Tuesday, August 21, 2007

உணர்வறிதலும் நினைவு தொலைத்தலும்அரப்பளீஸ்வரர் கோயிலை ஒட்டி வழிந்தோடும் காட்டாற்றைத் தாண்டினால் குறுகலாய் ஒற்றியடிப்பாதையொன்று தடம் விரித்திருக்கும்.இடறும் கற்களின் இடைவெளியில் பாதம் நுழைத்து காட்டுச்செடிகளுக்குத் தலைகுனிந்து ஒரு மைல் நடந்தால் செம்மேட்டிற்க்கு செல்லும் பாதையை வந்தடையலாம்.மூலிகைப் பண்ணைக்கு கொண்டு செல்லும் குறுகலான பாதையின் இடது புறம் பென்சிலால் கோடு கிழித்தாற்போல் செடிகளின் இடைவெளியினூடாய் பாதை ஒன்று புலப்படும் அது கொண்டு செல்லுமிடம் சிவானந்தருடைய ஆசிரம்.

நண்பகல் பதினோரு மணிக்கு அவ்விடத்தைச் சென்றடைந்தேன்.பள்ளத்தாக்குகளில் புதைந்து போயிருக்கும் அவ்விடம் சாலையின் மேட்டிலிருந்து பார்க்கையில் வட்டமாய்த் தெரிந்தது அருகில் நெருங்கினபின் சதுரமாய் சுற்றி கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தது.மூங்கில் கழிகளலான பெரிய கதவொன்றைத் திறக்கையில் கறுப்பாய் உயரமாய் சித்தன் ஓடி வந்தான்.அவன் உயரமும் ஆகிருதியும் கண்டு மெல்லப் பின் வாங்கினேன்.பின்னாலேயே வெள்ளைக்காரச் சிறுமி சித்தா! என அழைத்தபடி வந்தாள்.யெஸ்! என்ற அச்சிறுமியின் கேள்விக்கு சிவானந்தரைப்பார்க்க வந்திருப்பதாய் சொன்னேன்.முப்பட்டகக் கூரை வேய்ந்த அந்த வரவேற்பரையில் மூங்கிலாலான சாய்வு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது.உள்ளே சென்ற சிறுமி சிவானந்தரை அழைத்து வந்தாள்.ஆடைகளெதுவுமில்லாமல் ஒரு மனிதனை முதலில் பார்க்கக் கூசியது அவர் விழிகளைப் பார்க்கத் தடுமாறினேன்.

நீளமான தாடியும் மிதக்கும் கண்களையும் கொண்டிருந்த அவர் மெல்லச் சிரித்துக்கொண்டார்.மின்னஞ்சல் கிடைத்ததாயும் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கி கொள்ளுமாறும் சொன்னார்.உதடுகள் அசையாது பேச்சு எங்கிருந்து வருகிறது என வியந்தேன்.உணவு மற்றும் குடில் குறித்து நிவேதனாவிடம் பேசிக்கொள்ளுங்கள் என சொல்லி சென்று விட்டார்.நிவேதனா என்ற பெயர் எனக்குத் தயக்கத்தை தந்தது.தைரியத்தை வரவைத்துக்கொண்டு செந்நிற ஓடுகளால் ஆன அந்த கட்டிடத்தை நோக்கி சென்றேன்.நிவேதனா சிவப்பு நிறப்புடவை உடுத்தியிருந்தது பெருமூச்சை வரவைத்தது.எங்கிருந்து வருகிறீர்கள் என விசாரித்தபடி ரெஜிஸ்டர் புத்தகத்தில் விவரங்களை குறித்துக் கொண்ட நிவேதனா உணவு விதயங்களை கேட்டறிந்து இரவில் வெளியே செல்வதை தவிர்க்க மட்டும் கேட்டுக்கொண்டார்.குடிலுக்கான சாவியை வாங்கிக்கொண்டு மரங்களடர்ந்த அவ்வாசிரமத்தின் அடுத்த முனையிலிருக்கும் கூரை வேய்ந்த குடிலுக்குள் சென்றேன்.

ஆடைகள்தான் எவ்வளவு அபத்தமானது.ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்புதான் நமக்கிருந்த மிருக அடையாளம் தொலைந்து புத்தியில் மட்டும் மிருகம் குடியேறியிருக்க வேண்டும்.ஆண் பெண் வேற்றுமை அதைத் தொடர்ந்த சிக்கல்கள் சகலத்திற்க்கும் மூலகாரணி ஆடையாகத்தானிருக்க வேண்டும்.கலவியின்போது அவிழ்த்தெறியப்படும் ஆடைகள் மூலமாய் நாம் உள்ளும் வெளியுமாய் முழுமையான மிருகமாகிறோம்.ஏனோ நிர்வாணம் என்னை வசீகரிக்கிறது.என் தயக்கம், கூச்சம்,பெருமை, எனக்கே தெரியாமல் என் உள்மனம் கட்டமைத்துக்கொண்ட பல்வேறு பிம்பங்கள் எல்லாம் தொலைத்து இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் சக உயிரினங்களில் நானுமொருவன் என்பதை உணரச்செய்ய ஒரேவழி இந்த நிர்வாணம்தான்.

தம்மபதாவில்* உடலின் அத்தனை உணர்வுகளையும் உணர்ந்து அவற்றை முமுமையாய் புரிந்து கொள்வதே ஆரம்பப்பாடமாக இருக்கிறது.விழிப்புணர்வு என்ற நம் இயல்பான நிலையை நாம் தொலைத்துவிட்டதே சகல பிரச்சினைகளுக்கும் காரணமாயிருக்க வேண்டும்.எப்போதும் விழிப்பாயிருக்க தடை செய்யும் காரணிகளில் இந்த ஆடையும் ஒன்றாயிருக்க வேண்டும்.முதன் முறை என் ஆடைகளைந்து நான் நிர்வாணமான நொடியில் மென் காற்று என் உடலின் எல்லா பாகங்களையும் தழுவிச் சென்றபோது அப்படித்தான் தோன்றியது எனக்கு.

சூரியக்கதிர்கள் மதிய பொழுதுகளில் மட்டும் மெல்ல என் உடலைத் தொடுகிறது இந்த இதமான குளிரில் அக்கதிர்கள் என் உடலின் எல்லாத் துளைகளையும் ஊடுறுவும்போது உடல் சிலிர்த்துப்போகிறது.எதுவும் செய்யாமலே மனம் அலைவது நின்று போகிறது.பாதங்கள் மறையுமளவு வளர்ந்திருக்கும் இப்புல்வெளியில் மெல்ல என் உடலைக் கிடத்தும்போது அங்கங்கே உறைந்து போய் கிடந்த என் உடல் உணர்வுகள் அனைத்தும் விழிப்படைகின்றன.நிவேதனா முதன் முறை என்னைக் கடந்து சென்றபோது பிடுங்கித் தின்ற வெட்கமும் கூச்சமும் அடுத்த பொழுதுகளில் விட்டு விலகத்துவங்கியது.

தூக்கம் என்பது தேவைப்படவில்லை எப்போதும் விழிப்பாய் இருப்பது போன்ற உணர்வுநிலை வரத்துவங்கியது.மனம் என்ற ஒன்று சுத்தமாய் மறைந்துபோனது.சொற்களோ ஞாபகக் குப்பைகளோ எதுவும் இல்லை.அசையாத குளத்தைப் போன்று சலனமேயில்லாதிருந்தது நினைவு. மாலையில் அண்ணாந்து வானம் பார்த்தபடி படுத்துக்கிடந்தேன் மேகக் கூட்டங்களின் நகர்வுகளை விழியசைக்காது பார்த்துக்கொண்டிருந்தேன்.எந்த ஒன்றிலேயும் எவ்வளவு நேரம் நிலைத்திருக்கிறதென்றும் எப்போது அது வேறொன்றினுக்கு தாவுகிறதென்றும் சரியாய் பிடிபடாமலிருந்தது.

மேகம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் நினைவு தப்பி,விழிப்பு கடந்து மனம் தூக்கத்திலாழ்ந்துவிட்டது. காலில் ஏதோ ஊர்வது போலிருந்த உணர்வு விழிப்பைத் தந்தது.கண்விழிக்கையில் நான் படுத்திருந்த கொய்யா மரத்தடியும் சுற்றுப்புறமும் கண்ணிற்க்குத் தெரியவில்லை. இருள் கவிழ்ந்திருந்தது வானத்தில் நட்சத்திரங்கள் பளிச்சிட துப்புரவாய் மேகங்களற்றிருந்தது.அந்த பாம்பு மிக நீளமானதாய் இருந்திருக்கவேண்டும் சொரசொரப்பான அதன் வயிற்றுப்பாகம் என் காலிலிருந்து தலையை நோக்கி மெல்ல ஊர்ந்தது.பயமும் கிளர்ச்சியும் உடலில் படர ஆரம்பித்தது.பயத்தில் உடம்பு மெல்ல நடுங்குகிறது.இன்னும் அதிகமாய் உள்ளாழ்ந்து பயம் எங்கிருந்து வருகிறதோ அந்த துவக்கப்புள்ளியைத் தேட அரம்பித்தேன்.பயத்தை உணர்வது விழிப்புணர்வின் உச்சநிலை என சொல்லப்படுகிறது பயத்தின் வேர்களைத் துழாவி கண்டுபிடித்து அதை கவனிக்க ஆரம்பிக்கும்போது அவ்வுணர்வு காணாமல் போய்விடுகிறது.அந்த பாம்பு மிக கனமாய் இருந்தது என் நடு நெற்றியில் அதன் வாலின் நுனி வழுக்கி இன்னொரு புள்ளியை நோக்கி அது ஊர்ந்தபோது மனம் ஆசுவாசம் கொண்டது.

லேசாக வியர்த்திருந்தது செயற்கையாய் உருவாக்கப்பட்டிருந்த குளத்தில் நீர் பளிங்கை ஒத்திருந்தது.நட்சத்திரங்களை பிரதிபலித்தபடி அசைவற்றிருந்ததில் இறங்கி மிதக்கத் துவங்கினேன்.நீரில் மிதந்தபடி வானம் பார்க்க சுற்றம் மறந்துபோனது.பிரபஞ்சத்துடன் முழுமையாய் கலந்துபோனேன் எந்த நொடியில் அவ்விடம் விட்டு அகன்றேன் எந்த உணர்வு என்னை அந்த நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை.

மறுநாள் கண்விழிப்பில் என் உடைகளை அணிந்து கொண்டேன்.ஆசிரமம் விட்டு வெளியில் வந்தபோது ஹோ வென இருந்தது.சிறிய பேருந்தில் ஏறி அமர்ந்தபோது எல்லாரின் பார்வைக்கும் இரையானேன் பல சோடிக் கண்கள் என்னை ஒரே நேரத்தில் பார்ப்பது பயத்தைத் தந்தது பேருந்தின் இரைச்சலுக்கு உடல் அதிர்ந்தது.படபடப்பும் பயமும் கூடியது.நடத்துனரிடம் நாமக்கல் ஒண்ணு என்கிற சொல்லை வெகு நேரமாய் சொல்லிக்கொண்டிருந்தேன் ஆனால் அது வெளியில் வரவில்லை.அப்போதுதான் உணர்ந்தேன் நான் பேசி வெகுநாள் ஆகியிருப்பதை.ஒருவழியாய் சென்னை வந்து காசி தியேட்டரில் சிக்னலில் இறங்கியபோது இரவு 10 மணி.

கோல்டனைத் தவிர்த்துவிட்டு படிக்கட்டு பார் போனேன்.முனுசாமியை அழைத்த போது அவன் நெருங்கி வந்து பதறிப்போனான் இன்னா கோலம் இது? என்ற அவன் கேள்விக்கு பதிலளிக்காமால் கூலிங்காய் என்ன இருக்கு என்றேன்.


*தம்மபதா-புத்தரின் வழி/புத்தரின் தியானமுறைகள்

7 comments:

கதிர் said...

அதிருதுய்யா. :))))

நினைச்சு பாத்தா கொடூரமா சிப்பு வருது. :))

குசும்பன் said...

சரி இதை பற்றி தனியாக பேசிவோம்!!!

"இடைவெளியில் பாதம் நுழைத்து காட்டுச்செடிகளுக்குத் தலைகுனிந்து"

யாரு நீங்களா அய்யனார்?:))) சரிதான் பார்த்து குனிந்து போங்க இல்லைன்னா மரக்கிளை மண்டையில் தட்ட போகுது??

Ayyanar Viswanath said...

பாத்து தம்பி பயந்திடப்போறாங்க

தனியா பேசி பழக்கமில்லையே :)

Anonymous said...

this is your deep experience probably, what to say no words

கோபிநாத் said...

யப்பா...தெய்வமே...இன்னும் என்ன எல்லாம் இருக்கோ :)

கோபிநாத் said...

\ குசும்பன் said...
சரி இதை பற்றி தனியாக பேசிவோம்!!!\\

எதுக்கு அவர் பேசி பிறகு..அவரு சொன்னாதை வச்சி அவரை கலாய்ச்சி பதிவு போடவா :))

அபி அப்பா said...

அந்த நிவேதனா இன்னும் இருக்காங்களா?

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...