Tuesday, July 24, 2007

சொல் என்றொரு சொல் ரமேஷ்-ப்ரேம் -2

ஒட்டு மொத்த புத்தகமே அதிர்வைத் தரும் வாசிப்பணுவம்தான் என்றாலும்
புத்தகத்திலிருந்து சில துளிகள்

இப்படியாக அவன் கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்டிக்காக மாறிவருவதை கண்டு அவள் அசூசை கொண்டாள்.ஆரம்பத்தில் இது ஒரு வித வியாதி என்றும் இது சுற்றுப்புற சூழலின் கேட்டால் உண்டாவது என்றும் அவள் எண்ணினாள்.இருள் நகரத்தில் சிலருக்கு உடல் பிளாஸ்டிக்காக மாறி வருவது பற்றிய செய்திகளை சஞ்சிகைகளில் வாசித்திருந்ததால் இது அவனுக்கு நேர்ந்து இருப்பதையும் ஒரு செய்தி போலவே கருதலானாள்.தன் உடல் ஈரப்பதமற்ற ஒரு பொருளாக இருப்பது கண்டு அவன் கொஞ்சமும் அச்சமோ துயரமோ வாதையோ அடையவில்லை.அவனுக்கு இது வசதியாக இருந்தது.ஆனால் எங்காவது மோதிக்கொண்டால் மோதிய இடம் வீரல் விழுவதை அவனால் சகித்து கொள்ள இயலவில்லை அன்று அப்படித்தான் இருட்டில் படிக்கட்டுக்களை ஏறி வாசல் என் நினைத்து சுவரில் மோதிக்கொண்டபோது நெற்றியில் வீறல் விழுந்து பார்ப்பதற்க்கு கொஞ்சம் கொஞ்சமாக அச்சமூட்டுவதாக மாறியது.அவள் தீக்குச்சியை உரசி அதன் சுடரால் நெற்றி வீரலை இணைக்கும் முயற்சியில் ஒரு நீண்ட சாய்கோட்டை தழும்பாக மாற்றி மேலும் அசிங்கப்படுத்தி விட்டாள்.பிளாஸ்டிக் முகத்தில் இன்னும் தசையோடு இருக்கும் இமைகளைப் பார்ப்பதற்க்கு அழகாக தொடுவதற்க்கு வண்ணத்துப் பூச்சியின் உடல் போல மிருதுவாக இருக்கிறதென்பாள்.அவள் அவனை பொம்மை என்று செல்லமாக அழைக்க ஆரம்பித்தாள்.ஒருநாள் புணர்ச்சிக்குப் பிறகு விரைத்த நிலையில் அவனது குறி கெட்டி தட்டிப்போய் உறைந்து விட்டது அன்று அவள் ஆற்றாமையில் புலம்பியதை எப்படி எழுதுவது.அவன் மெளனமாக தலை குனிந்தபடி இருந்தான்.அவள் தயங்கி தயங்கி வெளியேறியவள் பிறகு திரும்பி வரவே இல்லை.

சேகுவாரா மிக மெதுவாக ஆரம்பித்து பதட்டத்தோடு ஓவியங்களைப் பற்றி பேசுகிறான்.பெருவின் இன்காஸ் தொல்குடியின் ஓவியங்களிலிருந்து ஸ்பெயினின் சல்வதோர் தாலி வரைக்கும் பேசுகிறான்.அவனுடைய பேச்சு பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தும் பேருரை போல நீண்டு கொண்டே போகிறது.அவனது பேச்சிலிருந்து வெளிப்பட்ட தகவல்களால் நிறைந்த சிறைக்கூடத்தின் சுவர்களில் வீறல்கள் விழுந்து வண்ண வண்ணப் பாகு குழைவுகள் ஆங்காங்கே வழிந்து கொண்டிருக்கின்றன.சுவரில் இல்லாத கைகளின் ஓவியங்கள் அந்த நிறக்குழைவுகளால் அழிவதாக பொய்ப்பாவணை கொண்டு வான்கோ சேகுவாராவின் வாயைப் பொத்துகிறான்.
சேகுராவிற்க்கு மூச்சு இறைக்கிறது வான்கோ அவனைத் தன் மடியில் படுக்க வைத்து ஒரு பாடலை பாடுகிறான் தாலாட்டுப்போல இருக்கும் அப்பாடல் பெண்குரலால் ஒலிக்கிறது.மடியிலிருந்து தலையை தூக்கிச் சுற்றுமுற்றும் பார்க்கிறான்.அப்பெண்குரல் வான்கோவின் உதட்டசைவிலிருந்து வெளிப்படுவது கண்டு பரவசத்தோடு பார்க்கிறான்.வான்கோவின் முகத்தைத் தனது ஒரு கையால் ஏந்துகிறான்.அவனுடைய முரட்டுத்தனமான கைவிரல்கள் வான்கோவின் காதிழந்த காயத்தில் பட எரிச்சல் பட்ட வலியோடு அவன் ஆ..என்ற சப்தம் ஆண்குரலில் வெளிப்படுகிறது.ஆண்குரல் கண்டு சேகுவாரா கேலியோடு குறுநகைபுரிய வான்கோ கூச்சத்தோடு தன் முகத்தை மூடிக்கொள்கிறான்.மூடிய கைகளை இவன் விலக்கி அவனது உதடுகளில் முத்தமிடுகிறான்.

நீ கருத்த தசைவெளியாய் இருந்தாய்
உனக்குள் குமைந்து கொண்டிருந்த படைப்பு வெறி
வெளிப்படத் தவித்துக்கொண்டிருந்தது
உன் கணத்த முலைகளில்
பெருமூச்சுத் தணிவுகள்
ஒருக்களிப்படுத்துத் தூரமாய்
உன் பார்வையை நீளவிட்டாய்
உன் உடல் நீள்வெளியெங்கும்
நிரம்பிக்கிடந்தது தனிமை
எல்லாவற்றையும் உன்னால் மட்டுமே நிரப்பிக்கொண்ட
உனக்குள் தனிமை
உன் தொடைகளை
விரல்களால் வருடிக்கொண்டபடி
உன் நிதம்பத்தின் ரோமப்பரப்பைச் சீண்டிக் கொண்டாய்
மீண்டும் பெருமூச்சு எழுந்து
மண்டியிட்டு உன் உடலை மடித்துக் கொண்டாய்
விரிந்து பரவிய கூந்தலில் வெற்றிடங்கள் கலைந்தன
ஏதோவொன்றைக் கனவு கண்டுத் துடிக்கும்
உனது மெளனம்
தாபத்தில் சிலம்பும் உன் உதடுகள்
உன் கூந்தலை அள்ளி முடித்தபடி சுற்றிலும் பார்த்துக் கொண்டாய்
எல்லா இடமும் நீ

நான் தேடியலைவதுஎனது மிருக நினைவுகளை நான் இல்லாத சமயங்களில் எனது அறையில் ஒருபுலி படுத்திருப்பதாக ஒருமுறை கலவரத்தோடு எனது தோழி சொன்னாள்

வளர்மதியின் ரமேஷ்-ப்ரேம் குறித்தான நிலைப்பாடுகள் எனக்கு சலிப்பையே தந்தன.துப்பறியும் வடிவமே ஒழுங்கை சிதைக்க உதவுமென்றால் ஜெயமோகனின் நான்காவது கொலையை பின்நவீன பிரதியென்று சொல்லலாமா?
எம்.ஜி.சுரேஷ் மணிரத்னம் மற்றும் பாலசந்தரை பின்நவீனவாதிகளாக்கி அழகு பார்க்கிறார்.அவர் ஏன் எம்.ஜி ராமச்சந்திரனை மறந்தார் எனத் தெரியவில்லை.இதற்க்கு எதிர்வினையாக சுகுணாதிவாகர் சகிலா திரைப்படங்களில் பின்நவீன கூறுகளை கண்டறிந்தார் :) ஏதோ என்னால் முடிந்தது ரமேஷ்-ப்ரேமே

நூல் விவரம்
முதல் பதிப்பு:டிசம்பர்2001
வெளியீடு:காவ்யா
வாங்கிய கடை:எனி இந்தியன் - தி.நகர்
விலை : ரூ 125பக்கம்:311

8 comments:

ALIF AHAMED said...

இதுவும் நல்லாதான் இருக்கு கவிதைகளை விட !!!

குசும்பன் said...

நல்ல அருமையான தொகுப்பாக சொல்லி இருக்கிறீர்கள் அய்யனார், முன்பே இதை எல்லாம் எழுத வேண்டும் என்று போட்டு வைத்த திட்டமா அருமையாக இருக்கிறது!

இளங்கோ-டிசே said...

அய்யனார், ரமேஷ்-பிரேமைப்பற்றி எழுதாமல் இருந்திருந்தால்தான் இவருக்கு என்னவாயிற்றென யோசித்திருப்பேன் :-).
....
மூன்று வருடங்களுக்கு முன் இப்பிரதியை வாசித்திருந்தது.... அது எனது வாசிப்பின்/எழுத்தின் எல்லைகளை இன்னும் விசாலித்திருந்தது. அதேபோன்று இந்நூலிற்காய் பன்முகம்(?) இதழில் முருகேசபாண்டியன் எழுதிய நேர்த்தியான விமர்சனம் இந்நூலை இன்னும் நெருக்கமாய் அணுகிப் பார்க்க எனக்கு உதவி புரிந்திருந்தது.
.....
நேற்று, சற்று சோர்வான பொழுதில் வாசிக்கத்தொடங்கிய இப்பதிவின் முதலாவது பகுதி ஒரளவு ஆசுவாசத்தைத் தர அதன் நீட்சியில், ரமேஷ்-பிரேமின், 'இருபது கவிதைகளும் இரண்டாயிர்ம் ஆண்டுகளும்' கவிதைத் தொகுப்பை மீண்டுமொரு பின்னிரவில் வாசிக்கத்தொடங்கியிருந்தேன். அதற்கும் நன்றி :-).

Ayyanar Viswanath said...

நன்றி மின்னல் (உள்குத்து எதுவுமில்லையே ):)

இல்லை குசும்பரே இப்படி எழுத வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை ஆனால் இந்த நாவலின் சில பகுதிகளை தட்டச்சி வைத்திருந்தேன் அது இப்போது உபயோகம் :)

Ayyanar Viswanath said...

நன்றி டிசே

ரமேஷ் ப்ரேமின் ஆதியில் மாம்சம் இருந்தது எனும் நாடக தொகுப்பும் சமீபத்தில் வாங்கினேன் படித்து விட்டு சொல்லுகிறேன்.இப்போதைக்கு நகுலன் நாவல்கள்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

பின்னிரவு சுவர் கோழிகள் வலையில் சற்று அதிகம்தான் :))

கோபிநாத் said...

புத்தகத்தை படித்த ஒரு உணர்வு அய்ஸ்...நல்லா இருக்கு ;-)

கப்பி | Kappi said...

பதிவிற்கு நன்றி அய்யனார்!

Ayyanar Viswanath said...

தேங்க்ஸ் கோபி

நன்றி கப்பி

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...