Wednesday, August 1, 2007

அஞ்சலி - இங்கமர் பெர்க்மென்சுவீடிஷ் இயக்குனரான இங்க்மர் பெர்க்மன் நேற்று முன் தினம் இறந்தது சற்றுமுன் மூலமாக தெரிய வந்தது.ஒரு கலைஞனின் மரணம் மட்டுமே அவனைப்பற்றி யோசிக்க வைப்பது குரூரமான நிதர்சனம்.இந்த மனிதர் உயிரோடு இருக்கிறாரா என்று கூட யோசிக்காதிருந்தது வெட்கத்தை தந்தது. வாய்கிழிய எத்தனை பேரிடம் இங்க்மர் பெர்க்மெனை சிலாகித்திருப்போம் என்பது போன்ற நினைவுகள் மேலெழும்ப குற்ற உணர்வை தவிர்க்க முடியாத நீட்டிப்பில் தி சைலன்ஸ் படத்தை நேற்றிரவு மீண்டும் பார்த்தேன்.என்னைப் பொறுத்த வரை ஒரு உண்மையான கலைஞன் என்பவன் நாளைக்கான பிரதியை இன்றே படைப்பவனாக மட்டும்தான் இருக்கமுடியும்.இங்கமர் பெர்க்மனின் இரண்டு திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன்.1957ல் வெளிவந்த Wild strewberries மற்றும் 1963ல் வெளிவந்த The silence இரண்டு படங்களும் ஏற்படுத்திய வெறுமையும் கசப்பும் வேறெந்த படங்களும் தராதது.

இவரின் திரைப்படங்களில் தனிமையை,காமத்தை.பேராசையை,வெறுமையை மனோரீதியிலாக வெகுநுட்பமாக பதிவித்திருப்பார்.எக்ஸிஸ்டென்சியலிஸ்ட் (இருத்தலிய வாதி?) என அடையாளம் காணப்படும் பெர்க்மேன் இருப்பை சந்தேகித்தல் மற்றும் புனிதங்களை கேள்விக்குட்படுத்துதல் மூலமாய் புதிய பரிமானங்களை திரைப்படங்களில் மிளிரச் செய்தவர்.

I want audiences to feel, to sense my films. This to me is much more important than their understanding them."

ஒரு திரைப்படத்தை புரிந்துகொள்வதைவிட உணர்ந்துகொள்வதுதான் எனக்கு முக்கியமாய்படுகிறதெனும் பெர்க்மென்னின் உணர்வுரீதியிலான அணுகுமுறை காட்சிப்படுத்துதல்களில் அதிக கவனத்தை எடுத்துக்கொள்கிறது.வைல்ட் ஸ்ட்ராபெர்ரிஸ் படத்தின் துவக்க காட்சியில் ஒரு கனவைப் பதிவித்திருப்பார்.இருளாய் நிழலொன்று
பின் தொடர்வதை,புரியாத வெளியின் பயத்தை, விளக்கு கம்பத்தில் தொங்கும் உடலை, தன் பிணத்தை தானே கனவில் காணும் திடுக்கிடலை நேரடியாய் மனதில் பதியவைத்தது அந்தக் காட்சி. இத்தனைக்கும் கருப்பு வெள்ளையில் அத்தகைய உணர்வை ஏற்படுத்த எத்தனை மெனக்கெட்டிருப்பார் என யோசித்தபோது பிரம்மிப்பாய் இருந்தது.அதே படத்தில் புரபசர் தன் பழைய நினைவுகளை நிகழில் இருந்தபடியே பார்க்கும்/ தொடமுயலும் கனவுதன்மையை மிக நேர்த்தியாய் பதிவித்திருப்பார்.ஒரு நாளில் நிகழும் சம்பவங்களை சொல்லும் இப்படம் எக்ஸிஸ்டென்சியலித்தின் மிகச் சரியான பிரதி என சொல்லலாம்.


நிறைவேற்றிக் கொள்ள முடியாத காமத்தின் வெறுமை,காமத்தின் மீதான பேராவல் இவரது பெரும்பாலன பட நாயகிகளின் பொதுகுணமாக இருக்கிறது.தி சைலன்ஸ் படத்தில் வரும் அன்னாவும் எஸ்தரும் வெறுமையின் உச்சம்.நுரையீரல் பாதிக்கப்பட்ட எஸ்தர் கதாபாத்திரம் விடாது புகைத்தபடியும் குடித்தபடியும் அவ்வப்போது தனது டைப்ரைட்டரில் மொழிபெயர்த்தபடியுமாய் தகிப்பு கொண்ட வெறுமையோடு படம் முழுக்க அலைகிறது.அவளது சகோதரியான அன்னா அழகாய் உடுத்திக் கொள்கிறாள் பேராவல்களோடு காதல் கொள்கிறாள்.வாசனைப் பூச்சுகளோடு நகரில் அலைகிறாள் வெளியே கொட்டி தீர்க்க முடியாத துவேசமும் வெறுப்பும் அன்னாவிற்க்கு எஸ்தரின் மேல படிந்திருக்கிரது.விமர்சகர்கள் ஒரே பெண்ணின் இருவேறு பிம்பங்கள்தான் எஸ்தரும் அன்னாவும் என்கிரார்கள்.இயல்பாகவே இவரது திரைப்படங்களில் கவிதைத்தன்மையும் பன்முகத்தன்மையும் அதிகம் விரவி இருக்கிறது.

ஜீலை 14 ,1918 ஆம் ஆண்டு ஸ்வீடனில் பிறந்தவர்.60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார்.இவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களுக்கு இவரேதான் திரைக்கதை எழுதியிருக்கிறார் (சுமார் 35 படத்திற்க்கும் மேல்) டாக்குமெண்டரி,டெலிவிசன் தொடர்களென எல்லாத்துறைகளிலும் செயலாற்றியிருக்கிறார். The Virgin Spring (1961); Through a Glass Darkly (1962); and Fanny and Alexander (1984).என்கிற மூன்று திரைப்படங்களும் சிறந்த வெளிநாட்டுப்படத்திற்க்கான அகாடமி விருதுகளைப் பெற்றது.இவரது திரைப்படங்களைப் பற்றி கேட்டபோது அவருக்குப் பிடித்த அவரின் படங்களாக மூன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். Winter Light,[11] Persona, and Cries and Whispers.இவரின் படங்கள் இவரை மிகுந்த மன அழுத்தத்திற்க்கு உள்ளாக்கி இருக்கிறது.இனிமேல் இவைகளைப் பார்க்கப் போவதில்லை என 2004 ம் ஆண்டு ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிரார்.பெர்க்மேனின் மூன்று திரைப்படங்களை (Through a Glass Darkly, Winter Light, and The Silence) trilogy என விமர்சகர்கள் வரிசைப்படுத்துகிறார்கள் ஆனால் பெர்க்மென் திட்டமிட்டு நிகழவில்லை இது என மறுக்கிறார், திரைக்கதையை முழுவதுமாய் எழுதி சரிபார்த்து விட்ட பின்பே திரைப்பட வேலைகளை துவங்குவது இவரின் வழக்கமாய் இருந்திருக்கிறது.

இரண்டு கொரியோகிராபர்கள்,ஒரு ஜர்னலிஸ்ட்,ஒரு பியானிஸ்ட்,ஒரு வித்வையென ஐந்து பெண்களை சட்டரீதியாய் திருமணம் செய்திருக்கிறார்.அதைத் தவிர்த்து 3 பெண்களிடமும் நெருக்கமிருந்தது.ஒன்பது குழந்தைகளை அதிகாரப்பூர்வமாய் தன் குழந்தைகளென் சொல்லிக்கொண்டார்.இவரது கடைசி மனைவி இங்கிரிட் வோன் ரோசனை 1971 ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாய் திருமணம் செய்திருக்கிறார்.இவர்களுக்கு பிறந்த மரியாவின் பிறந்த வருடம் 1959 :) .

இங்கமர் பெர்க்மென் பற்றிய மதியின் இடுகை

ஒப்பிடு
http://wikipedia/commons/2/27/Sv-Ingmar_Bergman.ogg

4 comments:

இளங்கோ-டிசே said...

பகிர்தலுக்கு நன்றி அய்யனார்.
......
அனாதை ஆனந்தனும் Ingmar Bergman னின் Wild Strawberries
குறித்து -இரண்டுநாட்களுக்கு முன் எழுதியதை- இங்கே பார்க்கலாம்.
http://anathai-cinema.blogspot.com/2007/07/wild-strawberries.html

Ayyanar Viswanath said...

ஆனந்தனின் சுட்டிக்கு நன்றி டிசே

Boston Bala said...

படித்தது... Scenes From an Overrated Career - New York Times

இராவணன் said...

மிக நல்ல பதிவு.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...