Thursday, May 3, 2007

வனங்களில் அலையும் நீலிஅடர்ந்த மரங்களின் துணையோடு
படர்ந்திருக்கும் இருளின் மய்யத்தில்
நுரைததும்பி ஓடும் காட்டுச் சிற்றோடையின்
குறுகலான வளைவுகளில்
கூந்தலை ஆடையெனக் கொண்டு
நீந்திக் களிப்பாள்
கானக நீலி

மரங்களையும் பட்சிகளையும்
துயிலெழுப்பிபடி
பனித்திரை விலக்கி மேலெழும் ஆதவன்
சோம்பல் முறிக்கும் மர இலைகளின்
சிறு இடைவெளியில்
தன் சன்னக் கதிர்களை
நீலியின் பளிங்கு முதுகில் பாய்ச்சி
காமப்பசியாறுவான்

பட்சிகளின் ஒலிகளில் மெய்மீளும் நீலி
ஆதவனின் குறும்புகளில்
பொய்க்கோபம் கொண்டு
ஓடை விட்டகலுவாள்
அடர்நீளக் கூந்தலிலிருந்து
உதிரும் நீர்த்துளிகளை உறிஞ்சிக்குடித்து
நீலியின் நடைவழிகளெங்கும்
இலைதெரியாமல் பூத்திருக்கும்
காட்டுச் செடிகள்

பசியில் அலையும்
வனாந்திரக் குழந்தைகளின் பசிதீர
தன்னிரு முலைகளைக் கொண்டு பாலூட்டுகிறாள்
கன்னித்திரை கிழிந்திடாத
கானக நீலி

மூங்கில் மர அடர்வுகளில்
துயில் கொள்ளும் நீலியின்
விழியசைவுகளில்
உயிர்த்திருக்கிறது
இக்காடு

17 comments:

அபி அப்பா said...

அடங்கு அடங்கு:-)

அபி அப்பா said...

அடர் கானக புலியே அடங்கு மொவனே! தமிழ் பிளாக்ல வந்து என்ன மொழில பேசற:-))

லக்ஷ்மி said...

அருமையான கவிதை அய்யனார். ஜெயமோகன் ஒரு கதையில் பேச்சியாற்றை நீலியாக உருவகித்திருப்பார். அதுவும் அருமையாக இருக்கும்.

Jazeela said...

//மரங்களையும் பட்சிகளையும்
துயிலெழுப்பிபடி
பனித்திரை விலக்கி மேலெழும் ஆதவன்
சோம்பல் முறிக்கும் மர இலைகளின்
சிறு இடைவெளியில்
தன் சன்னக் கதிர்களை
நீலியின் பளிங்கு முதுகில் பாய்ச்சி
காமப்பசியாறுவான்// அழகான கற்பனை.

//தன்னிரு முலைகளைக் கொண்டு பாலூட்டுகிறாள்
கன்னித்திரை கிழிந்திடாத
கானக நீலி // தவறான பொருந்தாத தர்க்கம். ;-)

Ayyanar Viswanath said...

அபிஅப்பா
கர்ர்ர்புர்ர்ர்

Ayyanar Viswanath said...

லக்ஷ்மி
நன்றிங்க..ஆஹா இந்த கவிதையோட பின்புலம் காடு நாவல் தான்..அந்த நாவல் படிச்சிட்டு கொஞ்ச நாள் நீலியோட சுத்திட்டு திரிஞ்சேன் நேத்தும் நீலியோட ஞாபகங்கள் அதிகரிக்கவே இத எழுதிட்டேன்..

Ayyanar Viswanath said...

வழக்கம்போல் நன்றிகள் ஜெஸிலா :)

இது தர்க்கம் லாம் இல்லிங்க எல்லாத்தையும் மிகைப்படுத்தி பார்க்குற யதார்த்தம் மீறிய சுகமான கற்பனை

கதிர் said...

குட்டியை வாயில் கவ்விச்செல்லும் புலியின் மென்மையோடு இல்லாமல்
அடர்கானகபுலியின் உறுமல்கள்
சற்று மிகைப்படுத்தி தெரிவதாக கிடேசன் பார்க் வட்டாரங்கள் தெரிவித்தன.

மீண்டும் குமுறல்கள், உறுமல்கள் தொடருமானால் காட்டுப்புலி வீட்டுப்புளியாக்கப்படும் என்பதை கோபியின் சார்பில் தெரிவிக்கிறோம்.

தமிழ்நதி said...

கவிதைக்குத் தேர்ந்தெடுத்த படம் பொருத்தமாக நன்றாக இருக்கிறது. என்ன அய்யனார்! கொஞ்ச நாட்களாகவே காடு,புலி,நீலி என்று அலைகிறீர்கள். அய்யனாராக இருப்பதில் சலிப்பு ஏற்பட்டு சித்தராகப் போகிறீர்களோ :)

கண்மணி/kanmani said...

//பசியில் அலையும்
வனாந்திரக் குழந்தைகளின் பசிதீர
தன்னிரு முலைகளைக் கொண்டு பாலூட்டுகிறாள்
கன்னித்திரை கிழிந்திடாத
கானக நீலி//

அய்யனார் கன்னித் தாயான ஒரு பெண்ணின் கருணை அருமை.
அபிஅப்பா,தம்பி,கோபி போன்ற கவிதை புரியாதவர்களின்[கும்மிகள்] புலம்பல்களை ஒதுக்குங்கள்.எங்கே அபி அப்பாவை அபி பாப்பா பிறந்த நாளுக்கு ஒரு கவிதை எழுதச் சொல்லுங்கள்

கண்மணி/kanmani said...

படம் அருமையிலும் அருமை.எங்கே பிடித்தீர்கள்

தென்றல் said...

ம்ம்ம்.. நீங்களும், தமிழ்நதியும் ஒரு முடிவோடதான் எழுதுறீங்க...!

Ayyanar Viswanath said...

தம்பி..கோபி..கர்ர்புர்ர்ர்

தமிழ்நதி


/சித்தராகப் போகிறீர்களோ :)/

ஆமாம் தமிழ் ..சரியா சொன்னிங்க

Ayyanar Viswanath said...

கண்மணி

நல்லா சொன்னிங்க..உங்களுக்கு கவிதை புரிஞ்சதில சந்தோசம்..

போட்டோ கூகுல் ஆண்டவர் துணையில கிடைத்தது

Ayyanar Viswanath said...

தென்றல்
முடிவெல்லாம் இல்லிங்க ..ஆரம்பம்தான்
நன்றி

காட்டாறு said...

இரசித்தேன்; மெய்மறந்தேன்.

//அடர்நீளக் கூந்தலிலிருந்து
உதிரும் நீர்த்துளிகளை உறிஞ்சிக்குடித்து
நீலியின் நடைவழிகளெங்கும்
இலைதெரியாமல் பூத்திருக்கும்
காட்டுச் செடிகள்//
இது மாதிரி எங்கேயோ படித்திருக்கிறேன். இல்லை இல்லை எழுதியிருக்கிறேன்.

Ayyanar Viswanath said...

காட்டாறு

/இல்லை இல்லை எழுதியிருக்கிறேன்/

நாம நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்த எழுத்துக்கள் எதன் மூலம் இவரை சென்றடைந்தது ன்னு ரொம்ப ஆச்சரியங்களோடு சில கவிதைகளை படிச்சிருக்கேன்..

அதுபோன்ற அனுபவம் என்னாலும் கொடுக்கமுடிந்தததை நினைத்து மகிழ்ச்சியும் நன்றியும்

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...