Sunday, August 12, 2007

தூங்க இடம்தேடியலையும் பூனைக்குட்டியின் முகச்சாயல்களையொத்தவள்வீணா அதிகம் பொய் பேசுவாள்.அவளைப்பற்றிய அவளின் பெரும்பான்மைத் தகவல்கள், மற்றவர்களைப்பற்றி அவள் சொன்னவை, நிகழ்ந்தவை என சொல்லப்பட்டவை எல்லாமே பொய்களாக இருந்ததை ஒவ்வொரு முறையும் வெகு தாமதமாகத்தான் என்னால் கண்டுகொள்ள முடியும்.ஆனாலும் எனக்கு அவளின் மேல் கோபம் வராது. கோபிக்கவே முடியாத முகம் அவளுக்கு. கண்களில் எப்போதும் சின்னதாய் குறும்பொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.நன்றாய் சாப்பிட்ட பூனைக்குட்டி தூங்க இடம்தேடியலையும் முகச்சாயல்களுடன் வசீகர கன்னத்துக்குழியோடு சத்தமாய் சிரிப்பாள்.வீணா அழுதோ,கலங்கியோ, வருந்தியோ நான் பார்த்ததில்லை. சோகத்தின் சாயல்கள் கூட அவளின் பேச்சிலோ பழக்கத்திலோ இருக்காது கிண்டலும் குறும்புமாய் வளைய வருவாள்.வீணாவிற்கு பெண் தோழிகள் யாருமில்லை பனிரெண்டாம் வகுப்பில் சித்ராவோடு சில மாதங்கள் பழகி பின் சண்டைபோட்டுப் பிரிந்துவிட்டாள். வீணா எப்போதும் எங்களோடுதான் இருப்பாள்.(நான் பாலா நாச்சி செந்தில்)எங்களைத் தவிர்த்தும் அவளுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள்.பழகிய ஐந்தாம் நிமிடத்திலேயே நெருங்கிவிடுவாள்.டா வென்றும் மச்சி என்றும் உரிமையோடு கூப்பிடுவாள்.

பதினோராம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையில் பாலாவின் தங்கை சடங்கிற்கு அம்மாவை கூட்டிக்கொண்டு அவன் வீட்டிற்க்குப்போயிருந்த அன்றுதான் வீணா அறிமுகமானாள்.நான் ஆண்கள் பள்ளியிலும் அவளும் பாலாவும் டேனிஷ்மிசனிலும் படித்துவந்தோம்.பாலா அவ்வப்போது என்னைப்பற்றி அவளிடமும் அவளைப் பற்றி என்னிடமும் சொல்லியிருந்தது எங்கள் அறிமுகத்தடைகளைத் தகர்த்தது.எப்படி உடனே ஒட்டிக்கொண்டாள் என்பது இன்னமும் ஆச்சர்யமான ஒன்று. அவன் வீட்டிற்க்குப் பின்னாலிருக்கும் கொடுக்காப்புளி மரத்தடியில் கேரம்போர்டு விளையாடினோம்.டிவிஎஸ் ஓட்ட சொல்லிக்கொடுத்தேன் ஒரு பெண்ணை வெகு நெருக்கத்தில் அணுகும் தயக்கங்கள் எதுவும் இல்லையெனக்கு பெண்களுக்கான எந்த வாசனைகளும் அவளிடம் இருக்கவில்லை அல்லது எனக்கப்படி தோன்றவில்லை.வெளிப்படையான பெண்களின் மீதெல்லாம் பெரிய கவர்ச்சி ஒன்றும் ஏற்படாதது நமது தமிழ்மரபின் தவறாகத்தான் இருக்கக்கூடும்.அந்த நாளை நினைவு வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தில் 1996 ம் வருட நாட்குறிப்பில் இப்படி எழுதினேன்.உன் விரல்கள் பட்டு சிதறியது/கேரம்போர்டின் காயின்கள் மட்டுமல்ல/என் இதயமும்தான்.இந்த நாட்குறிப்பை அவள் பத்து வருடங்களுக்குப் பிறகு படித்து பெரிதும் மகிழ்ந்துபோனாள்.எனக்காக எழுதப்பட்ட கவிதையா இது என மாய்ந்துபோனாள்.

பனிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் வீணாவிற்கு கல்யாணம் முடித்துவிட்டார்கள்.பக்கத்து கிராமத்தில் விவசாயம் செய்துகொண்டிருந்த முருகனை கட்டிவைத்துவிட்டார்கள்.வீடுதேடிவந்து பத்திரிக்கை கொடுத்தாள்.என் அண்ணனை வம்புக்கிழுத்தாள். மிகவும் சந்தோஷங்களோடு கலியாணம் செய்து கொண்டு போனாள்.கல்யாணத்தில் அவளை வெட்கப்பட வைக்க படாதபாடுபட்டோம்.இன்னிக்கு ஒரு நாளாவது பொண்ணு மாதிரி இருடி என கேட்டுக்கொண்டோம்.அவள் விடாது சிரித்தாள்.எங்கம்மா தலைய குனிடி ன்னு திட்டறாங்கடா அவங்கள இன்னான்னு கேளேன் எனக் குறும்பாய் சிரித்தாள். படிப்பிற்க்காக வெளியூர் போய்விட்டாலும் விடுமுறையில் ஊருக்கு வரும்போது தவறாமல் அவள் நலன் விசாரித்துக்கொண்டதும் கூட சில வருடங்களில் விட்டுப்போனது.

தொடர்ச்சியான அலைவுகள் சென்னைக்கு 2005 ல் கொண்டு சேர்த்தது.காசி தியேட்டருக்கெதிரே இருக்கும் கோல்டன் பாரில் பாலா உளறினான் வீணா இங்கதான் மச்சி இருக்கா அவ புருசனோட ஒத்து வரல டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டாங்க கேஸ் நடந்திட்டிருக்கு என குழறி குழறி சொன்ன அவன் சட்டையைப் பிடித்தேன். ஏண்டா இவ்வளவு நாளா சொல்லல என்றதற்கு அவ யாரிடமும் சொல்ல வேண்டாம்டாடா என அழுதான்.இரண்டு நாட்களாய் மனம் அலைந்தபடியே இருந்தது.மூன்றாம் நாள் அலுவலகத் தொலைபேசியில் அழைத்தாள் அதே குரல் அதே உற்சாகம்.உன்ன உடனே பாக்கனும்டா என்றாள்.

கிண்டியில் ஆடை வடிவமைப்பு டிப்ளமோ இன்ஸ்டிடியூட்டில் அவளை ஏழு வருடங்கள் கழித்துப் பார்த்தேன்.அவளிடம் பெரிதாய் ஒன்றும் மாற்றங்களில்லை சொல்லப்போனால் இன்னும் அழகாயிருந்தாள்.மிகுந்த வருத்தங்களோடு தயங்கி தயங்கிப்பேச அவளோ நான் இப்போதாண்டா சந்தோசமா இருக்கேன்.ஒரே ஆணோட எத்தன வருசம் டா இருக்கிறது சுத்த போர்! என்றாள்.வீணாவின் உலகத்தை நான் பாலா நாச்சி என மூவரும் நிறைத்தோம்.வார இறுதிகளில் சினிமா பீச் என சுற்றிவந்தோம்.காசில்லாத மாதக் கடைசி ஞாயிற்றுகிழமைகளில் அறைக்கு வந்து சமைத்துப்போட்டாள்.சிரிப்பும் குதூகலமும் அவளோடும் அவளைச் சுற்றி இருப்பவரிடமும் இருக்கும்படி பார்த்துக்கொண்டாள்.அவ்வப்போது பிரச்சினைகளையும் கொண்டுவந்தாள்.

அவள் படிக்கும் இன்ஸ்டியூட் மாணவர்கள் இருவர் அவளை காதலிப்பதாய் சொல்லி தொல்லை கொடுப்பதாக சொன்னாள்.நாங்கள் சென்று விசாரித்ததில் வீணா இருவரிடமும் பழகி இருக்கிறாள்.ஒரு பதின்ம வயது பையன் நான் ஐ லவ் யூ ன்னு கார்டு கொடுத்தேன் மி டூ டா ன்னு சொன்னாங்க சார் என்றான்.கூட பீச்சுக்குலாம் வந்தாங்க சார் இப்படி இன்னொரு பையன்.கோபம் பொங்கி வந்தது எனக்கு இப்படித்தான் பசங்க மனச கெடுப்பியா என அவளை ஓங்கி அறைந்தேன்.அவள் சிறிது கூட கலங்கவோ வருந்தவோ இல்லை.என்ன நேசிக்கிறேன்னு ஒருத்தன் சொல்லும்போது முடியாதுன்னு எப்படிடா சொல்றது ? என கேட்டாள்.அந்த பசங்க ரத்தத்தில லட்டர் எழுதினாங்க சரி ரொம்ப முத்திடுச்சோன்னு பயந்துதான் உங்கிட்ட சொன்னேன் என சிரித்தபடியே சொன்னாள். அந்த நிமிடத்தில் அவளை அணைத்துக்கொள்ளத் தோன்றிற்று.அடித்ததிற்க்காய் மனம் வருந்தினேன்.நீ என்ன அடிச்சிட்ட இல்ல ஒழுங்கா ஐஸ்கிரீம் வாங்கித் தா! என என் குற்ற உணர்வைப் போக்கினாள்.

நாச்சியும் பாலாவும் ஊருக்குப் போயிருந்த சனிக்கிழமை மதியம் தொலைபேசினாள் என்னா ஷிப்டு டா? என்றாள் டே என்றேன் சரியென்று வைத்துவிட்டாள்.மாலை அறைக்குப் போனபோது அறையில் சிகெரெட்டை கையில் வைத்து உருட்டியபடி உட்கார்ந்திருந்தாள்.என்னைப் பார்த்து சிரிக்கவில்லை ஏதோ சிந்தனையிலிருந்தாள்.தம் அடிக்க ஆரம்பிச்சிட்டியா நாயே என்றபடி அவளிடமிருந்து சிகெரெட்டைப் பிடுங்கினேன்.சிகெரெட்ங்கிறது ஆம்பளத்தனமாடா?விழிகள் உயர்த்திக்கேட்டாள்.குறும்போ சிரிப்போ அப்போது அவ்விழிகளில் இல்லை.எனக்கு திக்கென்றது என்ன? வீணா என்ன? ..இல்லடா சிகெரெட்ங்கிறது ஆம்பளத்தனமா?மறுபடியும் கேட்டாள்.பொண்ணுங்க உடம்பென்ன ஆஷ்ட்ரே வாடா இந்த சிகெரெட்டுக்கு?எனக்கு ஒன்றும் பேசத்தோன்றவில்லை.நல்லா தூங்கிட்டிருப்பண்டா..நடுராத்திரில குடிச்சிட்டு வந்து சிகெரெட்டை என் முதுகில அணைப்பான்.அந்த பயத்திலே எனக்கு நைட்லாம் தூக்கம் வராது.நான் நைட்ல தூங்கியே ரொம்ப வருசமாச்சிடா... சரி நீ அப்படியே கொதிக்காத என்னமோ.. இந்த சிகரெட் பாத்ததும் சின்னதா ஒரு பயம் வந்தது.. என்றாள்.எனக்கு சுத்தமாய் பேச்சு வரவில்லை.என்னடி சொல்ற எனப் பிடுங்கினேன்.என் உடம்பு முழுக்க தழும்பிருக்குடா.. சிகெரெட் தழும்பு.. கருப்பா.. வட்டமா.. சின்னதா.. உள்ள வெள்ளையா.. இருக்கும் பாக்கிறியா? என விலக்கப்போன அவள் கையைப் பிடித்துக்கொண்டேன்.நீ பார்த்தபிறகு நிச்சயம் ஒரு வாரமாவது தூங்கமாட்டாடா என சகஜமானாள்.சரி இத வெளியில சொல்லிட்டிருக்காத ஏதோ திடீர்னு தோணுச்சி என்ன யாராவது அசிங்கமா திட்டினாலும் பரவாயில்லடா ஆனா பரிதாபமான ஒரு பார்வை இருக்கு பார் அப்படியே செத்துட தோணும்...நீ !இந்த மேட்டர மறந்திடு! என சொல்லி விடுவிடுவென போய்விட்டாள்.

(......................காயத்ரிக்கு)

22 comments:

த.அகிலன் said...

உங்களிற்கு மட்டும் சாத்தியமாகிற எழுத்து அய்யனார். என்னால் வாசிக்க மட்டும் தான் முடியும். உங்க எழுத்து எனக்கு புரியல என்று சொல்லமாட்டன் . நல்லாவே புரியுது. ஆனா ஒண்டு மட்டும் புரியவில்லை. அடியில காயத்திரி ஏன் வந்தாங்க அதுவும் கொஞ்சமா இடைவெளி விட்டு............

குசும்பன் said...

அய்யனார் :(

ஒன்றும் சொல்ல முடியவில்லை.

Anonymous said...

அய்யனார், வார்த்தையமைப்புகளில் வழக்கம் போல ஒரு குறையும் இல்லை.

//பெண்களுக்கான எந்த வாசனைகளும் அவளிடம் இருக்கவில்லை அல்லது எனக்கப்படி தோன்றவில்லை....வெளிப்படையான பெண்களின் மீதெல்லாம் பெரிய கவர்ச்சி ஒன்றும் ஏற்படாதது நமது தமிழ்மரபின் தவறாகத்தான் இருக்கக்கூடும்.//

//இப்படி எழுதினேன்.உன் விரல்கள் பட்டு சிதறியது/கேரம்போர்டின் காயின்கள் மட்டுமல்ல/என் இதயமும்தான்//

இது கொஞ்சம் புரியலை.
முரண்படுவது போலத் தோன்றுகிறது.

//என்ன யாராவது அசிங்கமா திட்டினாலும் பரவாயில்லடா ஆனா பரிதாபமான ஒரு பார்வை இருக்கு பார் அப்படியே செத்துட தோணும்...நீ !இந்த மேட்டர மறந்திடு! என சொல்லி விடுவிடுவென போய்விட்டாள்.//

அருமையான வெளிப்பாடு இந்த வரிகள்..

ஆனால் பொதுவா பார்கிறப்போ ஏதோ மிஸ் ஆகற மாதிரி இருக்கு. எந்த இடமோ முரண் படுவது போல் தோன்றுகிறது. என்னவென்று சொல்லத் தெரிய வில்லை.

இன்னும் ஒரு நாலு முறை பார்க்கிறேன். ஸ்ட்ரைக் ஆச்சுன்னா மறுபடி வந்து சொல்றேன்.

ஆனால், இது கதை இப்படி இந்த இடத்தில் ஆரம்பித்தது, இந்த இடத்தில் முடிஞ்சிடுச்சு, இதன் மூலம் நான் சொல்ல வரும் கருத்து என்று எந்த விதி முறைகளும் இல்லாமல், கேள்விகளை தொக்கி நிறுத்தி முடிக்கிற சிறுகதைகள் இப்போ அதிகம் வருவதில்லை. அந்த வகையில் இந்த முயற்சி ஒரு வாவ் சொல்ல வைக்கிறது.

காயத்ரி சித்தார்த் said...

//ஆனா ஒண்டு மட்டும் புரியவில்லை. அடியில காயத்திரி ஏன் வந்தாங்க அதுவும் கொஞ்சமா இடைவெளி விட்டு............
//

அதானே? எனக்கு எதுக்கு டெடிகேட் பண்ணிருக்கீங்க அய்யனார்? நான் தானா இது? இல்ல வேற காயத்ரியா?

Anonymous said...

Mannikkavum
Ethuvum solla theriyala.

Jazeela said...

நல்ல புனைவு அய்யனார். இந்த மாதிரி பொண்ணுங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் :-)

சிவா said...

அய்யனார்,
நன்றாக எழுதுகிறீர்கள். எழுதும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி\சாயல் இருக்கும், அதை புரிந்துகொண்டால் எழுதியவர் என்ன சொல்ல வருகிறார் என்பது விளங்கும். உங்கள் உரை நடையிலும் கவிதையின் சாரல் இருப்பதாக எனக்குத்தோன்றுகிறது.
\\நன்றாய் சாப்பிட்ட பூனைக்குட்டி தூங்க இடம்தேடியலையும் முகச்சாயல்களுடன் வசீகர கன்னத்துக்குழியோடு சத்தமாய் சிரிப்பாள் \\
இங்கு ''வசீகர கன்னத்துக்குழியோடு சத்தமாய் சிரிப்பாள்'' நன்றாய் சாப்பிட்ட பூனைக்குட்டி அடிக்கடி கண்ணை (ஆனால் நீண்ட இடைவெளியோடு) மூடித்திறக்கும். 'வசீகரமாய்' கன்னத்துக்குழியோட இங்கு உங்களிலுள்ளிருக்கும் கவிஞன் எட்டிப்பார்க்கிறான். ஆனால்''சத்தமாய் சிரிப்பாள்'' இந்த இணைப்பு எனக்கு புரியவில்லை.
\\என சொல்லி விடுவிடுவென போய்விட்டாள்.\\
விடுவிடுவென இந்த வரிகளை மீண்டும் வாசித்தேன், சாதாரணமாக எழுதும் உரைக்கோர்வையாகின் '' எனச்சொல்லி சட்டென்று சென்று விட்டாள்'' என எழுதுவார்கள். மீண்டும் கவி!. நான் எழுதியது தவறு என்றெண்ணும்பட்சத்தில் மறக்காமல் பதில் எழுதவும்(இது என் வேண்டுகோள். அடுத்த முறை பின்னூட்டம் எழுத்போது இதைப்போல் உளராமல் இருக்கலாம்) அல்லது ''இவன் என்ன பெரிய வெண்ணையா'' என்னும் எண்ணம் உங்களுக்குத்தோன்ற வாய்ப்பளிக்காமலாவது இருக்கலாம்(தற்காப்பு??). ஆழ்ந்த சிந்தனை அவசியம், ஆழ்ந்த வலியுணர்வு வாழ்க்கைக்கு நல்லதல்ல என்பது என் எண்ணம். தவறு என்றெண்ணினால் மன்னித்து விடவும்.

வாசி.

மிதக்கும்வெளி said...

இந்த சிகரெட்டில் சூடுவைப்பது என்பது ஒரு பழைய டெக்னிக், ஆண்களுக்கும் சரி, ஆண்திமிர் குறித்து விபரித்துக் கதையாடும் பிரதிகளுக்கும் சரி. அதையெல்லாம் தாண்டி ஆண்கள் எங்கோ சென்றுவிட்டார்கள், (எங்கோ என்றால் 'திருந்திவிட்டார்கள்' என்ற அர்த்ததில் அல்ல, அவர்கள் வன்முறையின் வேறுசில சாத்தியப்பாடுகளில் தங்கள் ரசிப்பை உருவாக்கத் தொடங்கிவிட்டார்கள் என்னும் அர்த்ததில்). இந்த ஒரு உறுத்தல் தவிர மற்றபடி குறைசொல்லமுடியாத பதிவு. keep it up.

Ayyanar Viswanath said...

அகிலன் / காயத்ரி
ஏதாவது ஒன்று என்னை நோக்கி செலுத்தப்படுமானால் (அன்பு / வெறுப்பு)அதை அப்படியே திருப்பியோ அல்லது இருமடங்காகவோ தந்துவிடுவது இயல்பாகிவிட்டது.காயத்ரி தன் பக்கத்தில் என வரிகளை பிடித்த வரிகளாய் சொல்லியிருப்பதால் அதற்க்குப் பதிலாய் இது :)

Ayyanar Viswanath said...

சரவணா! ரொம்ப பீல் பண்ணாத உடம்புக்கு நல்லதில்ல :)

Ayyanar Viswanath said...

நந்தா
இந்த வீணா வை ரொம்பநாளா சுமந்திட்டு அலைந்தேன்.எப்படி எழுதினாலும் நிறைவே வரவில்லை.அதிக தகவல்களைத் தந்தால் படிக்க ஆயாசமாகிவிடுமோ என்ற உறுத்தல் வேறு இருந்தது.நாம் இந்த மாதிரி பெண்களை எப்படி சொன்னாலும் தப்பாகிவிடும்.மேலதிகமாய் அந்த முரண் அப்படித்தானிருந்தது :)

Ayyanar Viswanath said...

enbee மிக்க நன்றி

ஜெஸிலா எனக்கும் எனக்கும் :)

Ayyanar Viswanath said...

வாசி

விமர்சனங்களை எப்போதுமே எனக்குப் பிடிக்கும் அடுத்தவர் நம எழுத்துக்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது பெரும்பாலானோர்க்கு ஆவலான ஒன்றுதான்..நீங்கள் நேரில் வந்து அடித்தால் கூட அதை என் எழுத்தின் வெற்றியாகத்தான் கருதுவேனே தவிர /''இவன் என்ன பெரிய வெண்ணையா''/ என்ற எண்ணமெல்லாம் நிச்சயமாக தோன்றாது.

கவிதை வடிவத்திலிருந்து இன்னும் என்னால் மீளமுடியவில்லை..வீணா சிரிக்கும்போது கன்னத்தில் குழிவிழும் என்பதைத்தான் சுத்தி சுத்தி எழுதினேன் :)

Ayyanar Viswanath said...

சுகுணா

அந்த கிராமத்து விவசாயிக்கு சிகெரெட் அனுகுமுறைதான் தெரிஞ்சிருக்கும்போல
:)

கப்பி | Kappi said...

excellent!

Anonymous said...

அய்யனார், புலம்பெயர்ந்த வாழ்வு நிறைய விசயங்களை ஆறுதலாக யோசிக்க வைத்து... நிதானமாய் எழுத வைக்கின்றன போலும்.
......
இந்த ..
/சடங்கிற்க்கு...
வீட்டிற்க்கு...
வீணாவிற்க்கு...
அதற்க்கு... /
'ற்' க்குப்பிறகு 'க்' வராதுதானே (ஏற்கனவே பெயரிலியும் எங்கையோ ஓர் பதிவில் சுட்டிக்காட்டியதாய் நினைவு). வாசிக்கும்போது சற்று உறுத்தலாய் இருந்தது. பிழையில்லாமல் ஒரு வாக்கியத்தைக் கூட எழுத முடியாதவன் இதேயேன் எனக்குச் சொல்கின்றான் என்று நீங்கள் நினைக்கமாட்டீர்கள் என்றே நம்புகின்றேன் :-).

கோபிநாத் said...

தெய்வமே கலக்கிட்டிங்க ;-))

Anonymous said...

Arumanyana nadai... Intha Kathai thodaruma? Ippo veena yenna pannuranga?

Ayyanardasan

Anonymous said...

;(( ம்ம்ம்ம்ம் ரொம்ப முத்திடுச்சி

Ayyanar Viswanath said...

thanx kappi

Ayyanar Viswanath said...

டிசே
நிழலைப்போல பின் தொடரும் பொடிசுகளை பத்திரமாய் கரை சேர்ப்பது
முன்னால் செல்பவர்களின் கடமைதானே :)

Ayyanar Viswanath said...

தேங்கஸ் கோபி

அய்யனார்தாசா அடங்குப்பா :)

அனானி அது ஆரம்பத்தில இருந்தே அப்படித்தான்

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...