Thursday, August 30, 2007

துயரத்தின் இசை – கானல் நதிகானல் நதி-யுவன் சந்திரசேகர்

நான் வெளியேற்றும் சுவாசக் காற்றில் ஒலி சேர்த்து சங்கீதமாக உருவமைக்கிறேன்.எனில் நான் உள்ளிழுக்கும் காற்றிலும் அதே சங்கீதம் இருக்கத்தானே வேண்டும்.பாடப்படாத சங்கீதத்தை உள்ளிழுத்து உயிர் தரிக்கும் விநோத ஜீவராசிதான் போலும் நான்.


மனம் இன்னும் அலைந்தபடியே இருக்கிறது.கல்கத்தாவின் வீதிகளிலும்,மாமுட்பூர் கிராமத்திலும்,காளிகாட்டிலும்,கங்கையின் கரையோரங்களிலுமாய் நினைவு சென்று தங்கிவிட்டது.தனஞ்செயனின் துயரமும் அலைவுகளும் அப்படியே மனதில் உறைந்துவிட்டது.அடர்வு மிகுந்த இந்த கணங்களை என்னசெய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் அசையாது உட்கார்ந்திருந்தேன்.நேரடியாக தாக்க வல்ல எழுத்து யுவனுடையது.இந்த நாவலை பொறுத்தமட்டில் புதிய தளத்தில் புதிய வார்த்தைகளில் எழுதப்பட்ட மோகமுள்ளின் வளர்ந்த வடிவம் என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது எனக்கப்படித்தான் பட்டது.இசையை பின்புலமாக கொண்ட செறிவான புதினமொன்றை வெகு சொற்பமாகத்தான் படித்திருக்கிறேன்.மோகமுள்ளுக்கப்புறம் லா.ச.ரா வின் தாக்ஷ்யாணியும்,பச்சைக் கனவும்தான் ஒரு அதிர்வை இசையின் பின்புலத்தோடு ஏற்படுத்தியிருந்தது.ஆனால் கானல் நதி சுத்தமாய் என் நினைவுகளை இசையில் கரையச் செய்துவிட்டிருக்கிறது.மொத்தமாய் துயரத்தை கொட்டிக் கவிழ்த்த இந்த எழுத்தின் வலிமை வார்த்தைகளில் சொல்லமுடியாதது.யுவன் சந்திரசேகரின் குள்ளசித்தன் சரித்திரம் ஏற்கனவே படித்திருந்தும் அது இந்த அளவிற்கு கட்டிப்போடவில்லை.

புனைவின் ஆரம்ப பூச்சுகளோடு துவங்குகிறது முதல் அத்தியாயம்.நம்பகத் தன்மைக்கான சாத்தியக்கூறுகளை முன் வைக்கும் விதமாக தன்ஞ்செயனின் வரலாற்றை எழுதும் கேசவ சிங் சோலங்கியின் முன்னுரையோடு துவங்குகிறது.கல்கத்தாவின் உள்ளடங்கிய கிராமமான மாமுட்பூருக்கு நம்மை கொண்டு செல்லும் யுவனின் எழுத்து யுக்தி அபரிதமானது.அழகான கிராமமொன்றில் தன் சின்னஞ்சிறு குடும்பத்தோடு வாழும் கிரிதர் முகர்ஜின் இரண்டாவது மகனான தன்ஞ்செய்முகர்ஜியின் அபரிதமான இசை ஞானமுணர்ந்து அவனை விஷ்ணுகாந்த சாஸ்திரியிடம் இசைகற்றுக்கொள்ள அனுப்புகிறார்.தனஞ்செயனின் பால்யம் மிக அழகானது அவனை சுற்றி எல்லாரும் அற்புதமான மனிதர்கள் அவனின் தேவைக்காகவே வாழ்பவர்கள்.அண்ணன் சுப்ரேதா,தங்கை அபர்ணா, இசை ஞானத்தை அன்போடு வழங்கும் குரு எல்லாவற்றிகும் மேலாய் அத்தை மித்தாலி.தனக்கு வழங்கப்பட்ட சூழலின் துணையோடு இந்துஸ்தானி இசையின் தடங்களை நேர்த்தியாய் பிடித்துக்கொள்கிறான்.

பெண்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். பெண்தான் சகல பிரச்சனைகளுக்கும் காரணம். பெண்தான் சக்தி.தனஞ்செயனையும் கடைசி வரை அலைக்கழித்தது சரயூ தான்.பதின்மங்களில் இந்த அழகான பெண்கள் எப்படியாவது மனதில் வந்து உட்கார்ந்து கொள்கின்றனர். விழியசைவில் சகலத்தையும் தட்டிப்பறிக்கின்றனர்.ஆதித்தீயின் ஊற்றுகளை அடையாளம் காட்டிவிட்டு வந்த சுவடில்லாமல் மறைந்துபோகின்றனர்.உடலழியுமட்டும் பற்றியெறிகிறது நெருப்பு. தனஞ்செயனையும் இந்த நெருப்புதான் அழிக்கிறது.பெண்ணின் இழப்புகளோடு மேதமைத் தன்மைகளும்,மதுவும் சேர்ந்து கொண்டு துயரமும் பேரின்பமும் மாற்றி மாற்றி நிகழை அலைகழிக்கிறது.இறுதியில் துயரம் மட்டும் விஞ்சி தனக்கான ஏதோ ஒன்றின் அபத்தங்களை நிருபித்துவிட்டு அற்பமாய் முடிந்து போகிறது.

பால்யம்,வாலிபம்,நாட்குறிப்பு,அழைப்பு என நான்கு பாகங்களாக நாவல் பிரிக்கப்பட்டிருக்கிறது.மனதின் ஆழ்நிலைகளை, நுட்பமான சலனங்களை,ஆழ்குளத்தின் அசைவுகளை, நகர்ந்து கொண்டிருக்கும் மணித்துளிக்கு நிகரான துல்லியமாய் நாட்குறிப்புப் பிரிவில் பதிக்கப்பட்டுள்ளது. எதைத்தேடி அலைகிறோம் என தெரியாமல் எந்த ஒன்றிலும் நிலைகொள்ளாது மிகுந்த கழிவிரக்கத்தோடும் வாழ்வின் இருளான பக்கங்களில் எதையோ தேடி அலைந்தும் நினைவின் கசப்புகளை தொலைக்க முடியாமலும் அலைக்கழியும் உடலையும் மனத்தையும் அழைப்பு எனும் பிரிவில் மிகுந்த வலிகளோடு பதிவித்திருக்கிறார்.

நான் பாடகன் அல்ல யாத்ரீகன்.சதா திரிந்துகொண்டே இருக்கிறவன் குறிப்பான திட்டம் எதுவும் கிடையாது யாத்திரை செய்வது மாத்திரமே இலக்கு.புதிய இடங்களைப் பார்க்கும் ஆவலால் அல்ல ஒரே இடத்தில் ஸ்திரமாய் இருக்கப் பிடிக்காததால் திரிகிரவன்.பாடும் நேரத்தில் என்னுள் பொங்கும் தனிமையின் ஆராதகன்.சங்கீத பூமியின் மலைப்பிரதேசங்களிலும் கடற்கரைகளிலும் வனாந்திரங்களிலும் தனியாக திரிகிறேன்.அதன் ஆளறவமற்ற இடங்களிலும் ஜன நெரிசல்களிலும் நான் சென்று சேர்வதற்கு முன்னால் என் தனிமை எனக்காகச் சென்று காத்திருக்கிறது.


நேற்றிரவில் முதன்முதலாய் ஸ்ரயூ ஒரு பெண்ணுடலாக ஆனாள்.என் கனவில் பூத்த மலரை யாரோ ஒருவன் பறித்து செல்கிறான்.இத்தனை நாளும் நேர்த்தியாக உடுத்து என்முன் நடமாடிய அழகிய பிம்பம் உடைகளை களைந்து விட்டு பளபளவென்று வழுவழுவென்று எவனோ ஒருத்தனின் ஆளுகையில் புரள்கிறது.பெரும் ஏக்கம் என்னை பீடிக்கிரது.தனியாக இருக்க கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் பரிதாபமான யோக்கியனாக இருந்துவிட்டேனே என்று குமைகிறேன்.
ஸ்ரயூவை என் உள்ளங்கைக்கு இடம்பெயர்த்தேன்.


ரகசியம் போலவும் ராட்சஸி போலவும்,ஆனந்தம்போலவும் பயங்கரம் போலவும் நீர்ப்பெருக்கு போலவும் சூரிய ஒளியில் மினுங்கும் பனித்தரை பொலவும் ஒரே சமயத்தில் காட்சி தந்த கங்கையை முடிந்த மட்டுக்கும் தன் சின்னஞ்சிறு நெஞ்சுக்குள் வாங்கி நிரப்பிக்கொள்ள முயன்றான் தன்ஞ்செயன்.


வாதையின் இடையறாது அதிரும் தந்திகளால் முடிவற்ற துயரத்தின் இசையை கசியச் செய்கிறது இந்த நாவல்.

கானல் நதி
யுவன் சந்திரசேகர்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 374
விலை:Rs.200.00

11 comments:

அருள் குமார் said...

உங்களைக் கவர்ந்த நாவல் எனில் நிச்சயம் நன்றாகத்தான் இருக்க வேண்டும். படித்துவிட ஆர்வமாயிருக்கிறேன். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

Ayyanar Viswanath said...

நன்றி அருள்குமார்

சமகால எழுத்தாளர்களில் யுவன் தவிர்க்க முடியாதவர்..குள்ளசித்தன் சரித்திரம்,பகடையாட்டம்,கானல் நதி நாவல்களும் ஏற்கனவே சிறுகதை தொகுப்பும் ஒற்றை உலகம் கவிதை தொகுப்பும் வெளிவந்துள்ளது. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் :)

கதிர் said...

இந்த புத்தகத்தை அம்பது பக்கங்கள் படித்திருப்பேன். அதற்குமேல் படிக்க முடியவில்லை. அந்தளவுக்கு அசாத்திய பொறுமை என்னிடமில்லை. :)

அருள் குமார் said...

//உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்//

நானும் அப்படித்தான் உணர்கிறேன் :)

Anonymous said...

இதுவரை இந்த புத்தகத்தைப் படிக்க வில்லை. படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.

இது அதி தீவிர பி.ந இல்லையே???

(பி.ந ன்னாவே தீவிரமான ஒன்றுதான். அது என்ன அதி தீவிர பி.ந ன்னு கேக்காதீங்க. எனக்குத் தெரியாது):)

பிச்சைப்பாத்திரம் said...

நண்பரே, நல்ல அறிமுகம். இந்த புத்தகம் பற்றிய என்னுடைய பார்வையை அறிய:

http://pitchaipathiram.blogspot.com/2007/01/blog-post.html

தாசன் said...

நல்லதோரு அறிமுகம். அவசரமாய் அந்த புத்தகத்தை தேட வைத்து விட்டீர்கள். இப்படி நீங்கள் படித்த ஏனைய சிறந்த நூல்களின் அறிமுகத்தை தொடருங்கள்.

Ayyanar Viswanath said...

வே தம்பி 50 பக்கம் படிச்சிட்டு மொழிபெயர்ப்பு நாவல்னு சொல்லி திருப்பி கொடுத்தியே நற..நற..

Ayyanar Viswanath said...

பி.ந லாம் இல்ல நந்தா தைரியமா படிங்க :)

சுரேஷ் உங்க ரிவியூ படிச்சி மற்படி என் எழுத்து படித்தபோது இன்னும் கொஞ்சம் விரிவா எழுதி இருக்கலாமோ ன்னு தோணுச்சி
நன்றி சுரேஷ்

Ayyanar Viswanath said...

தாசன் மிக்க நன்றி ..துபாய் வந்ததும் தொடர்பு கொள்ளுங்க

Anonymous said...

இந்த புத்தகத்தை சமீபமாய்த்தான் படித்தேன் அய்யனார்.. ஏற்கனவே உங்கள் விமர்சனமும் கவிதையும் மனதில் தங்கியிருந்ததும் காரணம். இழந்த காதலின் வலி இன்னமும் ஜீவித்திருக்கிறது மனதில்... ம்ம் வேறென்ன சொல்ல..

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...