Wednesday, April 11, 2007

உம்பர்டோ டி (1952) - இருப்பின் அவஸ்தை


உம்பர்டோ டாமினிகோ ஃபெராரி என்ற வயோதிகனின் இருப்பு குறித்த அவஸ்தைகளை இந்தத் திரைப்படம் பதிவிக்கிறது. விட்டோரியா டெசிகா இயக்கி 1952 ல் வெளிவந்த இப்புகழ் வாய்ந்த திரைப்படம் இத்தாலிய நியோ ரியலிச சினிமா வரிசையின் கடைசிப் படம்.இத்தாலிய நியோ ரியலிச சினிமா 1943 ல் வெளிவந்த Ossessione என்ற படத்தில் இருந்து துவங்குகிறது. ராபர்டோ ரோசோலினி என்ற இயக்குனரின் திரைப்படங்கள் மூலம் கவனிக்கப்பட்டு விட்டோரியா டெசிகா வின் மூலம் புகழ் பெற்றது. என்னைப் போன்ற சாமான்யன் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இன்னும் இந்த இசம் பற்றி பேசும் அளவிற்க்கு தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நியோ ரியலிச திரைப்படங்கள்.

நியோ ரியலிசம் என்பது விளிம்பு நிலை மக்களின் வலிகளை பதிவு செய்ய முனைந்த ஒரு திரைப்பட இயக்கம். திரைப்படம் ஒரு சக்தி வாய்ந்த ஊடகம் என்பதால் இந்த இயக்கம் நேரடியாக அதிக அளவில் சென்றடைந்தது.இத்தாலியில் தோன்றிய ஒரு சினிமா இயக்கம் என்றும் சொல்லலாம். இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் இத்தாலியின் சாமான்ய மக்களுக்கு ஏற்பட்ட வாழ்க்கை நெருக்கடியை பிரதிபலிக்க ஒரு ஊடகம் தேவையாக இருந்தது. யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படங்களின் தேவை இருந்தது. அப்போதைய திரைப்படங்கள் பெரும்பாலும் வாழ்க்கையை மீறியதாக கற்பனை உலகின் பிரதிநிதிகளாகவே இருந்தன. நியோ ரியலிச திரைப்படங்கள் இந்த கட்டமைப்பை உடைத்தது. பெரும்பாலும் தொழில்முறை கலைஞர்கள் அல்லாதோர்களையே பயன்படுத்தி சாதாரண தன்மையை வெகு எளிதில் பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதே இவ்வகை திரைப்படங்களின் நோக்கமாக இருந்தது . 1952 ல் வெளிவந்த உம்பர்டோ டி என்ற இந்தத் திரைப்படத்தோடு இறந்ததாகக் கருதப்படும் இவ்வியக்கம் பிரதிபலித்ததெல்லாம் இத்தாலியர்களின் கலப்படமில்லாத வாழ்வியலை. சமுகத்தின் அவலத்தை மற்றும் அதன் உண்மை நிலையை.

இனி படத்திற்க்கு வருவோம். ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டி போராட்டம் நடத்த விழையும் சில திராணியற்ற முதியவர்களை காவலர்கள் விரட்டி அடிக்கும் துயரத்தோடு துவங்குகிறது படம்.தனக்கென்று ஒரு நாய்குட்டி,வெகுசொற்பமான ஓய்வூதியம் மற்றும் இருப்பிடம் என சொல்லிக்கொள்ள ஒரு அறையையும் தவிர்த்து வேறெதுவுமில்லாத உம்பர்டோ எனும் வயோதிகன் தன் இருப்பிடத்தை தக்க வைத்துக் கொள்ள நேரிடும் துயரங்களை,வலிகளை வலிகளாகவே பதிவித்திருக்கிறார் டெசிகா.தன் அறையின் வாடகையயை செலுத்த முடியாது வீட்டின் உரிமையாளரால் விரட்டி அடிக்கப்படுகிறார் வேறெங்கும் சென்று வசிக்க இயலாத உம்பர்டோ தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார்.ஆனால் அவர் நேசிக்கும் நாய்குட்டியை நிதாரவாய் விட்டுசெல்ல விரும்பாமல் அதை பாதுகாப்பான ஒரு இடத்தில் ஒப்படைக்க முயல்கிறார்.அதற்க்காக தன் கைவசம் இருக்கும் பணம் சில நல்ல உடைகள் எல்லாம் கொடுக்க முன்வந்தும் சரியான இடத்தில் ஒப்படைக்க இயலாத உம்பர்டோ நாய்குட்டியுடன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்.ரயிலை நெருங்கி செல்லும்போது ரயிலின் சத்ததில் பயந்த நாய் அவரது பிடியில் இருந்து தப்பித்து ஓடுகிறது.நாயை விடுப்பிரிய முடியாது தற்கொலை முடிவை கைவிடுகிறார்.நாம் உயிருடன் இருக்க ஒரு சிறு உயிரின் அன்பு மட்டுமே போதுமானதகி விடுகிறது.

சாமான்யத்தின் வலிகளை செவிட்டில் அறைவது போல சொல்லியிருக்கிறார்கள்.உம்பர்டோவிற்க்கு தான் தங்கியிருக்கும் அறை உரிமையாளரின் வேலைக்கார பெண்ணின் மேல் தனி வாஞ்சை அந்த நாய்குட்டியை தவிர அவரை நேசிக்கும் இன்னொரு உயிர்.இருவருக்கும் நடக்கும் உரையாடல்

பணிப்பெண் : கவனித்தார்களா என் வயிற்றை நான் கர்ப்பமாய் இருக்கிறேன்
உம்பர்டோ : என்ன?
பணிப்பெண் : ஆம் உறுதியாகத்தான் சொல்லுகிறேன் மூன்று மாதம்.
பின்பு உம்பர்டோ தன் அறைக்கு திரும்புகிறார்.பின்தொடர்ந்து வரும் அப்பெண் சன்னலில் இருந்து கீழே எட்டிப்பார்க்கிறாள் வேலை முடிந்து தொழிலாளர்கள் வெளிவந்து கொண்டிருக்கிறார்கள்.உம்பர்டோ வை அருகே வருமாரு அழைக்கிறாள்.
பணிப்பெண் : இங்கே பாருங்கள்..உயரமாக இருக்கிறானே இவன் நேபலை சார்ந்தவன்.கொஞ்சம் குட்டையாக இருப்பவன் வேறொரு நகரத்திலிருந்து வந்தவன்.
உம்பர்டோ : இதில் யார் உன்னுடையவன்?
பணிப்பெண் : இருவரும்தான்
உம்பர்டோ : என்ன.. உன் குழந்தைக்கு தந்தை யார்?
பணிப்பெண் : எனக்கு சரியாய் சொல்லத் தெரியவில்லை.ஆனால் இருவருமே மறுக்கிறார்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு காட்சியும் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது.வீட்டு வாடகை செலுத்த ஒரு பிச்சைக்காரனிடம் தன் வாட்சை விற்பது.கைவசம் இருக்கும் போர்வை,புத்தகங்கள் என எல்லாம் விற்றும் அத்தொகையை ஈட்ட முடியாமல் போய் பிச்சை எடுக்க துணிவதும் பின் தவிர்ப்பதுமாய் உம்பர்டோ எனும் பாத்திரம் ஏற்படுத்தும் துயரம் இரண்டு நாட்களுக்கு நம்மை மீளவிடாமல் அதன் பிடியில் வைத்திருக்கிறது.சாமான்யர்களின் வலிகளை முன்நிறுத்தும் எந்த ஒரு இயக்கமும் சந்திக்கும் தோல்விகளை இந்த நியோ ரியலிச இயக்கம் சந்தித்திருந்தாலும் இதன் வெற்றி சாமான்யர்களின் வெற்றியாகவே கருதப்பட்டது.

4 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அய்யனார்,

படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் மனதில் நிற்கும்படி அமைக்கப்பட்டிருந்தார்கள் இல்லையா. படத்தைப்பற்றி இன்னமும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமென்று நினைக்கிறேன்..

உம்பர்த்தோ-வாக நடித்தவர் திரைப்படங்களில் அதுவரை நடிக்காதவர் என்பதும் குறிப்பிடத்தக்க விசயம்.

நிறைய எழுதணும்போலருக்கு. பிறகு பாப்பம். தூக்கக்கலக்கம்... :)

-மதி

Gurusamy Thangavel said...

அய்யனார், சிகாவின் இன்னொரு படமான 'பை சைக்கீள் தீவ்ஸ்' பார்த்திருக்கிறேன். எனக்கு மிக மிக மி......கப் பிடித்த படம்.

Ayyanar Viswanath said...

மதி
நள்ளிரவுல வந்ததுக்கு நன்றி :)
விரிவா எழுத முடியாமைக்கு சோம்பலும் ஒரு காரணம் மதி அத்தோட உரைநடை இன்னும் கைவசமாகல..

தங்கவேல்
/எனக்கு மிக மிக மி......கப் பிடித்த படம்./

எனக்கும் :)
'கோ' ன்னு கதற வச்ச படம் அது எல்லா நியோரியலிச படங்களும் இந்த மாதிரிதான் இருக்கும்

காயத்ரி சித்தார்த் said...

//நாம் உயிருடன் இருக்க ஒரு சிறு உயிரின் அன்பு மட்டுமே போதுமானதகி விடுகிறது.
//

ம்ம்ம்.. உண்மை. உங்கள் எழுத்து சொல்ல முடியாத தவிப்பையும் அதே நேரம் சலனமற்ற நிறைவையும் ஒன்றாய் தருகிறது அய்யனார். உலக படங்கள் நிறைய்ய பார்க்கும் ஆவல் வருகிறது முதல்முறையாய்.

Featured Post

கோவேறு கழுதைகள்

இமையத்தின் கோவேறு கழுதைகள் நாவலை   நேற்றும் இன்றுமாக வாசித்து முடித்தேன். இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட புதினம் இ ப்போது வாசி...