிருக்கு.பெண்ணியம் பெண் சுதந்திரம் இது பத்திலாம் யோசிச்சா தல வலிக்குது.அதெல்லாம் சும்மா வெத்து விளம்பரத்துக்காக வேல இல்லாதவங்களால பேசப்படுற ஒண்ணுன்னு தோணுது.ஆனா ஒண்ணு மட்டும் நெஜம் இந்த பெண்ணியம் பேசும் ஆம்பளங்களை மட்டும் நம்பக்கூடாது.ஏன்னா பெண்ணியம் என்பது என்ன? ஆணியத்திற்கான எதிர்ப்பு.. அதுக்கு ஒத்து ஊதுறவங்களுக்கு ஆணியம் தெரிஞ்சிருக்கனும் அதாவது ஒரு ஆணாதிக்க வாதியாலதான் பெண்ணியம் பத்தி பேசமுடியும் எப்படி அன்பு இருக்கிற இடத்தில பொறாமை இருக்குதோ அதோ மாதிரி பெண்ணியம் பேசுறவனுங்ககிட்ட ஆணாதிக்கமும் மறைஞ்சு இருக்கும்

இந்த எல்லா கருமத்தையும் விட நேசிக்க தெரிஞ்ச ஒருத்தன் போதும்.அவன் குறைந்த பட்ச மனிதாபிமானம் இருக்கிறவனா இருந்தா மட்டும் போதும்.எந்த நடிப்புகளும் மிகைப்படுத்துதல்களும் இல்லாம சாதாரணமா உண்மையா இருக்குற ஒருத்தன கண்டுபிடிச்சி லவ் பண்ணனும் நிவி…

30.08.2006 இரவு 8.45

ஏய் பவி! என்ன பன்றே ஏதாவது புஸ்தகத்துக்குள்ள எப்பவும் தலைய விட்டுக்கோ.. இல்லன்னா எதையாவது டைரில கிறுக்கி தள்ளு..காட் டேம் 8 மாசத்தில ஆறு டைரில கிறுக்கி தொலைச்சிருக்க..நீ என்ன லூசா?

போடீங்..சரி இன்னா மேட்டர்? செம அழகா இருக்க இன்னிக்கு..

ஈஸ் இட் !! ஒண்ணுமில்ல சும்மாதான் அழுது வடிஞ்சிட்டே இருந்த மாதிரி இருந்தது வென்ட் சலூன்

ஓ கே

மறுபடி தலைய புஸ்தகத்துகுள்ள விடாத.. ஐ வான்னா டாக்!

ம் சொல்லு என்ன எவனையாச்சிம் லவ் பன்றியா?

மை காட்!! எப்படி தெரியும்..

எங்கூர்ல ஒரு பழமொழி இருக்கு சொல்லவா?

சொல்லித்தொல..

மொச புடிக்கிற நாய மூஞ்ச பாத்தா தெரியுமாம்

போடீங் இவள.. எரும.. சனியன்.. மாடு... ம்ஹிம்,,ம்ஹிம்ம்

சரி கூல்.. யார் பையன்?

தெரியல இன்னும் பார்க்கல

என்னாது பாக்காமலே லவ் ஆ…ஏய் இன்னாங்கடி இது அக்குரமம்

ஆமாம் பவி 2வாரமா ஆபிசுல வெட்டிதான் நியூ புராஜெக்ட் எதுவுமில்ல சும்மா ஆர்குட் ல மேயும்போது பிங் பண்ணான் பேசினோம் பேசினோம் பேசினோம்..இ ஈஸ் வெரி இண்ட்ரஸ்டிங்க்

ப்ச் போர் என்ன படிக்க விடு போய் கனவு காணூ போ!

ஏய் சொல்றத கேள் அவன் நெஜமாவே நல்லவன்

எப்படி தெரியும் உனக்கு? யு ஆர் ரியலி அ க்ராப்

ஏய் உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்க? நீ போன ஜென்மத்து பொண்ணு..

இருந்துட்டு போறேன்..நீ அவன்கிட்ட போன் நம்பர் கொடுத்திருப்பியே போ! போய் ரிங் பண்ணி பேசு!..

யா ஐ கோன்னா டூ தட்..

15.09.2006 பவியின் டைரி
நிவி நீ ஏண்டி இப்படி இருக்க?ஒவ்வொரு முறையும் இனிமே இந்த பசங்கள நம்ப போறதில்லன்னுதான் சொல்ற...ஆனா எப்படியாச்சும் எவனையாச்சும் காதலிக்க ஆரம்பிச்சுடுற ஒண்ணு தெரிஞ்சிக்கோ இந்த வேகமான உலகத்தில எப்பவும் ஒண்ணவிட ஒண்ணு பெஸ்ட் தான்.. காலம் மாறிட்டே இருக்கும் நிலையான அன்பு உண்மையான அன்புன்னுலாம் எதுவும் கிடையாது..சந்தர்ப்பத்த பயன்படுத்திக்கிறதுல யார் பெஸ்ட் அதான் முன்னால நிக்கிற கேள்வி நம்மோட பரிதாபமான சூழல் நம்ம எல்லாரையும் ஒரு இயந்திரமா ஆக்கிடுச்சி நிவி..நீ ஒவ்வொரு முறையும் கண்கலங்கிட்டு பல்ல கடிச்சிட்டு ஆத்திரமா பேசும்போது மனசு வலிக்குதுடா..

நிஜமாவே ஒரு பெண் ஆணோட மட்டும்தான் வாழ்ந்தாகனுமா?

Tuesday, October 9, 2007

பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள் - Born in to BrothelsBorn In To Brothels - Documentry (2004)

மும்பை,கொல்கத்தா போன்ற அனுமதிக்கப்பட்ட நகரங்களில் மட்டுமல்லாது இந்தியாவின் பட்டி தொட்டி மூலை முடுக்கு என எல்லா ஊர்களிலும் இருக்கிறது ஓர் சிவப்பு விளக்குப் பகுதி.
உடலை மூலதனமாக்கும் பாலியல் தொழிலாளர்களின் மீதான நமது பார்வையும் அணுகுமுறையும் ஏளன,அருவெறுக்கத்தக்க அல்லது வெறிகொண்ட உடல் பசி தீர்க்கும் தற்காலிக சதைக்கோளங்கள் என்பதாகவே இருந்துவந்திருக்கிறது. இவர்களுக்கான வாழ்வு, குடும்பம், குழந்தைகள் என்பவைகளை பெரும்பாலும் யாரும் யோசித்ததில்லை.ஆண்களை பொறுத்தவரை முலைகளாலும் யோனிகளாலும் ஆன சதைப்பிண்டம் அவ்வளவுதான். இவர்களின் வாழ்வு குறித்த புணரமைப்பு நடவடிக்கைகள் எதுவும் நமது சமூக காவலர்களால், தன்னலமில்லா தியாக தலைவர்களால், வழிகாட்டிகளால், புனிதர்களால், சமூக விடிவெள்ளிகளால் இன்றுவரை எதுவும் எடுக்கப்பட்டதில்லை.ஏன் சக மனிதர்களாக கூட நாம் பாவிப்பதில்லை.

வெளி தேசத்திலிருந்து வரும் சனா பிரிஸ்கி என்கிற புகைப்பட கலைஞர் கொல்கத்தாவின் சிவப்பு விளக்குப்பகுதிகளை பற்றிய வாழ்வை பதிவிக்க வருகிறார்.சிவப்பு விளக்குப் பகுதியை படமெடுப்பதென்பது அத்தனை சுலபமான காரியமில்லை என்பதால் அப்பகுதியிலேயே தங்குகிறார்.ஆனால் அங்கே அவர் காண நேரிடும் குழந்தைகளைப் பார்த்தபின் அவர்களுக்கு ஏதாவது செய்ய முடிவெடுக்கிறார்.தனக்கு தெரிந்த புகைப்பட கலையை சொல்லித்தருகிறார். எட்டு குழந்தைகளை (அவிஜித்,கோர்,கோச்சி,மானிக்,பூஜா,சாந்தி,சுசித்ரா,தபசி) தேர்ந்தெடுத்து ஆளுக்கொன்றாய் புகைப்பட கருவிகளை கையில் கொடுத்து விடுகிறார். உங்களுக்கு பிடித்ததை படமெடுங்கள் என சொல்லப்போக அந்த எட்டு குழந்தைகளுக்கும் புதிதான ஒரு உலகம் திறந்து கொள்கிறது.குறுகலான சந்துகளில் குதூகலத்தோடு புகைப்பட கருவியுடன் சகட்டு மேனிக்கு படங்களாக எடுத்து தள்ளுகின்றனர்.அவர்கள் எடுத்த புகைப்படங்களை கொண்டே புகைப்பட கலையை சொலித் தருகிறார் சனா.அவர்களின் கல்வி குறித்து கவலைப்படும் சனா கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் குழந்தைகளை சேர்த்துவிட முடிவெடுக்கிறார்.பள்ளியின் அனுமதி வாங்கி பெற்றோர்களை சம்மதிக்க வைத்து பிறப்பு சான்றிதழ்,ரேசன் கார்டுகளுக்காய் அலைந்து திரிந்து ஒருவழியாய் அவர்களை பள்ளியில் சேர்க்கிறார்.அவிஜித் எனும் சிறுவனின் அபார புகைப்பட ஞானத்தை கண்டறிந்து அவனை ஆம்ஸ்டர்டாமில் நடக்கும் புகைப்பட கண்காட்சிக்கு அனுப்பி வைக்கிறார்.அவனது பாஸ்போர்டுக்காய் அலைவது இன்னும் வேதனை.

நிஜ ஆவணப்படம் என்பது எத்தனை சிக்கலான ஒன்று?.வாழ்வை நேரடியாய் பதிவிப்பதென்பது எத்தனை கடினமானது?.இந்த குழந்தைகளின் வாழ்விற்காய் சனா உழைத்ததைப்போன்றே இந்த ஆவணப்படம் உருவாவதற்கும் அவர் அதிகமாய் உழைத்திருக்க வேண்டும்.எல்லாவற்றையும் விட எங்கிருந்தோ வந்த வெளிநாட்டுப் பெண்ணிற்கு நம் மக்களின் மீதிருக்கும் பற்றும் அன்பும் அவர்களின் வாழ்விற்கான அர்ப்பணிப்பும் உழைப்பும் மண்ணின் மைந்தர்களான நமக்கு இன்றுவரை ஓர் எண்ணமாக கூட தோன்றவில்லையே.மணிரத்னம் கமல் வசந்த் என தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளர்கள் இவர்களின் வாழ்வை காண்பித்து நிறைய துட்டு பார்த்ததும் பலமான கைத்தட்டல்களை பெற்றதும்தான் இன்றுவரை நாம் நிகழ்த்தி இருக்கும் சாதனை.அபூர்வமாய் ஜி.நாகராஜன் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வையும் அவலத்தையும் அதன் வலிகளோடு பதிவித்திருக்கிறார் என்பது மட்டும்தான் நம் சூழலில் ஆறுதலான ஒரே விதயம்.


இந்த ஆவணப்படம் கீழ்கண்ட விருதுகளை குவித்துள்ளது.
77th Academy Awards®
Best Documentary Feature

2005 IFP Independent Spirit Awards
DIRECTV/IFC Truer Than Fiction Award

2004 L.A. Film Critics
Winner, Best Documentary of the Year

2004 International Documentary Association
Distinguished Documentary Achievement Award

2004 National Board of Review
Winner, Best Documentary of the Year

2004 Sundance Film Festival
Audience Award

2004 Human Rights Watch
Nestor Almendros Prize for Courage in Filmmaking

2004 Seattle International Film Festival
Best Documentary Award

2004 Silverdocs Film Festival
Audience Award

2004 Full Frame Documentary Film Festival
Audience Award

2004 Atlanta Film Festival
Turner Broadcasting Audience Award

2004 Nashville Film Festival
Best Documentary and Audience Awards

2004 Cleveland Film Festival
Audience Award

2004 Amnesty International Film Festival
Audience Award

2004 Bermuda Film Festival
Best Documentary and Audience Awards

2004 Durango Film Festival
Best Documentary, Filmmaker's and Audience Awards

2004 Newport Beach Film Festival
Special Merit Award

2004 Artivist Film Festival
Children's Day Award

2004 Sydney Int'l Film Festival
Audience Award

2004 BendFilm
Audience Award

2004 BendFilm
Best Score

2004 Chicago Int'l Film Festival
The Gold Hugo for Best Documentary Feature

2004 Chicago Int'l Film Festival
The "Level Above the Rest" prize

2004 High Falls Film Festival
Audience Award for Best Documentary

2005 Portland Film Festival
Best Documentary

Ashland International Film Festival 2005
Best Documentary

Planete Doc Review, Warsaw 2005
Audience Award

உண்மை மிகுந்த வலிகளோடு இருப்பினும் அதன் சாஸ்வதம் அளப்பரியாதது.

கைவசமிருக்கும் புத்தகங்களும் திரைப்படங்களும்


அண்ணாச்சி வீட்டிற்கு ஒரு நடை போய் வந்தது,சித்தார்த் வந்துவிட்டுப்போனது,ஊருக்குப் போய்விட்டு வந்தது என தொடர்ச்சியான நிகழ்வுகள் மூலம் புத்தகங்களும் திரைப்படங்களும் அறையை நிரப்பத் தொடங்கிவிட்டன.படிப்பதற்கும் பார்ப்பதற்கும் வசதியாய் இருக்கவென எல்லாவற்றையும் உட்கார்ந்து பட்டியலிட்டேன். இந்த பட்டியல் உங்களுக்கும் உதவினால் மகிழ்ச்சியே….

1.சீரோ டிகிரி சாருநிவேதிதா
2.சாயாவனம் சா.கந்தசாமி
3.காலம் எம்.டி.வாசுதேவன் நாயர்
4.விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும் – அ.மார்க்ஸ்,பொ.வேல்சாமி
5.வேற்றாகி நின்ற வெளி-தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழத்துக் கவிதைகள்
6.சங்கராபரணி - மாலதி மைத்ரி
7.மெசியாவின் காயங்கள் – ஜெ.பிரான்சிஸ் கிருபா
8.வனம் புகுதல் – கலாப்ரியா
9.நான் போகும் இடமெல்லாம் – சுபாஷ் முக்யோபாத்யாய்
10.உயிர்த்திருத்தல் – யூமா வாசுகி
11.ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் – இரா.முருகன்
12.ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது – மகாதேவன்
13.தென்னிந்தியாவின் தோல் பாவைக் கூத்து – அ.கா.பெருமாள்
14.எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்தது-வைக்கம் முகம்மது பஷீர்
15.எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்
16.சதுரங்க குதிரைகள் – நாஞ்சில் நாடன்
17.இஸங்கள் ஆயிரம் – எம்.ஜி.சுரேஷ்
18.சப்தங்கள் – வைக்கம் முகம்மது பஷீர்
19.இடாகினிப் பேய்களும் – கோபி கிருஷ்ணன்
20.மானிட வாழ்வு தரும் ஆனந்தம் – கோபி கிருஷ்ணன்
21.காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் – தொகுப்பு
22.பிரமிள் கவிதைகள் – தொகுப்பு
23.புலிநகக் கொன்றை – பி.ஏ.கிருஷ்ணன்
24.முதல் 74 கவிதைகள் –யுவன்
25.பெரியாரின் இடது சாரி தமிழ்தேசியம் – சுப.வீரபாண்டியன்
26.வண்ணநிலவன் கதைகள் –தொகுப்பு
27.நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை – நாஞ்சில் நாடன்
28.மதில்கள்- வைக்கம் முகம்மது பஷீர்
29.வெள்ளெருக்கு – கண்மணி குணசேகரன்
30.வெக்கை – பூமணி
31.மஞ்சள் வெயில் – யூமா வாசுகி
32.பின் நவீனத்துவம் என்றால் என்ன? – எம்.ஜி.சுரேஷ்
33.பேச்சு-மறுபேச்சு பின்நவீனத்துவம் நோக்கி – பிரேம் ரமேஷ்
34.தனிமையின் வழி – சுகுமாரன்
35.சமயங்களின் அரசியல் – தொ.பரமசிவன்
36.பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்
37.No One Writes to the colonel – Gabriel Garcia Marquez
38.Interpreter of Maladies – Jumbha lahari
39.Message in A Bottle – Nicholas Sparks
40.The Island of the day before – Umberto Eco
41.Anthills of the Savannah – chinuva achibe
42.சூரியன் தனித்தலையும் பகல் –தமிழ்நதி
43.குற்றவுணர்வின் மொழி – பாம்பாட்டி சித்தன்
44.ஆதியிலே மாம்சம் இருந்தது – ரமேஷ்-பிரேம்
45.தந்திரபூமி – இந்திரா பார்த்தசாரதி
46.வேர்ப்பற்று – இந்திரா பார்த்தசாரதி
47.ஆத்மாநாம் படைப்புகள் – தொகுப்பு
48.சொல்லில் நனையும் காலம் – எஸ்.வி.ராஜதுரை
49.அளம் – சு.தமிழ்செல்வி
50.The way to paradise – Maria vargas llosa

இது தவிர்த்து இன்னமும் படித்து முடிக்காத நகுலன் நாவல்கள் தொகுப்பும் கொற்றவையும் சங்க இலக்கிய முழுத் தொகுப்பும் கைவசமிருக்கிறது.

திரைப்படங்கள்

1.RAN – Akira kurosawa
2.IKIRU – Akira kurosawa
3.At five in the Afternoon – Samira makhmalbaf
4.Born in to Brothels
5.KAZHCHHA –Blessy
6.Spring summer fall winter & spring
7.Eternal sunshine of spotless mind
8.A Very Long Engagement – Jean-Pierre Jeunet
9.Citizen Kane – Orsen wells
10.Combien tu mames?
11.Le clisse
12.Tunes of Glory
13.Breathless – Godard
14.A Women is a women – Godard
15.Mamma roma –Pasolini
16.Nostalgia - Andrei Tarkovesky
17.Andrew Rublev – Andrei tarkoveky
18.LA Strada –
19.Casablanca
20.The Departed
21.City of Women – Felini
22.The Clockmaker
23.Blow
24.Open your Eyes
25.Master and Commander
26.Phone Booth
27.The Silence of the lambs
28.Red Dragon
29.Munich

பட்டியல் பார்த்து லேசான ஆயாசமும் உடன் சிறு புன்னகையும் வந்தது.கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு மனுச பயலுகளே தேவையில்ல :)

அப்படியே நீங்க படிக்காம பார்க்காம வைத்திருப்பவைகளையும் பின்னூட்டத்தில சொன்னா எல்லாருக்கும் உதவியா இருக்குமே.நீளமா இருந்தா தனிப்பதிவா போடுங்களேன்.

Monday, October 8, 2007

என் பக்கமும் உங்களின் விமர்சனங்களும்


இந்தப் பக்கத்தில் இது நூறாவது இடுகை.எண்ணிக்கைகளின் மீது பெரிதாய் ஆர்வமில்லையெனினும் கணக்கீட்டு அடிப்படையில் 100 என்பது நிறைவாகத்தான் இருக்கிறது.இந்த வருடம் பிப்ரவரி கடேசி நாளுக்கு முந்தைய தினம் ஆரம்பிக்கப்பட்டது இந்த தனிமையின் இசை.தொடங்கிய சில நாட்களிலேயே வலைப்பக்கத்தின் பெயர் அர்த்தமிழந்தது.பெற்றது நண்பர்கள் எனத் தேய்ந்த வார்த்தைகளை இங்கே மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.கற்றது அதிகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வலைப்பதிவும் தமிழ்மணமும் ஒரு போதையை ஏற்படுத்தி இருக்கிறது.அடிக்ட் என்ற வர்த்தையை கூட பயன்படுத்துவது சரியாகத்தானிருக்கும்.தமிழ்மணமேட்டிஸ் என்கிற சொல்லாடலையும் முன்பே உபயோகித்திருக்கிறேன்.சமூக பிரக்ஞை அல்லது கண்ணில் படுவதை எல்லாம் எழுத்துக்களாக்கிப் பார்க்கும் ஏதோ ஒரு கெமிஸ்ட்ரி அல்லது கிறுக்குகுணம் புதிதாய் வந்து சேர்ந்திருக்கிறது.இப்போதெல்லாம் நேரிலோ தொலைபேசியிலோ பிறரிடம் பேசுவதைக் காட்டிலும் சாட்டுவது மிகவும் பிடித்தமானதாகவும் இணக்கமானதாகவும் இருக்கிறது.

இன்னும் சொல்லப்படக்கூடியதாய் புதிதான பல குணாதிசிய மாற்றங்களும் வலைக்கு வந்த பின் ஏற்பட்டிருக்கிறது.எல்லாவற்றையும் விட கிடைத்திருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையும் அன்பும் மலைப்பூட்டக் கூடியதாய் இருக்கிறது.இன்றைய தினம் வரை எந்தவித ஆபாச பின்னூட்டங்களும் வரவில்லை என்பதில் சிறுமகிழ்ச்சியே ( நீயே அசிங்க அசிங்கமா எழுதுற உன்னவிட அசிங்கமா எவனால எழுதிட முடியும்)

சன்னாசியின் பழைய வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது அடையாளங் காணப்படுவதின் சிக்கல்களை குறித்து எழுதியிருந்தது (ஐ.பி விலாசம் கண்டறியும் யுக்திகளை வலையில் சேர்த்திருப்பது தன்னுடைய பிரைவசியை பாதிப்பதாய் சொல்லியிருந்தார்)ஆச்சர்யப்படுத்தியது.ஏதோ ஒரு அடையாளத்திற்கான உந்துதல்களின் விழைவுதான் நமது எழுத்து என்கிற என் நிலைப்பாடு சற்றே மாறிப்போனது உள்ளே தகிக்கும் அல்லது வெளிப்பட ஏங்கும் சொற்களின் எழுத்து வடிவமாக மட்டுமே இனி இந்த பக்கம் இருக்கும் என்கிற எண்ணம் அப்போது தோன்றியது.

மற்றபடி மலிந்த விளம்பர யுக்திகள் எதிலேயும் ஆர்வமில்லை.பெரும்பாலான விவாதங்களையும் தவிர்த்துவிடுவது விளம்பரமாதலின் பயம்தான்.வலை நண்பர்களின் மூலம் தெரிந்துகொண்ட புதிய திறப்புகள் இந்தப் பொழுதை மிகுந்த இணக்கமாக்குகிறது.சலிக்கும்வரை எழுதிக்கொண்டிருப்பேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இந்தப் பொழுதில் நன்றி சொல்லப்பட வேண்டிய நண்பர்களின் பட்டியல் மிக நீளம்.

இந்த பக்கம் குறித்தான உங்களின் பகிர்வுகள்,விமர்சனங்களை எதிர் நோக்குகிறேன்.புரியவில்லை/ஆபாச வர்த்தைகள் போன்ற பொத்தாம் பொதுவான கருத்துக்களை விட புதிதாய் ஏதேனும் குறைகளை சுட்டினால் மகிழ்வேன்.

Sunday, October 7, 2007

ஏதோ ஒரு புள்ளியில் அய்க்கியமாவதற்கான முஸ்தீபுகள் என்பதைத் தவிர்த்து நமது பறத்தல்களுக்கு வேறெந்த பெயர்களுமில்லைநிலைப்பாடு
அன்பு என்பதற்கு சுயநலம் என்கிற வார்த்தைதான் ஆகச்சரியானது.நேசித்தல் என்பதோ,காதல் என்பதோ,தியாகம் என்பதோ,துரோகம் என்பதோ தன்முனைப்பின் மற்றும் தன் சார்ந்ததின் வெளிப்பாடுகளாக மட்டும்தான் இருக்கமுடியும்.

நிகழ்
உன்னுடைய அ விற்கும் என்னுடைய அ விற்குமான இடைவெளியின் அகலத்தை வெள்ளைப் பெண்ணிற்கும் கருப்பு பெண்ணிற்கும் இடையேயான வித்தியாசங்களோடு பொருத்திக் கொள்ளலாம்.உடலமைப்பை தவிர்த்து வேறெந்த விதத்திலேயும் இரு பெண்களையும் ஒப்பிடமுடியாததைப்போல் ஒரே தளத்தில் இயங்குகிறோம் என்பதை தவிர்த்து வேறென்னவிருக்கிறது உனக்கும் எனக்கும்?.பொதுப்புத்தியானது பெண்கள் என்கிற வரையறையை தருவது போல் நம்மையும் காதலர்கள் என வரையறுத்து எந்த ஒன்றையும் ஒரு முத்திரைக்குள் அடைத்துக் கொண்டுவரும் சமூகம் தன் வழமையை செவ்வனே முடித்து விட்ட திருப்தியில் ஓரமாய் அமர்ந்து நம் செயல்பாடுகளை கவனிக்கிறது.எப்போதுமே மூடாத இக்கொள்ளி கண்களின் முன்னால்தான் உன்னுடன் பேசித்தொலைய வேண்டியிருக்கிறது.நீயும் கூட இந்த அடையாளங்களை விரும்புகிறாய் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தும் காற்றின் சாயல்களில் உன் மணற்பரப்பில் சில கீறல்களை,சில தற்காலிக அசைவுகளை மட்டும் செய்துவிட முனைந்து உன் விரல்களை பிடித்துக் கொண்டேன்.

அடையாளங்களை விரும்பிடாத பெண்ணொருத்தி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டாள்.அவளின் மரணம் குரூரமாய் இருந்தது.தான் அடையாளங்களை விரும்பினதில்லை என அவள் அடித்துக் கொண்ட தம்பட்டம் அனைத்தும் சொற்களின் வடிவம் உதறி புழுக்களின் வடிவத்தை பெறத் துவங்குகிறது.ஏதோ ஒரு புள்ளியில் அய்க்கியமாவதற்கான முஸ்தீபுகள் என்பதைத் தவிர்த்து நமது பறத்தல்களுக்கு வேறெந்த பெயர்களுமில்லை என அவள் புன்னகையோடு சொன்னபோது அவள் கழுத்தை நெறித்து விடத் தோன்றியது.அவள் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள் மீதும் அவளால் எழுதப்பட்ட பிரதிகளின் மீதும் அவளது நள்ளிரவு பேச்சுகளின் மீதும் பாசியென படியத் துவங்குகிறது பாசாங்கின் வேர்கள்.இவளது மரணம் என்னுடைய தற்கொலையின் நாட்களை தோராயமாக கணக்கிட்டு சொன்னது.அவளின் சாயல்களில் என்னையும் தற்கொலை செய்துகொள்ள தூண்டிய அவளின் பெருமுயற்சிகளுக்கிரையாகி இதோ உன்னை காதலிக்கத் துவங்குகிறேன்.

நிகழிலிருந்து பிறழ்தல்

தன்னலம் கருதா என்கிற வார்த்தையை இனி எழுதப்போகும் வரலாறுகளில் சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இந்த ஒற்றை வார்த்தைதான் நமது பரப்பு கெட்டுச் சீரழிய காரணமாய் இருந்து வந்திருக்கிறது.இனி வரப்போகும் தலைவர்கள்,வழிநடத்துவோர்,இயக்க வேர்கள்,கட்சித் தூண்கள்,சமூக காவலர்கள், மக்களின் சேவகர்கள் அனைவருக்கும் இவ்வார்த்தையை பிரயோகிக்க தடை விதித்துவிட்டால் அவர்களின் விளிம்பை கவரும் யுக்தி தகர்க்கப்படும்.அதுமட்டுமல்லாது எதிர் தலைவர்கள் எதிர்வழிநடத்துவோர் எதிர்இயக்க வேர்கள் எதிர்கட்சித் தூண்கள் எதிர்சமூக காவலர்கள் எதிர்மக்களின் சேவகர்கள் வேறெந்த வார்த்தையை பிரயோகிப்பது என்பது தெரியாமல் குழம்பிப்போவர்.மேலும் தலைவரின் வழி நடப்போர்,தலைவர் கொள்கை பரப்புவோர், மக்களிடையே தலைவர்களை கொண்டு செல்வோர் ஆகியோர் தங்களின் சுய அடையாளங்களை (புகைப்படம்,பெயர்)பயன்படுத்தவும் தடை விதித்துவிடவேண்டும் அப்படி செய்துவிட்டால் அடிவருடி, தொண்டன்,கொள்கை பரப்பு செயலன் என்பது போன்ற அப்பாவித்தனமான வார்த்தைகளையும் அகராதியிலிருந்து பெயர்த்துவிடலாம்.

அச்சு இயந்திரங்கள் மூலம் தருவிக்கப்பட்ட புரட்சியின் நிகழ் முகம் கோரமானதாய் இருக்கிறது.இன்றைய சூழல் சீர்குலைந்து போக இவ்வியந்திரங்களே துணையானது மிகப்பெரிய சோகம்.நாளேடுகள்,நம்பர் ஒன் பத்திரிக்கைகள் போன்றவற்றில் கற்பழிப்பு செய்திகளையும் நடிகைகளின் செய்தி/புகைப்படங்களையும் வெளியிட தடைவிதித்துவிடலாம். தலைவர்களின் தொலைக்காட்சிகளில் நியூஸ்,ப்ளாஷ் நியூஸ் போன்றவற்றை ஒளிபரப்ப தடை செய்துவிடலாம். மேலும் செய்தி ஊடகங்களில் கிடைக்கும் 10 சதவீதத்திற்கு அதிகமான வருவாய் அனைத்தையும் அரசாங்கத்திற்கு வரியாய் செலுத்திவிடவும் மீறினால் ஊடக உடமைகளனைத்தும் தீக்கிரையாக்கப்படுமெனவும் கடுமையான ஆணைகளை விதித்து விடலாம்.

நிலைப்பாடிலிருந்து பிறழ்தல்

எங்கேயாவது யாரிடமாவது நேசத்தின் சிறகுகள் இருக்கலாம்.எப்போதுமே பொய்க்காத,சலிக்காத,வெறுக்காத,தன்முனைப்பில்லாத,இதுவரை கிட்டியிராத,சாத்தியப்படுமென தோன்றாத அன்பென்ற கதகதப்பான ஒன்று இருந்துவிடக்கூடும் என்கிற உந்துதல்கள் இன்றைய நாளை வாழ்ந்துவிட போதுமானதாய் இருக்கிறது.

*நிகழின் முதல்வரி அ.மார்க்ஸின் வித்தியாசங்களின் அரசியலிலிருந்து எடுக்கப்பட்டது

Tuesday, October 2, 2007

மழைக்கால கிளர்வுகள் 3 -வழிதப்பி ஓய்தல்


மழையடித்து ஓய்ந்த பின்னிரவு பேரமைதியை கிழித்தபடி
காற்றில் அலைகிறது ஆந்தையின் ஒலி
தூக்கம் கலைந்து மெல்லிய இருளினூடே கண்கள் துழாவிப் பார்க்கையில்
சலனமில்லாது சிறு குழந்தையின் சாயல்களில் தூங்கிக்கொண்டிருக்கிறாய்

முன்னிரவில் மழையின் தாள லயத்திற்கேற்றார் போலிருந்தது
உன் முத்த சப்தங்கள்
எப்போது மழையடித்தாலும் மிருகத்தின் புணர்ச்சி வாசம்
உன் உடலிலிருந்து கசிய ஆரம்பிக்கிறது
முதல் மழைத்துளியொன்றை நீ உணரத் துவங்கியவுடன்
உன் உதடுகளுக்கு பசிக்க ஆரம்பித்துவிடுகிறது.

உதடுவழி திறந்து உள்நுழைகையில்
தொலைந்து போன குழந்தையின் தவிப்பை உன்னுடல் ஏற்கிறது
எவ்வித தவிப்புமின்றி மிக நிதானமாய் உன்னுடல் கலக்கிறேன்
நீயோ 'இம்முறை நிதானம்' 'இம்முறை நிதானமென'
ஒவ்வொருமுறையும் வழித்தப்புகிறாய்

இருளில் பிரகாசிக்கும் உன் கண்களிலிருந்து எழுதலாம் இன்னும் பல நூறு கவிதை

மழைக்கால கிளர்வுகள் 2 - நனைதலும் மகிழ்தலும்முதன் மழைத்துளியை
அண்ணாந்து வானம் பார்த்து
முகத்தில் வாங்கி
சரியாய் பதினோரு மாதங்கள் ஆயிற்று

உன்னை முத்தமிடும்போது நினைத்துக்கொண்டேன்
கடைசியாய் ஒரு பெண்ணை முத்தமிட்டது
ஆறு வருடங்களுக்கு முன்பென..

முதல் முத்தத்தின் பரவசங்களோடும்
பயங்களோடும்
நீ விழி மூடிக்கொண்ட இடைவெளியில்
விழித்துக்கொண்டது
முத்தம் பழகிய பசித்த நாவுகள்

எத்தனை முறை நனைந்தாலும் அலுப்பதே இல்லை
இந்த முத்த குளி(வி)யல் மட்டும்

Monday, October 1, 2007

மழைக்கால கிளர்வுகள் 1 - பிரியத்தை சொல்வது...இத்தனை பிரியங்களை இத்தனை நாட்களாய் எங்கே வைத்திருந்தாய்?
என்றதற்கு பதில்கள் எதுவும் என்னிடம் இல்லை...
பிரியங்கள் பிரியங்களாக மட்டுமே இருந்திருக்ககூடும்
அவைகள் வார்த்தைகளாவது
எந்த ஒரு நொடியிலெனத் தெரியவில்லை..

மேலும்

வார்த்தைப்படுத்துதல்களின் மீதிருந்த அவநம்பிக்கைகளும்
உனக்கான என் பிரியங்களை
சொல்ல விடாமல் செய்துவிட்டிருக்கலாம்.

மேலும்

பிரியத்தை சொல்ல சொற்களை விட
விரல்களையும் உதடுகளையும்தான் அதிகம் நம்புகிறேன் நான்

மேலும்
உன்னிடம் என் பிரியத்தை சொல்லித்தான் புரிய வைக்க வேண்டுமா என்ன?

மேலும்

உன்னிடம் பிரியமாய் இருந்ததை/இருப்பதை சொல்வதற்கென
இந்த இரவையும் குளிரையும் நிலவையும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்

மேலும்

என் பிரியங்களை வைத்துக் கொண்டு உன்னால் என்ன செய்துவிட முடியும்?
கசிந்துருகி அழுவதைத் தவிர

மேலும்
இத்தனை நாள் சொல்லாமல் விட்ட என் பிரியங்களை சொல்லும்போது
ஆச்சர்யத்தில் விரியும் உன் விழிகளை,
சிவக்கும் கன்னங்களை
நாணும் 'ச்ச்சீ' யை
பார்க்க விரும்பினதாலும்

மேலும்..
மேலும்..
மேலும்..

என் பிரியங்களை சொல்லி முடித்தவுடன் இப்போது முத்தமிட்டதை முன்பே யோசித்தும் வைத்திருந்தேன்

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...